சாங்கி விமான நிலையத்தின் நான்கு முனையங்களிலும் கடப்பிதழ் தேவைப்படாத தானியக்கக் குடிநுழைவு முறை கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் முழுமையாக செயல்படுத்தப்பட்டிருப்பதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 24) தெரிவித்தது.
கடப்பிதழின்றி முக, கண் அங்க அடையாளங்களைக் கொண்டு சராசரியாக பத்தே வினாடிகளில் சோதனைச்சாவடிகளைக் கடக்க முடிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர் சோதனைச்சாவடிகளைக் கடக்கத் தொடர்ந்து கடப்பிதழ்களைப் பயன்படுத்தவேண்டும். ஆனால், அவர்களும் சிங்கப்பூரிலிருந்து புறப்படும்போது கடப்பிதழ் தேவைப்படாத தானியக்க முறையைக் கொண்டு சோதனைச்சாவடிகளைக் கடக்கலாம்.
இந்த முறை செயல்படுத்தப்படுவதற்கு முன்பு சோதனைச்சாவடிகளைக் கடக்க ஒருவருக்கு சராசரியாக 25 வினாடிகள் தேவைப்பட்டதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் குறிப்பிட்டது.
கூடுதல் உதவி தேவைப்படுவோருக்கான தடங்களின்வழி (Special Assistance Lanes) சோதனைச்சாவடிகளைக் கடப்போரும் தொடர்ந்து கடப்பிதழ்களைப் பயன்படுத்தவேண்டும். பிள்ளைகள், குழந்தைகளுடன் பயணம் செய்வோர் உள்ளிட்டோருக்கு இது பொருந்தும்.
எல்லா பயணிகளும் சிங்கப்பூர் வந்தடைவதற்கு முன்பு வரும் மூன்று நாள்களுக்குள் எஸ்ஜி வருகையாளர் அட்டையைச் (SG Arrival Card) சமர்ப்பிக்கவேண்டும்.
இம்மாதம் 15ஆம் தேதி நிலவரப்படி 1.5 மில்லியன் பயணிகள் கடப்பிதழின்றி சோதனைச்சாவடிகளைக் கடந்திருக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இம்முறை சோதனைக் கட்டத்தில் இருந்தபோது சோதனைச்சாவடிகளைக் கடந்தோரும் அவர்களில் அடங்குவர்.
உலகில் கடப்பிதழின்றி சோதனைச்சாவடிகளைக் கடக்கும் முறையை இவ்வளவு பெரிய அளவில் நடைமுறைப்படுத்தியுள்ள முதல் நாடு என்ற பெருமை சிங்கப்பூரைச் சேரும். கடப்பிதழின்றி சோதனைச்சாவடிகளைக் கடக்கும் முறை தங்களைப் பெரிதும் கவர்ந்ததாக வியாழக்கிழமையன்று பயணிகள் சிலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.