பைனியர் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் என்டியுசி உதவித் தலைமைச் செயலாளருமான பேட்ரிக் டே, அத்தொகுதியில் மீண்டும் மக்கள் செயல் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.
மக்கள் செயல் கட்சியின் வெஸ்ட் கோஸ்ட் கிளை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் இத்தகவல் வெளியானது.
2020 முதல் பைனியர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் வெஸ்ட் கோஸ்ட் நகர மன்றத் தலைவராகவும் இருந்துவரும் திரு டே, தம் இடத்தைத் தக்கவைப்பாரா என்பது வரும் பொதுத் தேர்தலில் தெரிந்துவிடும்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து பேசிய அவர், குடியிருப்பாளர்களுடன் ஒருசேர அடுத்த ஐந்து ஆண்டுகள் பயணிக்கவும் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறினார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியும் இத்தொகுதியில் போட்டியிடும் திட்டங்களை அறிவித்துள்ளது. எனினும், அக்கட்சி அதன் வேட்பாளரை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்வுக்குப் பிறகும், தொடர்ந்து மாறாமல் இருக்கும் ஒன்பது தொகுதிகளில் பைனியரும் ஒன்று. 2020 பொதுத் தேர்தலில் அங்கு மும்முனைப் போட்டி நிலவியபோதிலும், ஆளும் மக்கள் செயல் கட்சியின் கோட்டையாக பைனியர் கருதப்படுகிறது .
இந்த ஆண்டு நிலவரப்படி, இத்தொகுதியில் 25,166 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.