தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

37,000 பொதுச் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: சுகாதார அமைச்சர்

2 mins read
f7a612cf-9971-48d0-a0c0-a565a7f92462
சீனப் புத்தாண்டு முதல்நாளான ஜனவரி 29 புதன்கிழமையன்று சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று, அதன் ஊழியர்களைச் சந்தித்தார் சுகாதார அமைச்சர் ஓங் யி காங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

பொதுச் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் 37,000 பேர் இவ்வாண்டில் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்.

சுகாதாரப் பராமரிப்புத் துணை வல்லுநர்கள், மருந்தாளுநர்கள், நிர்வாக, துணை மருத்துவச் சேவைப் பணியாளர்கள் ஆகியோருக்கு இவ்வாண்டு நடுப்பகுதியிலிருந்து ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் புதன்கிழமையன்று (ஜனவரி 29) அறிவித்துள்ளார். சிங்கப்பூர் பொது மருத்துவமனை, ஊட்ரம் சமூக மருத்துவமனை ஆகியவற்றுக்கு நேரில் சென்றபோது திரு ஓங் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஊதிய உயர்வு தொடர்பில் மற்ற அமைச்சுகளுடனும் தொழிற்சங்கங்களுடனும் கலந்துபேசி வருவதாக அமைச்சர் ஓங் தெரிவித்துள்ளார்.

“புத்தாண்டில் நல்ல உடல்நலம், மகிழ்ச்சி, ஊதிய உயர்வு, போனஸ் எனப் பல்வேறு நம்பிக்கைகளையும் மக்கள் கொண்டிருப்பர்,” என்று திரு ஓங் கூறினார்.

மக்கள்தொகை மூப்படைந்துவரும் நிலையில், சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள், மனிதவளத் துறைகளுக்கான ஊழியர் தேவையும் தொடர்ந்து அதிகரிக்கும் என்றார் அவர். சிங்கப்பூர் பொது மருத்துவமனை, ஊட்ரம் சமூக மருத்துவமனை ஊழியர்களுடன் அவர் சீனப் புத்தாண்டன்று கொண்டாடப்படும் ‘லோஹெய்’ உணவுச் சடங்கிலும் கலந்துகொண்டார்.

சுகாதாரப் பராமரிப்புத் துணை வல்லுநர்கள், மருந்தாளுநர்கள், நிர்வாக, துணை மருத்துவச் சேவைப் பணியாளர்கள் ஆகியோரின் ஊதியம் 2021ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது.

பொது சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் அத்துறைக்கு மேலும் பலரை ஈர்க்கவும் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் தாதியர் 26,000 பேரின் அடிப்படை ஊதியமும் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப சரிக்கட்டப்பட்டு, சற்றே உயர்த்தப்படும் என்று அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், சரியான நேரத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அமைச்சின் அறிவிப்புகளை வரவேற்றுள்ளார் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் ஊழியர் சங்கத்தின் தலைவரும் என்டியுசி தலைவருமான கே. தனலட்சுமி.

முன்னதாக, பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பணியாற்றுவோரை நீண்டகாலத்திற்குத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் கடந்த 2024 செப்டம்பரில் ‘தாதியருக்கான கருணை, உன்னதம், பற்றுறுதி விருது’ (ஏஞ்சல்) அறிமுகப்படுத்தப்பட்டது.

அத்திட்டத்தின்கீழ், ஏறக்குறைய 29,000 தாதியர் 20 ஆண்டுக்காலத்தில் $100,000 வரை வழங்குதொகை பெறுவர்.

ஊதிய உயர்வு வழங்குவதோடு நின்றுவிடாது, மனிதவள மேம்பாட்டு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்வதும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியரணியை வலுப்படுத்துவதும் தொடரும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்