கடைகளில் வணிகத்தைப் பெருக்கிய ‘பேலா’ சலுகை

கடைகளில் வணிகத்தைப் பெருக்கிய ‘பேலா’ சலுகை

2 mins read
b62997a6-4ca5-4707-998f-5f835c68f372
அதிகபட்சம் $3 வரை ரொக்கம் திரும்பப் பெறும் (கேஷ் பேக்) சலுகை டிசம்பர் 31 வரை நடப்பில் இருக்கும். - படம்: டிபிஎஸ்

பிஓஎஸ்பி வங்கி அறிமுகம் செய்த சலுகை ஒன்றின் காரணமாக குடியிருப்பு வட்டாரக் கடைகளின் வர்த்தகம் பெருகி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வங்கியின் ‘டிபிஎஸ் பேலா’ கைப்பேசிச் செயலியைப் பயன்படுத்தி சனிக்கிழமைகளில் பொருள்களை வாங்கும்போது $3 வரை ரொக்கம் திரும்பப் பெறலாம் என்பது அந்தச் சலுகை.

அந்த அறிவிப்பு வெளியான பின்னர், ஆகஸ்ட் 1 முதல் 22,000க்கும் மேற்பட்ட கடைகள், ஈரச்சந்தைகள் மற்றும் உணவங்காடி நிலையக் கடைகளில் அந்தச் செயலியை சனிக்கிழமைகளில் பயன்படுத்தி பொருள்களை வாங்கிய முதல் 75,000 பேர் அதன் மூலம் பயனடைந்து உள்ளனர்.

அதிகபட்சம் $3 வரை ரொக்கம் திரும்பப் பெறும் (கேஷ் பேக்) சலுகை டிசம்பர் 31 வரை நடப்பில் இருக்கும்.

டிபிஎஸ் குழுமத்தின் ஓர் அங்கமான பிஓஎஸ்பி வங்கி புதிதாகத் தொடங்கிய ‘நமது குடியிருப்பு வட்டாரங்களை ஆதரிப்போம்’ என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விலைச் சலுகை இடம்பெறுகிறது.

திட்டத்தில் பங்கேற்றுள்ள கடைகளில் வைக்கப்படும் எஸ்ஜிகியூஆர் குறியீட்டை வருடி பணம் செலுத்த வேண்டும்.

சலுகைகள் மூலம் குடியிருப்பாளர்களும் கடைக்காரர்களும் இதுவரை அடைந்த பலன்களை டிபிஎஸ் வங்கி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) விளக்கியது. இந்தச் சலுகைத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள எல்லாக் கடைகளிலும் வாரயிறுதிகளில் ஏறக்குறைய 40 விழுக்காடு வருவாய் அதிகரித்ததாக அது தெரிவித்தது.

அத்துடன், இதுவரை ஒரு மில்லியன் கேஷ்பேக் சலுகைகளைக் குடியிருப்பாளர்கள் பெற்றுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

இந்தச் சலுகை மூலம் ஈரச்சந்தைகளில் கடை நடத்துவோர் பெரிதும் பலனடைந்து உள்ளதாக டிபிஎஸ் தெரிவித்து உள்ளது.

அந்தக் கடைகளில் பேலா செயலி மூலம் பொருள்களை வாங்குவோரின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதுடன் கடைகளில் வர்த்தகம் இருமடங்கு கூடியதாகவும் அது தெரிவித்து உள்ளது.

கேஷ்பேக் சலுகை அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட நகரங்களின் பட்டியலில் சிராங்கூன், ஹவ்காங், செங்காங், பொங்கோல், ஜூரோங், குவீன்ஸ்டவுன் மற்றும் தியோங் பாரு இடம்பிடித்து உள்ளன.

ஆண்டிறுதிக்குள் குடியிருப்பு வட்டாரக் கடைகளிலும் ஷெங் சியோங் பேரங்காடிகளிலும் 2 மில்லியனுக்கும் அதிகமான கேஷ்பேக் மற்றும் விலைக்கழிவுகளை வழங்க டிபிஎஸ் திட்டமிட்டுள்ளது.

தோ பாயோ மேற்குச் சந்தை மற்றும் உணவு நிலையத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வு ஒன்றில் டிபிஎஸ் வங்கி இந்த விவரங்களைத் தெரிவித்தது. மின்னிலக்கத்தைக் கற்றுக்கொள்ளவும் மோசடிகளைத் தவிர்க்கவும் குடியிருப்பாளர்களுக்கு பல்வேறு நடவடிக்கைகள் அந்த நிகழ்வில் இடம்பெற்றன.

புது வடிவம் பெற்ற சலுகை

இதற்கு முன்னர் நடப்பில் இருந்த ‘டிபிஎஸ் 5 மில்லியன் உணவங்காடிச் சாப்பாடு’ திட்டத்தின் விரிவாக்கமே புதிய ‘கேஷ் பேக்’ சலுகை.

2023 பிப்ரவரி முதல் 2024 ஜூலை 26 வரை நடப்பில் இருந்த அந்தத் திட்டத்தின்கீழ் 11,600க்கும் மேற்பட்ட உணவங்காடி நிலையங்களில் டிபிஎஸ் பேலா செயலியைப் பயன்படுத்தி சாப்பாடு வாங்கியோருக்கு $3 வரை கழிவு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 100,000 பேர் வரை அந்த விலைக் கழிவைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அந்தத் திட்டத்தின்கீழ் எட்டு மில்லியன் சாப்பாடுகளுக்கு மானியம் வழங்கியதாக பிஓஎஸ்பி ஏற்கெனவே தெரிவித்து இருந்தது.

குறிப்புச் சொற்கள்