தொலைத்தொடர்பு, மின்சாரம், சுகாதாரப் பராமரிப்புக் கட்டணங்கள் மட்டுமன்றி, வீட்டுக் கடன்களையும் அபராதங்களையும் இனி பயனீட்டாளர்களின் சார்பில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மென்பொருள் செயலிகள் செலுத்தக்கூடும்.
சிங்கப்பூரில் அந்த மின்கட்டணச் சேவை முறையை நடைமுறைப்படுத்த, உலக அளவில் இயங்கும் கட்டண நிறுவனங்களான ‘மாஸ்டர்கார்டு’, ‘விசா’ ஆகியவை ‘ஏஎக்ஸ்எஸ்’ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
குறைந்தபட்ச மனித மேற்பார்வையுடன் செயல்படக்கூடிய ஏஐ மென்பொருள் செயலிகளை, ‘ஏஎக்ஸ்எஸ்’ நிறுவனத்தின் கட்டணக் கட்டமைப்புடன் இணைப்பதே திட்டம்.
‘ஏஎக்ஸ்எஸ்’ நிறுவனத்தின் கட்டணக் கட்டமைப்பில் 800க்கும் மேற்பட்ட கட்டண நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் மருத்துவமனைகள், மின்சார நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகள் உள்ளிட்டவை அடங்கும்.
பயனீட்டாளர்களுக்கான தனது ஏஐ கட்டணச் சேவை எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதைக் குறிப்பிட ‘ஏஎக்ஸ்எஸ்’ நிறுவனம் மறுத்துவிட்டது. அதோடு, கிராப் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு உதவிச் சேவை மூலம் கட்டணங்களைச் செலுத்தும் சோதனை முயற்சியையும் அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
“எங்களது பங்காளிகள் தங்களின் சொந்தச் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் செயலிகளை ‘ஏஎக்ஸ்எஸ்’ நிறுவனத்தின் கட்டணக் கட்டமைப்புடன் இணைக்க வழிவகுப்பதன் மூலம், தற்போதைய வழிகளையும் தாண்டி நாங்கள் பயனீட்டாளர்களைச் சென்றடைய முடியும்.
“அதே வேளையில், பங்காளிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்குப் புதிய கட்டண அனுபவங்களை உருவாக்கவும் இது உதவும்,” என்று ‘ஏஎக்ஸ்எஸ்’ குழுமத்தின் தலைமை நிர்வாகியும் நிர்வாக இயக்குநருமான ஜெஃப்ரி கோ புதன்கிழமை (நவம்பர் 18) தெரிவித்தார்.
‘மாஸ்டர்கார்டு’, ‘விசா’ ஆகிய நிறுவனங்களின் தற்போதைய அட்டைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அந்தச் செயற்கை நுண்ணறிவுக் கட்டணங்களுக்குப் பொருந்தும். அத்துடன், பயனீட்டாளர்கள் கட்டண வரம்புகளை நிர்ணயித்தல், அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனைகளைக் குறிப்பிடுதல், பரிவர்த்தனைக்கு முன்னர் பயனரின் ஒப்புதலைப் பெறுதல் போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
‘ஏஎக்ஸ்எஸ்’ நிறுவனத்தின் புதிய சேவை மூலம், நிலுவையிலுள்ள கட்டணங்களைத் தனித்தனியாகச் சரிபார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், கட்டணங்களைச் செலுத்துவதற்காகப் பல செயலிகளில் உள்நுழைந்து, ‘ஓடிபி’ எனப்படும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களை உள்ளிட வேண்டிய தேவையும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
