நிறுவனங்கள் கடனைச் செலுத்தும் முறையில் முன்னேற்றம்

2 mins read
தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக மேம்பட்டுள்ளது
49c51adf-03e8-4830-ac4c-0e098baf7375
மெதுவாகக் கடனைச் செலுத்தும் போக்கு காலாண்டு அடிப்படையில் 0.07 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்து 44 விழுக்காடாகப் பதிவானது. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூர் நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் போக்கு, தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக மேம்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வர்த்தகக் கடன் நிறுவனம் (எஸ்சிசிபி) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சேவைத் துறையில் கடனை மெதுவாகச் செலுத்தும் போக்கு மிகவும் குறைந்துள்ளதாக அது திங்கட்கிழமை (அக்டோபர் 7) தெரிவித்தது.

சரியான நேரத்தில் செலுத்தப்பட்டவை, காலம் தாழ்த்திச் செலுத்தப்பட்டவை இரண்டுமே கடனைச் செலுத்தும் மொத்தப் பரிவர்த்தனைகளில் ஐந்தில்-இரண்டு பங்கிற்குமேல் பதிவானதாக அது கூறியது.

மூன்றாம் காலாண்டில், சரியான நேரத்தில் செலுத்தப்பட்ட கடன்கள் விகிதம் 0.09 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகரித்து 41.2 விழுக்காடாகப் பதிவானது. இரண்டாம் காலாண்டில் அது 41.11 விழுக்காடாக இருந்தது.

காலாண்டு அடிப்படையில், மெதுவாகச் செலுத்தப்பட்ட கடன்களின் விகிதம் 0.07 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்து 44 விழுக்காடானது.

கடனில் ஒரு பகுதியை மட்டும் செலுத்தும் போக்கு சிறிது குறைந்ததாகக் கூறப்பட்டது. மூன்றாம் காலாண்டில் அது 0.02 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்து 14.8 விழுக்காடாகப் பதிவானது. இருப்பினும், ஆண்டு அடிப்படையில் அது 0.01 விழுக்காடு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வு செய்யப்பட்ட ஐந்து துறைகளில் மூன்றில் இவ்வாறு மெதுவாகக் கடனைச் செலுத்தும் போக்கு குறைந்துள்ளது. சில்லறை விற்பனை, சேவைத் துறை, மொத்த விற்பனை ஆகியவை அவை.

ஆண்டு அடிப்படையில் கட்டுமான, சில்லறை விற்பனை, மொத்த விற்பனை, சேவை ஆகிய துறைகளில் கடனை மெதுவாகச் செலுத்தும் போக்கு குறைந்ததால் முன்னேற்றம் பதிவாகியுள்ளது.

சேவைத் துறை மட்டும் தொடர்ந்து ஆறாவது காலாண்டாக மேம்பட்டுள்ளது. இத்துறையில் மூன்றாம் காலாண்டில், மெதுவாகக் கடனைச் செலுத்தும் போக்கு 0.23 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந்தது 42.35 விழுக்காடாகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்