வரும் சனிக்கிழமை (ஜூன் 6) முதல் பேநவ் மூலம் பணம் அனுப்புவோர் அல்லது பெற்றுக்கொள்வோர் தங்களுக்குப் பிடித்த மாற்றுப் பெயரைக் கொண்டு அடையாளப்படுத்திக்கொள்ளவோ அதுபோல பிறரின் மாற்றுப் பெயர்களைப் பார்க்கவோ முடியாது.
இந்த விதிமுறை மாற்றம் பொதுமக்களிடையே மாறுபட்ட கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நடவடிக்கை, ஆள்மாறாட்ட மோசடிகளிலிருந்து தங்களைப் பாதுகாக்கிறது என்பது சிலரின் கருத்து.
தொழிலுக்காக பேநவ் பயன்படுத்துவோருக்குக் கவலை
அதேவேளை, வாடிக்கையாளர்களிடம் மாற்றுப் பெயர்களால் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவேண்டிய நிலையில் இருப்போர் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக நீக்குப்போக்கான ஏற்பாடுகளுடன் ஒப்பந்தமின்றி வேலை செய்வோர் (freelancers), சொந்தத் தொழில் செய்பவர்கள் ஆகியோருக்கு இது பொருந்தும். புதிய விதிமுறைகள் வாடிக்கையாளர்களைக் குழப்பக்கூடும் என்பது அவர்களின் கவலை.
30 விழுக்காட்டு பேநவ் பயனர்கள் மாற்றுப் பெயர்களைக் கொண்டு தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் சனிக்கிழமையிலிருந்து பேநவ்வில் அந்தப் பெயரைப் பயன்படுத்த முடியாது.
அதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் பதிவுசெய்யப்பட்ட பெயரின் பாதி காண்பிக்கப்படும். அந்தப் பெயரின் சில எழுத்துகளுக்குப் பதிலாக X என்று காண்பிக்கப்படும்.
மாற்றுப் பெயரைப் பெயன்படுத்தாத எஞ்சிய 70 விழுக்காட்டினரின் பெயர்களில் பாதி மறைக்கப்பட்டிருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
எடுத்துக்காட்டாக Chan Shi Hui Jacqueline என்ற பெயர் ChXX ShX HuX JacquXXXXXஆகக் காண்பிக்கப்படும். பெயரில் எந்த எழுத்துகளை மறைக்கவேண்டும் என்று பயனர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியாது.
நடவடிக்கைக்கான காரணங்கள்
மோசடிகள் நடப்பதைத் தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சரியாகச் செயல்பட்டுவரும் வர்த்தகங்கள், அரசாங்க அமைப்புகள், நண்பர்கள், குடும்பத்தார் ஆகிய தரப்பினரை ஏமாற்றிப் பணம் பறிக்க மோசடிக்காரர்கள் மாற்றுப் பெயர்களைப் பயன்படுத்திவந்தது இதற்குக் காரணம்.
அந்த வகையில், மாற்றுப் பெயரைப் பயன்படுத்த வகைசெய்யும் அம்சத்தை அகற்றுவதன் மூலம் மோசடிக்காரர்கள் தவறாகப் பயன்படுத்தும் ஓர் அம்சம் விலக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

