தோ பாயோ லோரோங் 8, புளோக் 229ல் ஜூலை 29ஆம் தேதி ஏற்பட்ட தீயை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அணைத்தபோது, அங்குள்ள தீயணைப்புக் குழாய் (dry rising main) சரியாக வேலை செய்யவில்லை.
அக்குழாய் செயல்படாததால், பாதிக்கப்பட்ட தளங்களுக்கு தண்ணீரை ஏற்ற முடியவில்லை என்று குடிமைத் தற்காப்புப் படை புதன்கிழமை (ஜூலை 30) தெரிவித்தது.
இதனால், தீயணைப்பு வீரர்கள் கீழே உள்ள தீயணைப்பு வாகனத்திலிருந்து 10வது, 11வது தளங்களுக்கு படிக்கட்டுகள் வழியாக நேரடியாக குழாய்களை அமைக்க வேண்டியிருந்தது.
இந்தத் தீ விபத்தில், 10வது தளத்தில் உள்ள ஒரு குடியிருப்பு முழுவதுமாக எரிந்ததுடன், 11வது தளத்தில் உள்ள ஒரு குடியிருப்புக்கும் பரவியது. ஒரு தீயணைப்பு வீரர், ஒரு குழந்தை உட்பட மொத்தம் ஏழு பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
“இது மிகவும் கடினமானது, ஆனால் இந்தத் தற்செயல் நிகழ்வுக்குக் குடிமைத் தற்காப்புப் படை தீயணைப்பு வீரர்கள் தங்கள் வழக்கமான பயிற்சிகளின்போது தவறாமல் பயிற்சி செய்கின்றனர்,” என்று குடிமைத் தற்காப்புப் படை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தீயணைப்புக் குழாய் என்பது ஒரு கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள செங்குத்தான சிவப்புக் குழாயாகும். இது, பொதுவாகப் பயன்பாட்டில் இல்லாதபோது உலர்ந்திருக்கும்.
தீ விபத்தின்போது, இது தீயணைப்பு வாகனத்திலிருந்து தண்ணீருடன் இணைக்கப்பட்டு, கட்டடத்தின் மேல் தளங்களுக்கு தண்ணீர் செல்ல உதவுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து நகர மன்றத்துடன் இணைந்து விசாரித்து வருவதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. மேலும், தீயணைப்புக் குழாய் பழுதைச் சரிசெய்து, அது சரியாக வேலை செய்வதை உறுதிசெய்யும் பணிகளிலும் குடிமைத் தற்காப்புப் படை ஈடுபட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“தீப்பாதுகாப்பு குறித்து குடிமைத் தற்காப்புப் படை தீவிரமாகக் கவனிக்கிறது. மேலும், தீயணைப்புக் குழாய் போன்ற தீப்பாதுகாப்பு வசதிகளைப் பராமரிக்காதது உள்ளிட்ட தீப்பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்காதவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.