ஜூரோங் வெஸ்ட்டில் சிற்றுந்து மோதியதில் நடையர் மரணம்; ஓட்டுநர் கைது

ஜூரோங் வெஸ்ட்டில் சிற்றுந்து மோதியதில் நடையர் மரணம்; ஓட்டுநர் கைது

படம்: USER1271442181701/டிக்டாக்

17 Oct 2026 - 6:55 pm

1 mins read

தீவு விரைவுச்சாலையில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) சிற்றுந்து மோதி உயிரிழந்ததாகக் கூறப்பட்ட பெண், ஜூரோங் வெஸ்ட் பகுதியில் விபத்துக்குள்ளானதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

காவல்துறை அக்டோபர் 17ஆம் தேதி வெளியிட்ட புதிய அறிக்கையில், முதற்கட்ட விசாரணையின்படி, ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 61க்கும் ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 4க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் 77 வயதான அந்த நடையரைச் சிறுபேருந்து மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் செல்வதற்கு முன்பாகவே அந்தச் சிறுபேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

சாங்கி நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் அக்டோபர் 16ஆம் தேதி காலை 7.10 மணி அளவில், சடலம் ஒன்று கிடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. ஜாலான் பஹார் வெளிவழிக்கு முன்னர், விரைவுச்சாலையில் கிடந்த அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதைச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

கூகல் வரைபடத்தின்படி, விபத்து நடந்த இடத்திற்கும் ஜாலான் பஹார் வெளிவழிக்கும் இடையிலான தொலைவு கிட்டத்தட்ட 2.2 கிலோமீட்டர்.

விபத்து நடந்த இடத்திலிருந்து வேறு ஒரு பகுதியில் பெண்ணின் சடலம் எப்படி அல்லது ஏன் கண்டெடுக்கப்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்