தோ பாயோவில் உள்ள சில நடைபாதைகள், நடையர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அவர்களுக்கு மட்டுமான நடைபாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. தோ பாயோ சென்ட்ரல், தோ பாயோ லோரோங் 1, தோ பாயோ லோரோங் 4 உள்ளிட்ட இடங்களில் உள்ள நடைபாதைகள் அவை.
சைக்கிள் பாதைகளுக்குப் பக்கத்தில் உள்ள நடைபாதைகளை நடையர்களுக்கு மட்டுமான பாதைகளாக மாற்றும் திட்டத்தின்கீழ் இந்த ஏற்பாடு அமைகிறது.
மின்ஸ்கூட்டர்கள், மின் சக்கரநாற்காலிகள் போன்று தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோரும் நடையர்களுக்கு மட்டுமான நடைபாதைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
சிங்கப்பூர் எங்கும் உள்ள மற்ற பகுதிகளிலும் ஜூலை 1க்குள் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறினார்.
வரும் மாதங்களில் அங் மோ கியோ, பீஷான், பொங்கோல் ஆகிய இடங்களில் இந்த நடைமாதை ஒதுக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
நடையருக்கு மட்டுமான பாதைகள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த, நடையர் சின்னமும் ‘நடையர்களுக்கு மட்டும்’ எனக் குறிப்பிடும் சொற்களும் பதிக்கப்பட்டிருக்கும்.
சைக்கிளோட்டிகளும் இயந்திர வசதியில்லாத தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோரும் இந்த மாற்றத்துக்குப் பழக்கப்படுத்திக்கொள்ள அவகாசம் தர, ஜூலை 1லிருந்துதான் அமலாக்கம் நடப்புக்கு வரும். நடையருக்கு மட்டுமான பாதைகளில் அவற்றை ஓட்டியதாக முதன்முறையாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டோருக்கு $2,000 வரை அபராதம் அல்லது மூன்று மாதச் சிறைத் தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சைக்கிள் பாதைகளுக்கு தங்களை அறியாமல் மாறும் நடையர்கள் இந்தத் தண்டனையை எதிர்நோக்க மாட்டர்.