தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய தின அணிவகுப்பு: மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மக்கள்

3 mins read
7de3685b-44eb-43be-8e4b-7281228e08fe
சிங்கப்பூரின் 60ஆம் பிறந்தநாளைக் கொண்டாடவந்த கணேசன் குழந்தை-கலைச்செல்வி தம்பதியர். - படம்: ரவி சிங்காரம்

தம் 60வது பிறந்தநாளைக் கொண்டாடியபோதுகூட இவ்வளவு மகிழ்ச்சியடையவில்லை கணேசன் குழந்தை-கலைச்செல்வி தம்பதியர்.

தஞ்சோங் பகார் குழுத்தொகுதி இந்தியர் நற்பணிச் செயற்குழு உறுப்பினரும் சமூக மத்தியஸ்தருமான கணேசன் குழந்தை, 70, தேசிய தின அணிவகுப்பைக் கண்டதில் மகிழ்ச்சியடைந்தார்.

“இம்முறை எப்போதும் இருப்பதைவிட இன்னும் அற்புதமான நிகழ்ச்சியாக இருந்தது. பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது,” என்றார் திருவாட்டி கலைச்செல்வி.

“நிகழ்ச்சிகளை மிகவும் நவீனமான முறையில் படைத்திருந்தனர். அனைவரின் மனத்தில் பதியும் வகையில் செய்திருந்தனர்.

“சிங்கப்பூரின் 60 ஆண்டுப் பயணத்தின் முக்கிய நிகழ்ச்சிகளை முன்பில்லாத அளவுக்கு காணொளியில் காட்டினார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட முதியோரின் முகங்களைப் பெரிய திரைகளில் காட்டினார்கள்,” என்றார் திரு கணேசன்.

“இதனால், சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றபோது எப்படி இருந்தது, எப்படி இருந்த நாட்டை எப்படிக் கொண்டுவந்தார்கள் போன்றவற்றை இளையர்கள் தெரிந்திருப்பார்கள். பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களையும் காட்டி ஒரு நல்ல 60 ஆண்டுக் கதையைச் சித்திரித்திருந்தனர். அனைத்து இனத்தவர், வயதினருக்கும் பொருத்தமான வகையில் இருந்தது,” என்றார் திரு கணேசன்.

தம் நிறுவனம் மூலம் தேசிய தின அணிவகுப்பைக் காணவந்த வெளிநாட்டு ஊழியர்கள் (இடமிருந்து) லோகே‌ஷ், அசாருதீன், முத்து, சஞ்சய்.
தம் நிறுவனம் மூலம் தேசிய தின அணிவகுப்பைக் காணவந்த வெளிநாட்டு ஊழியர்கள் (இடமிருந்து) லோகே‌ஷ், அசாருதீன், முத்து, சஞ்சய். - படம்: ரவி சிங்காரம்

‘பெஸ்ட் டேஸ்ட் இம்பெக்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர் அசாருதீன், தன் சக ஊழியர்களுடன் தேசிய தின அணிவகுப்புக்கு வந்திருந்தார்.

“எங்கள் நிறுவனம்தான் எங்களுக்கு நுழைவுச்சீட்டுகளைத் தந்தது. சிங்கப்பூர் எங்களை நன்றாகப் பார்த்துக்கொள்கிறது,” என்றார் திரு அசாருதீன். ராணுவ வாகனங்கள், விமானங்கள் தம்மை வெகுவாகக் கவர்ந்ததாகக் கூறினார் அவர்.

முதன்முறையாக பாடாங்கில் மேடையேறிய ‘வசந்தம் பாய்ஸ்’ குழுவினரான சகோதரர்கள் முகமது ரஃபி, முகமது ப‌ஷீர், முகமது நூர் ஆகியோர் மாறுபட்ட பாணியில் படைத்த ‘முன்னேறு வாலிபா’ பாடல் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாகக் கூறினார் மகன், உறவினருடன் வந்திருந்த ரஹீமா, 41.

“ராம்லி சரிப் போன்ற பழங்காலக் கலைஞர்களைக் கேட்டது மலரும் நினைவுகளைக் கொண்டுவந்தது. இளம் கலைஞர்களை அடிக்கடிக் கேட்கிறோம். ஆனால், அக்காலக் கலைஞர்களைக் கேட்கும் வாய்ப்பு ஒவ்வொன்றும் பொக்கி‌‌ஷம்,” என்றார் திருவாட்டி ரஹீமா.

ராம்லி சரிப் போன்ற பழங்காலக் கலைஞர்களின் குரலைக் கேட்டது மலரும் நினைவுகளைத் தந்தது என்றார் உறவினர்களுடன் தேசிய தினக் கொண்டாடட்டத்தில் கலந்துகொண்ட ரஹீமா (இடம், பின்வரிசை).
ராம்லி சரிப் போன்ற பழங்காலக் கலைஞர்களின் குரலைக் கேட்டது மலரும் நினைவுகளைத் தந்தது என்றார் உறவினர்களுடன் தேசிய தினக் கொண்டாடட்டத்தில் கலந்துகொண்ட ரஹீமா (இடம், பின்வரிசை). - படம்: ரவி சிங்காரம்

“60ஆம் ஆண்டு என்பதால் பல வித்தியாசமான விஷயங்களைக் காண ஆவலுடன் வந்திருக்கிறோம். ஆண்டுதோறும் நிகழ்ச்சியில் படைப்பாளியாகப் பங்குபெறுவேன். இம்முறை நான் என் தம்பியுடன் பார்வையாளராகப் பங்குபெறுகிறேன். என் தம்பி விருப்பப்பட்டு இந்நிகழ்ச்சிக்காக வருகிறார். அதனால் இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பு தனிச் சிறப்பு மிக்கது,” என்றார் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் தம்பி குணசீலனுடன் வந்திருந்த திரு சுரேஷ் வனாஸ், 46.

சகோதரர்கள் சுரே‌ஷ் வனாஸ் (இடது), குணசீலன்.
சகோதரர்கள் சுரே‌ஷ் வனாஸ் (இடது), குணசீலன். - படம்: ரவி சிங்காரம்
தம் பிள்ளைகள், நண்பர்கள், குடும்பத்துடன் நாச்சம்மை விசாலாட்சி, 35 (நடுவில்).
தம் பிள்ளைகள், நண்பர்கள், குடும்பத்துடன் நாச்சம்மை விசாலாட்சி, 35 (நடுவில்). - படம்: ரவி சிங்காரம்

“எனக்கு வாணவேடிக்கைகளும் செஞ்சிங்கங்கள், கடற்படை முக்குளிப்பாளர்கள் தரையிறங்கியது மிகவும் கவர்ந்தது. ‘ஸ்டேண்ட் அப் ஃபார் சிங்கப்பூர்’ பாடலை என் அருகிலிருந்த பெண்மணியுடன் இணைந்து பாடியதும் நல்ல அனுபவம்,” என்றார் தன் இரு பிள்ளைகளுடனும் நண்பர், குடும்பத்தினருடனும் வந்திருந்த தொழில்நுட்பக் கல்விக் கழக விரிவுரையாளர் நாச்சம்மை விசாலாட்சி, 35.

இம்முறை தேசிய தின அணிவகுப்பில் ஏழு செஞ்சிங்கங்கள் கடற்படை முக்குளிப்பாளர்களுடன் ‘ஜம்ப் ஆஃப் யுனிட்டி’ எனும் புத்தாக்க ஒருங்கிணைந்த அங்கத்தைப் படைத்திருந்தனர். தேசிய தின முன்னோட்டக் காட்சியில் ஐந்து செஞ்சிங்கங்கள்தான் அவ்வங்கத்தைப் படைத்திருந்தனர்.

பல்லினச் சமூகத்தின் அடையாளமாக, சிரஞ்ஜீவியன் தம் காதலி ஹூய் யிங்குடன் வந்திருந்தார். “இதற்குமுன் நான் எஸ்ஜி50 அணிவகுப்புக்கு வந்திருந்தேன். இப்போது எஸ்ஜி60க்கு வந்துள்ளேன். நான் மின்னற்படைப் பிரிவைக் காண வந்துள்ளேன்,” என்றார் முன்பு மின்னற்படைப் படையிலிருந்த சிரஞ்ஜீவியன்.

காதலர்கள் ஹூய் யிங், சிரஞ்ஜீவியன்.
காதலர்கள் ஹூய் யிங், சிரஞ்ஜீவியன். - படம்: ரவி சிங்காரம்
70 வயதான பிறகு, முதன்முறைத் தேசிய தின அணிவகுப்பைக் காணும் வாய்ப்பைப் பெற்ற இந்திரா, 70, தன் 13 வயது பேரன் தேஜாவுடன் வந்திருந்தார்.
70 வயதான பிறகு, முதன்முறைத் தேசிய தின அணிவகுப்பைக் காணும் வாய்ப்பைப் பெற்ற இந்திரா, 70, தன் 13 வயது பேரன் தேஜாவுடன் வந்திருந்தார். - படம்: ரவி சிங்காரம்

“மிகவும் பிரம்மாண்டமான தேசிய தின அணிவகுப்பாக அமைந்தது. பெருந்திரையில் காணொளிகளைக் கண்டபோது அக்காலத்திலிருந்து சிங்கப்பூர் எப்படி மாறியிருக்கிறது என்பதைக் காணமுடிந்தது. சிங்கப்பூரின் வளர்ச்சியை இன்னும் பாராட்ட முடிகிறது,” என்றார் சிங்கப்பூர் சிறைத்துறையில் பணியாற்றும் மோகனபிரியா, 43.

தன் தாயார் சாந்தி, அக்கா நந்தகுமாரியுடன் வந்திருந்தார் விக்னே‌ஷ்.

“எஸ்ஜி60 வடிவத்தில் அணிவகுத்தது மிகவும் அழகாக இருந்தது. அதற்கு சிறந்த ஒருங்கிணைப்பு தேவைப்பட்டது. தொண்டூழியர்கள் கனிவன்புடன் இருந்தனர்,” என்றார் நந்தகுமாரி.

“நானும் என் தாயாரும் ஒவ்வோர் ஆண்டும் வாணவேடிக்கைகளைத்தான் ஆவலுடன் எதிர்பார்ப்போம்,” என்றார் விக்னே‌ஷ். “சிங்கப்பூர் வளர்ச்சியடைந்துள்ளதைக் காணும்போது பெருமகிழ்ச்சியடைகிறேன்,” என்றார் சாந்தி, 67.

அம்மா, மகள் இணைந்த தேசிய தினக் கொண்டாட்டம் - பள்ளியின் வாயிலாகக் கிடைத்த நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு தேசிய தின அணிவகுப்பைப் பார்க்க 21 வயது மகள் சான்ராவுடன் வந்திருந்தார் திருவாட்டி ரீனா 48. ‘என்டியுசி பே‘ கொண்டாட்டத்தில் உற்சாகத்துடன் பங்கேற்ற இவர்கள், தேசிய தின அணிவகுப்பை நேரடியாகப் பார்ப்பது இதுவே முதன்முறை என்பது கூடுதல் சிறப்பு.
அம்மா, மகள் இணைந்த தேசிய தினக் கொண்டாட்டம் - பள்ளியின் வாயிலாகக் கிடைத்த நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு தேசிய தின அணிவகுப்பைப் பார்க்க 21 வயது மகள் சான்ராவுடன் வந்திருந்தார் திருவாட்டி ரீனா 48. ‘என்டியுசி பே‘ கொண்டாட்டத்தில் உற்சாகத்துடன் பங்கேற்ற இவர்கள், தேசிய தின அணிவகுப்பை நேரடியாகப் பார்ப்பது இதுவே முதன்முறை என்பது கூடுதல் சிறப்பு. - படம்: வி‌ஷ்ருதா நந்தகுமார்
குறிப்புச் சொற்கள்