அக்டோபர் 25ஆம் தேதியன்று மக்கள் செயல் கட்சி (மசெக) தனது மத்திய செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, உயர் மட்டத்தில் பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், புதிதாகப் பதவி உயர்வு பெற்ற அமைச்சர்கள் கட்சியின் உயர் வட்டத்திற்குள் நுழையத் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது.
கட்சி வட்டாரத்தினர் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கவில்லை. மேலும், 2025 பொதுத் தேர்தலில் கட்சி 65.57 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருப்பதால், மாற்றத்திற்கான அவசியம் பெரிய அளவில் இல்லை.
இருப்பினும், ஜூலை மாதம் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, இந்த வார இறுதியில், கட்சியின் அடுத்த தலைமுறை தலைவர்கள், கட்சியின் பொறுப்புகளைத் தங்கள் கைகளில் எடுக்கத் தொடங்குவதைக் காணக்கூடும்.
இது, 2024ல் ஆளும் கட்சியின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிரதமர் லாரன்ஸ் வோங் வகுத்த கால அட்டவணையைப் பின்பற்றி நடைபெறுகிறது. இதன் மூலம், மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிலிருந்து அடுத்த தலைமுறைக்குத் தலைமைத்துவம் கைமாறும் செயல்முறை முழுமையடைகிறது.
2025ல் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில், அடுத்த பொதுத் தேர்தலுக்குள் மக்கள் செயல் கட்சியின் அடுத்த தலைமுறைத் தலைவர்களின் வரைபடம் உருவாகும் என்று நம்புவதாகப் பிரதமர் வோங் தெரிவித்தார்.
அடுத்த பொதுத் தேர்தல் 2030க்குள் நடைபெற வேண்டியுள்ளதால், இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள கட்சித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து 2028ல் நடைபெறவுள்ள தேர்தலும் இதற்கான முக்கியக் கட்டங்களாக அமையும்.
அக்டோபர் 25ஆம் தேதி, கட்சியின் 2,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஒன்றுகூடி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குச் செயல்படவுள்ள மக்கள் செயல் கட்சியின் புதிய மத்திய செயற்குழுவைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
மக்கள் செயல் கட்சியின் முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 27 பேரில் சிலருக்கு, இந்தக் குழுவில் இடம்பெறுவதற்கான முதல் வாய்ப்பு அமையக்கூடும்.
கட்சியின் மத்திய செயற்குழுவில் பெரும்பாலானோர் நான்காம் தலைமுறைத் தலைவர்களே உள்ளார்கள். மூத்த அமைச்சர்கள் லீ சியன் லூங், கா. சண்முகம் இருவரும் இதற்கு விதிவிலக்காக உள்ளனர். இவர்கள் இருவரும் 1980களிலிருந்தே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
மசெக தேர்தலின்போது, அக்கட்சியின் தற்போதைய மத்திய செயற்குழு, கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்காக சுமார் 19 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலை வெளியிடுகிறது.
அந்தப் பட்டியலில், சுமார் ஏழு பேர் கொண்ட ஒரு சிறிய குழு, கட்சியின் முக்கிய வட்டாரத்தால் அதன் முதன்மைத் தலைவர்களாகப் பரிந்துரைக்கப்பட்டு அடையாளம் காட்டப்படும்.
கட்சி உறுப்பினர்கள் பொதுவாக இந்தப்பட்டியல்களிலிருந்து மத்திய செயற்குழுவுக்கான தங்கள் 12 வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். பின்னர், அந்த உறுப்பினர்களிடையே தலைவர், பொருளாளர் போன்ற பல்வேறு பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.
