4,000 பேருக்கு தீபாவளி அன்பளிப்புப் பைகள்

2018ல் தொடங்கப்பட்ட இந்த அன்பளிப்புப் பை விநியோகத் திட்டத்திற்காக ஏறத்தாழ 450 தொண்டூழியர்களின் கைகள் இணைகின்றன.

4,000 பேருக்கு தீபாவளி அன்பளிப்புப் பைகள்

2 mins read
936da5a5-6f03-457f-921a-af150144a50d
ஃபெங்ஷான் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் ஷெரில் சானிடம் நற்பணிப் பேரவையின் தீபாவளி அன்பளிப்புப் பை ஒன்றைப் பெறும் 70 வயது சுதாகரன் சங்கமேஸ்வரன். - படம்: சுந்தர நடராஜ்

ஓய்வுபெற்ற பாதுகாவல் அதிகாரி சுதாகரன் சங்கமேஸ்வரனால் கால், இடுப்புப் பிரச்சினைகளால் அதிகம் நடக்க முடிவதில்லை.

தம் மனைவி 65 வயது சங்கரம்மாவுக்கு வலிப்புப் பிரச்சினை உள்ள நிலையில், பிடோக் நார்த்திலுள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் இவர்கள் இருவரும் மட்டுமே தங்கியுள்ளனர்.

தீபாவளிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு மக்கள் கழகத்தின் இந்திய நற்பணிச் செயற்குழு ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 6) வழங்கிய அன்பளிப்புப் பைகளைப் பெற்றுக்கொண்டோரில் 70 வயது திரு சுதாகரனும் ஒருவர்.

மூன்றாவது ஆண்டாக இந்தப் பைகளைப் பெறும் திரு சுதாகரன், தம் குடும்பம் இவ்வாறு பராமரிக்கப்படுவதை நினைத்து மகிழ்ச்சி அடைவதாகக் கூறுகிறார்.

“எனக்கு அதிக நண்பர்கள் இல்லை. இவ்வாறு எங்களுக்கு அக்கறை காட்டப்படும்போது எங்களுக்கு மகிழ்ச்சியும் தைரியமும் ஏற்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

பிடோக் நார்த் அவென்யூ 4லுள்ள 101,106 ஆகிய புளோக்குகளில் காலை 9 மணி அளவில் கிட்டத்தட்ட 30 தொண்டூழியர்கள் கூடி பல்வேறு வசதி குறைந்த குடும்பங்களுக்கு அன்பளிப்புப் பைகளை வழங்கினர்.

பலகாரப் பொருள்கள், மளிகைப் பொருள்கள் ஆகியவற்றுடன் சுகாதார மேம்பாட்டு வாரியம் தயாரித்துள்ள ஆரோக்கிய சமையல் குறிப்புக் கையேடும் ஒவ்வொரு பைகளிலும் உள்ளன.

பிடோக் நார்த்தின் மற்றொரு வட்டாரவாசியான ஷமிதா தெரேசா சந்திரசேகரன், 27, தம் பாட்டி வீட்டில் தீபாவளி கொண்டாடிய இன்பமான நினைவுகளை இந்தப் பைகள் நினைவுபடுத்துவதாகத் தெரிவித்தார்.

இரு இளம்பிள்ளைகளுடன் தீபாவளி அன்பளிப்புப் பை பெற்ற மகிழ்ச்சியில் 27 வயது ஷமிதா தெரேசா சந்திரசேகரன் (நடுவில்).
இரு இளம்பிள்ளைகளுடன் தீபாவளி அன்பளிப்புப் பை பெற்ற மகிழ்ச்சியில் 27 வயது ஷமிதா தெரேசா சந்திரசேகரன் (நடுவில்). - படம்: கி.ஜனார்த்தனன்

“என் குழந்தைகள் ரெய்லின் தாலியாவும் தர்வின் சேம்மும் இந்த அன்பளிப்பால் மகிழச்சி அடைகின்றனர். அன்றாட வேலை வாழ்க்கையால் அலுத்துப்போகும் என்னைப் போன்ற பெற்றோருக்கு வீட்டில் கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்த இதுபோன்ற திட்டங்கள் கைகொடுக்கின்றன,” என்று சுய தொழில் செய்துவரும் திருவாட்டி ஷமிதா கூறினார்.

காலை நேரத்தில் மழை பெய்திருந்தபோதும் சிரமம் பாராது சக தொண்டூழியர்களுடன் இணைந்து அன்பளிப்புப் பை விநியோகத்தில் ஈடுபட்டதில் மனநிறைவை உணர்வதாக இல்லத்தரசி லஷ்மிப்ரியா ஹரிகுமார், 44, கூறினார்.

அன்பளிப்புப் பைகளை வழங்கும் 44 வயது நற்பணிப் பேரவைத் தொண்டூழியர் லஷ்மிப்ரியா ஹரிகுமார்.
அன்பளிப்புப் பைகளை வழங்கும் 44 வயது நற்பணிப் பேரவைத் தொண்டூழியர் லஷ்மிப்ரியா ஹரிகுமார். - படம்: சுந்தர நடராஜ்

அக்டோபர் 30ஆம் தேதி வரை தொடரும் இவ்வாண்டுக்கான தீபாவளி அன்பளிப்புப் பை விநியோகத்தால் 4,000 வசதி குறைந்த குடும்பங்கள் பயனடைவர். இந்தத் திட்டத்திற்காக தீவெங்கிலுமுள்ள மொத்தம் 90 இந்திய நற்பணி செயற்குழுக்களைச் சேர்ந்த ஏறத்தாழ 450 தொண்டூழியர்கள் பங்கேற்கவுள்ளதாக மக்கள் கழகம் தெரிவித்தது.

2018ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் இந்த தீபாவளி அன்பளிப்புப் பை விநியோகத்தைச் செய்து வருகிறது நற்பணிப் பேரவை.

சமூகப் பிணைப்பு, பரஸ்பர ஆதரவு, கலாசாரப் புரிதல் ஆகியவற்றை ஏற்படுத்துவது இந்நிகழ்ச்சியின் நோக்கம். இதற்காகத் தங்கள் நேரத்தை அர்ப்பணித்த தொண்டூழியர்களுக்குத் தம் உளமார்ந்த நன்றியை தெரிவிப்பதாகக் கூறிய மக்கள் கழக நற்பணிப் பேரவையின் தலைவர் கே. ராமமூர்த்தி, இத்தகைய முயற்சிகளில் இளையர்கள் அதிக அளவில் சேரும்படியும் ஊக்குவித்தார்.

.

குறிப்புச் சொற்கள்