பளு தூக்குவதில் பல உலகச் சாதனைகளைப் படைத்துள்ள ஃபர்ஹானா ஃபாரிட், பெரித்தா ஹரியான் நாளேட்டின் இவ்வாண்டுக்கான சாதனையாளர் விருதை வென்றுள்ளார்.
புதிய சாதனைகளைப் படைப்பதுடன் நின்றுவிடாமல் பிற பெண்களையும் வெற்றிப் பாதையில் வழிநடத்தியுள்ள 34 வயது ஃபர்ஹானா, பளு தூக்குவதில் இதுவரை 14 உலகச் சாதனைகளைப் படைத்துள்ளார்.
முன்னாள் மருந்தாளரான அவர், சிங்கப்பூர்ப் பளு தூக்கும் அமைப்பின் நிர்வாகக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்து விற்பனை, ஆதரவுத் திரட்டு முயற்சிகளை வழிநடத்துகிறார்.
கடந்த ஆண்டு விளையாட்டுத் துறையில் பல வெற்றிகளைக் குவித்த ஃபர்ஹானா, உலக கிளாசிக் பளு தூக்கும் போட்டியில் கடந்த ஆண்டு ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். நியூசிலாந்து, நெதர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களுடன் அவர் போட்டியிட்டார்.
ஃபர்ஹானாவின் சாதனைகள், பளு தூக்கும் விளையாட்டில் பிற பெண்களும் அடி எடுத்து வைக்க உந்துதலாக இருந்தது.
‘கிலியோ’ என்ற பெண்களுக்கான சஞ்சிகையில் அவர் அளித்த நேர்காணல் கட்டுரையைப் படித்த ஒருவர் ஃபர்ஹானாவின் பளு தூக்கும் குழுவில் இன்று உறுப்பினராக இருக்கிறார்.
செப்டம்பர் மாதத்தில் பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியையும் அவர் ஏற்பாடு செய்தார்.
“நமக்கு நாமே சவால் விடுத்துக்கொள்ள அஞ்சக்கூடாது என்பதைப் பெரித்தா ஹரியான் விருது நினைவூட்டுகிறது,” என்று அவர் கூறினார்.
வெவ்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் மலாய், முஸ்லிம் தனிநபர்களைச் சிறப்பிக்கும் வகையில் மேபேங் வங்கியின் ஆதரவுடன் பெரித்தா ஹரியான் நாளேடு 28வது ஆண்டாகச் சாதனையாளர் விருதை வழங்கியது.
