சிங்கப்பூரின் இரு அமைச்சுகளின் இரண்டாம் நிரந்தரச் செயலாளர் ஜெஃப்ரி சியாவ் அரசாங்கச் சேவையில் இருந்து விலகியுள்ளார்.
அரசியலில் ஈடுபடுவதற்காக அவர் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது.
மனிதவள அமைச்சு மற்றும் வர்த்தக, தொழில் அமைச்சில் பணியாற்றிய திரு சியாவ், பதவி விலகியுள்ள ஆக உயர்நிலை அரசாங்க அதிகாரி ஆவார்.
மேலும், பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் ஆக அண்மைய பதவி விலகல் இது.
திரு சியாவ், தமது பதவி காலத்தில் பொதுச் சேவையில் பல்வேறு மூத்த பதவிப் பொறுப்புகளில் பணியாற்றினார்.
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்த அவர், திரு லீ சியன் லூங் பிரதமராக இருந்தபோது அவரது முதன்மை தனிச் செயலாளராகப் பணியாற்றினார்.
24 ஆண்டு காலச் சேவைக்கப் பின்னர், வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திரு சியாவ் பதவி ஓய்வு பெறுவார் என்று பொதுச் சேவைப் பிரிவு செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) தெரிவித்தது.