அரிசி இருப்புக்கு வரம்பு விதிக்க ஐந்து தென்மாநிலங்களுக்கு அனுமதி

அரிசி இருப்புக்கு வரம்பு விதிக்க ஐந்து தென்மாநிலங்களுக்கு அனுமதி

படம்: தமிழ் முரசு

07 Nov 2026 - 2:30 pm

2 mins read

புதுடெல்லி: அரசி, நெல் கையிருப்புக்குத் தேவைப்படும் இடங்களில் வரம்புகளை விதித்துக்கொள்ள ஐந்து தென்மாநிலங்களுக்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அரிசி பதுக்கலைத் தடுப்பதும் அதன் சில்லறை விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் அரசாங்க உத்தரவின் நோக்கம்.

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிவரை இந்தக் கட்டுப்பாட்டு உத்தரவுகளைத் தங்கள் பகுதிகளில் நடைமுறைப்படுத்தலாம்.

மேலும் நாடு முழுதும் உள்ள வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வணிகர்கள், பெரிய விற்பனை நிறுவனங்கள், ஆலை உரிமையாளர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கையிருப்பு நிலவரத்தை உணவு இருப்பு இணையவாசலில் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

பாஸ்மதி, பாஸ்மதி அல்லாத உயர்தர அரிசி, பாஸ்மதி அல்லாத சாதாரண அரிசி, புழுங்கல் அரிசி, குருணை அரிசி, நெல் ஆகிய ஆறு பிரிவுகளின்கீழ் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். இணையவாசலில் பதிவு செய்யத் தவறுவோர் மீதும் நிர்ணயிக்கப்பட்ட இருப்பு வரம்புகளை மீறுவோர் மீதும் 1955ஆம் ஆண்டின் அத்தியாவசியப் பண்டங்கள் சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சந்தைகளில் போதிய அளவில் பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்யவும் பதுக்கல், கள்ளச்சந்தையை ஒழிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற பருவமழை காரணமாகச் சந்தைகளில் நெல் வரத்து குறைந்து, பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளின் விலை உயர்ந்துள்ளது என்று துறைசார் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, பொதுமக்களுக்கு மானிய விலையிலான பாரத் அரிசி தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், நஃபெட், என்சிசிஎஃப், கேந்திரிய பந்தார் உள்ளிட்ட அமைப்புகளுக்குக் கூடுதல் அரிசியை ஒதுக்கீடு செய்யவும் அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்