முஸ்தஃபா சென்டரில் வங்கி அட்டை விவரங்களை ரகசியமாகத் திருடியவர் கைது

முஸ்தஃபா சென்டரில் வங்கி அட்டை விவரங்களை ரகசியமாகத் திருடியவர் கைது

1 of 2
படம்: காவல்துறை
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Oct 2026 - 2:52 pm

2 mins read

லிட்டில் இந்தியா வட்டாரத்திலுள்ள முஸ்தஃபா சென்டர் கடையில் வாடிக்கையாளர்களின் வங்கி அட்டையிலுள்ள தகவல்களை நூதன முறையில் ரகசியமாகத் திருடிய 42 வயது சீன நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, காவல்துறை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சையது ஆல்வி ரோட்டில் உள்ள அந்தக் கடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) சந்தேகத்திற்கு இடமான முறையில் நடந்துகொண்டதற்காக அந்த ஆடவரை பாதுகாவல் அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர்.

முன்னதாக, மின்னணுச் சாதனம் அடங்கிய பையைக் கையில் வைத்துக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு அருகில் அந்த ஆடவர் நிற்பது தெரியவந்தது.

வாடிக்கையாளர்கள் தங்களது பணப்பைகளை வைத்திருந்த சட்டை/காற்சட்*ை பைகளுக்கு அருகே அவர் தனது பையைக் கொண்டு சென்றதைப் பாதுகாவல் அதிகாரிகள் கண்டனர்.

உடனடியாக அவரைப் பிடித்து காவல்தறையிடம் அவர்கள் ஒப்படைத்தனர். சீனாவைச் சேர்ந்த அந்த ஆடவரைக் காவல்துறை கைது செய்தது.

‘என்எஃப்சி’ (NFC) வசதி பொருத்தப்பட்ட கடன் அட்டை மற்றும் கடன்பற்று அட்டைகளில் இருந்து தகவல்களைத் திரட்ட அவர் வைத்திருந்த மின்னணுச் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பின்னர் ஒரு மின்னணுச் சாதனம், இரண்டு ‘பவர் பேங்க்’ சாதனங்கள், ஒரு கைப்பேசி, பல வங்கி அட்டைகள் ஆகியவற்றை அவரிடமிருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

லியு ஸி எனப்படும் அந்த ஆடவர் மீது தனிநபர் தகவல்களைச் சட்டவிரோதமாகத் திரட்டியதாக செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) குற்றம் சுமத்தப்பட்டது.

அடுத்த கட்ட விசாரணைக்காக அவர் அக்டோபர் 27ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்திற்கு வரவேண்டும். தற்போது அவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அங்கீகரிக்கப்படாத சாதனங்களில் சிக்கிவிடாதபடி வங்கி அட்டை விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சட்டவிரோதம்பேரங்காடிகைது