மோசடி, திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஆடவர் ஒருவர் பிணையில் இருந்தபோது பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
முகம்மது யுஸ்ரின் முகம்மது யூசஃப் என்னும் அந்த ஆடவர் தேசியப் பூங்கா கழகம் அமைத்திருந்த காகங்களுக்கான பொறிகளைச் சேதப்படுத்தியதாக நம்பப்படுகிறது.
சிங்கப்பூரில் காகங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்தப் பொறிகள் வைக்கப்பட்டன.
யூசஃப் காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) முன்னிலை ஆனார். பழைய வழக்கையும் சேர்த்து தற்போது மொத்தம் நான்கு குற்றச்சாட்டுகள் அவர்மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
50 வயதான யூசஃப், மார்ச் 2ஆம் தேதி இரவு 11 மணி வாக்கில் ஹெவ்லாக் ரோட்டில் உள்ள புளோக் 51 அருகே இருந்த காகங்களுக்கான பொறிகளைக் கவிழ்த்தார். இதனால் அதில் சிக்கியிருந்த காகம் ஒன்று தப்பியது.
அதேபோல் நள்ளிரவு 12.40 மணிக்கு மற்றொரு பொறியை அவர் சேதப்படுத்தினார். அதில் சிக்கியிருந்த மூன்று காகங்கள் தப்பின.
கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஆடவர் மார்ச் 4ஆம் தேதி யீசூன் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்குக்குரிய முன் விசாரணை மார்ச் 11ஆம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

