‘சாட்ஜிபிடி’ மூலம் 14 வயதுச் சிறுமியாக நடித்து $20,000 ஏமாற்ற முயன்றவர் கைது

‘சாட்ஜிபிடி’ மூலம் 14 வயதுச் சிறுமியாக நடித்து $20,000 ஏமாற்ற முயன்றவர் கைது

2 mins read
3085d8d1-311c-4f5f-8690-c709962364fe
பணம் பறித்தல், ஏமாற்றுதல் ஆகிய இரு குற்றச்சாட்டுகளையும் ஆன்டனி ஸு எனும் 20 வயது ஆடவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். - படம்: எஸ்பிஎச் மீடியா
Google News Preferred Icon

‘ஹனி டிராப்’ எனும் மோசடித் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பதற்கான யோசனைகளுக்காக 20 வயது சிங்கப்பூர் ஆடவர், சாட்ஜிபிடியையும் குறுங்காணொளிப் பதிவுகளையும் பயன்படுத்தியுள்ளார்.

இணையத்தில் 14 வயதுச் சிறுமியைப் போல் நடித்து, மற்றோர் இளையரைச் சந்திக்க வரவழைத்து, அவரிடமிருந்து $20,000ஐ மிரட்டிப் பறிக்க ஆன்டனி ஸு எனும் அந்த ஆடவர் முயன்றுள்ளார்.

பணம் பறித்தல், ஏமாற்றுதல் ஆகிய இரு குற்றச்சாட்டுகளையும் ஸு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

‘ஹனி ட்ராப்’ என்பது ஒரு வகையான காதல் மோசடி. இதில் பணம் பறித்தல், மிரட்டுதல், களவாடுதல் போன்ற நோக்கத்துடன் ஒருவர், இணையத்தில் போலியான சுயவிவரத்தைப் பயன்படுத்தி மற்றவரை வலையில் வீழ்த்துவார்.

அம்பலப்படுத்தி அவமானப்படுத்தத் திட்டம்

ஷின் மின் டெய்லி நியூஸ் தகவலின்படி, ஆரம்பத்தில் லாய் என்பவரின் குணத்தை அம்பலப்படுத்தி அவரை அவமானப்படுத்தவே ஸு அவரைக் குறிவைத்துள்ளார்.

21 வயது லாய் யூஹாங், சமூக ஊடகங்களில் தொடர்ந்து தமக்கு குறுந்தகவல் அனுப்பிவருவதாக 2025ஆம் ஆண்டு அக்டோபரில் தனது பெண் தோழி மூலம் ஸு அறிந்துகொண்டார்.

இதையடுத்து, இன்ஸ்டகிராம் குறுங்காணொளிப் பதிவுகளைக் கொண்டு இருவரும் திட்டம் தீட்டினர்.

ஸு, சாட்ஜிபிடியையும் பயன்படுத்தினார்.

முதலில், அவர் 14 வயது சிறுமி போல நடித்தார். தனது பெண் தோழியின் உதவியோடு, லாயுடன் தொடர்பை ஏற்படுத்தி இணையத்தில் அவரிடம் நெருக்கமாகப் பேசினார்.

இருவரும் அக்டோபர் 21ஆம் தேதி எம்ஆர்டி நிலையமொன்றில் சந்திக்க முடிவெடுத்தனர்.

சிறுமியின் அண்ணனாக நடிப்பு

சந்தித்த பிறகு, தான் அந்தச் சிறுமியின் அண்ணன் என்று ஸு பொய் சொன்னார்.

லாயின் பையிலிருந்து ஆணுறையை வெளியே எடுக்குமாறு மிரட்டி, அதைக் காணொளியாகப் பதிவு செய்ததுடன் லாயின் அடையாள அட்டையையும் அவர் நிழற்படம் எடுத்தார்.

லாய் ஒத்துழைக்காவிட்டால், காவல் துறையைத் தொடர்புகொள்ளப்போவதாக அவர் அச்சுறுத்தினார்.

நற்பெயருக்குக் களங்கம் வந்துவிடுமோ என்று அஞ்சிய லாய், அழுததோடு மன்னிப்பும் கேட்டார்.

இறுதியில், ஸு அவரிடமிருந்து $20,000 கேட்டார். அதை ஐந்து ஆண்டுகளில் மாதத்திற்கு $300ஆகச் செலுத்தலாம் என்றும் ஸு கூறினார்.

லாய், மறுநாள் அதிகாலையில் ஸுவிற்கு $100 தந்தார்.

அதற்கு அடுத்த நாளே லாயிடம் $100ஐத் திருப்பிக் கொடுத்த ஸு, லாயின் தாயாருக்கு மன்னிப்புக் கேட்டுத் தகவல் அனுப்பினார்.

இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து லாய் ஏற்கெனவே காவல்துறையில் புகார் அளித்தது ஸுவிற்குத் தெரியாது.

ஸு மறுநாள் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு கூடுதல் விசாரணைக்காக இம்மாதம் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரம் அடுத்த மாதம் 23ஆம் தேதி அறிவிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்