சிங்கப்பூர் சிறைச்சாலைகளில் வயது முதிர்ந்த கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சிங்கப்பூர் சிறைத்துறை முதிய குற்றவாளிகளின் மறுசீரமைப்பையும் மறுஒருங்கிணைப்பையும் மேலும் ஆதரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
வயதான குற்றவாளிகளுக்கான தொடர்ச்சியான பராமரிப்பு மேலாண்மைச் சேவை (Throughcare Management Service for Elderly Offenders) என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம், முதிய கைதிகளின் தேவைகளுக்கேற்ப தனிப்பட்ட சீர்திருத்தப் பராமரிப்பை வழங்குகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கைதிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய இரட்டிப்பாகியுள்ளது. 2020ஆம் ஆண்டில் 327ஆக இருந்த அந்த எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டில் 574ஆக உயர்ந்துவிட்டது. இது, மொத்த சிறைக்கைதிகளில் எட்டு விழுக்காடு ஆகும்.
அனைத்துக் கைதிகளும் சிறைக்கு அனுப்பப்படும்போது பாதுகாப்பு, மருத்துவ மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். கடுமையான மருத்துவத் தேவைகள் கொண்ட கைதிகள், சாங்கி சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்படலாம். அங்கு மருத்துவ நிபுணர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து அவர்களுக்குப் பராமரிப்புச் சேவை வழங்குகின்றனர்.
சீரான உடல்நிலை இருந்தும் நடமாட கூடுதல் உதவி தேவைப்படும் கைதிகளுக்கு அன்றாட நடவடிக்கைகளில் பாதுகாப்பாக ஈடுபட உதவும் கைப்பிடிகள், அமர்ந்து பயன்படுத்தும் கழிவறைகள், வழுக்காத தரை போன்ற வசதிகளைக் கொண்ட அறைகள் வழங்கப்படுகின்றன. இந்த அறைகள் சிறைச்சாலையின் உதவிப் பராமரிப்புச் சீர்திருத்தப் பிரிவில் (Assisted Living Correctional Unit) இடம்பெறுகின்றன.
இவ்வாண்டு ஏப்ரல் 30ஆம் தேதியின்படி, உதவிப் பராமரிப்பு சீர்திருத்தப் பிரிவில் 65 கைதிகள் உள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்.
தங்குமிடத்தின் உள்கட்டமைப்புக்கு அப்பால், வயதான கைதிகளின் மறுவாழ்வில் உளவியல், சமூக ஆதரவை வழங்க சிங்கப்பூர் சிறைத்துறை, பராமரிப்புச் சமூகச் சேவைகள் சங்கத்துடன் (Care Community Services Society) இணைந்து வயதான குற்றவாளிகளுக்கான தொடர்ச்சியான பராமரிப்பு மேலாண்மைச் சேவைத் திட்டத்தை 2023ல் தொடங்கியது.
நடமாடச் சிரமப்படும் 60 வயதுக்கும் அதற்கு மேற்பட்டோருக்கான இத்திட்டம், மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
முதல் கட்டத்தில், பராமரிப்புச் சமூக சேவைகள் சங்கம் போன்ற சமூக சேவை அமைப்புகளுடன் கூட்டு அமர்வுகள் நடைபெறும். அதன்வழி கைதிகளுடன் நல்லுறவை ஏற்படுத்தி, அவர்களின் பின்னணி, தேவைகளைப் புரிந்துகொண்டு, தனிப்பட்ட சீர்திருத்தத் திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
இரண்டாம் கட்டத்தில், உளவியல் அடிப்படையிலான சீர்திருத்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தக் கட்டத்தில், கைதிகள் பயிற்சி பெற்ற ஆலோசகருடன் அமர்வுகளில் கலந்துகொண்டு ஆலோசனை பெறுவர்.
மூன்றாம் கட்டமானது, கைதிகளின் விடுதலைக்குப் பிறகும் தொடரும் பராமரிப்பாகும். அதில், சமூகத்துடன் மீண்டும் ஒருங்கிணைவதற்கான ஆதரவு அவர்களுக்கு வழங்கப்படும்.
விடுதலைக்குப் பிறகும் பராமரிப்புச் சமூக சேவைகள் சங்கம் வயதான கைதிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. மீண்டும் குற்றம் செய்வதைத் தடுப்பதற்கான திட்டம் வகுப்பது, துடிப்புடன் மூப்படையும் நிலையங்களுடன் அவர்களை இணைப்பது, மஞ்சள் நாடா அமைப்பின்வழி வேலை வாய்ப்புகளைத் தேடித் தருவது உள்ளிட்ட சேவைகளை அது வழங்குகிறது.
கடந்த 2024 மார்ச்சில் முதல்முறையாகச் சிறையில் அடைக்கப்பட்ட 75 வயது ஜான் (உண்மைப் பெயரன்று) இந்தத் திட்டத்தில் முனைப்புடன் ஈடுபடுவதால் வாழ்க்கையை எதிர்கொள்ள முன்பைவிட அதிக நம்பிக்கையுடன் இருப்பதாகச் சொன்னார்.
“விடுதலைக்குப்பிறகு என் ஓய்வு நேரத்தைப் பயனுள்ள விதமாகச் செலவிட நான் ஊக்கம் பெற்றுள்ளேன். முக்கியமாக, துடிப்பான முதுமையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புகிறேன். முடிந்தால் நான் என் மனைவியுடன் உலகத்தைச் சுற்றிப்பார்க்க ஆசைப்படுகிறேன்,” என்றார் அவர்.
இவ்வாண்டு ஏப்ரல் 30ஆம் தேதிப்படி, வயதான 80 கைதிகள் இந்தத் திட்டத்தின்வழி பயன்பெற்றுள்ளனர்.