செல்லப்பிராணிக் கடை உரிமம் கொண்டிராத உணவகங்களிலும் அதன் வெளிப்புறங்களில் செல்லப்பிராணிகளுடன் உணவருந்தலாம் என்ற விதிமுறைத் தளர்விற்கு செல்லப்பிராணி உரிமையாளர்களும் உணவகங்களும் வரவேற்றுள்ளனர்.
முறையான உரிமம் இல்லாததால் முன்பெல்லாம் செல்லப்பிராணிகளுடன் வந்த வாடிக்கையாளர்களைத் திருப்பியனுப்பியதாகக் கூறினார் ‘விஸ்க் அண்ட் பேடல்’ உணவகத்தின் பேச்சாளர்.
“பொங்கோல் பூங்கா இணைப்புப் பகுதியில் அமைந்திருந்தபோதும் செல்லப்பிராணிகளுடன் உணவருந்துவதற்கான உரிமத்தை நாங்கள் பெற்றிருக்காததால் அத்தகைய வாடிக்கையாளர்கள் சிலருக்கு அது ஏமாற்றத்தை அளித்தது,” என்றார் அவர்.
அந்த நீர்முகப்புப் பகுதிக்குப் பலரும் தங்கள் செல்ல நாயுடன் வந்துசெல்வது வழக்கம்.
இந்நிலையில், செல்லப்பிராணிகளுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு உகந்த, வெளிப்புறத்தில் உணவருந்தும் வசதிகொண்ட உணவகங்கள், செல்லப்பிராணிகளுக்கான உணவை வழங்காதபோதும், சிங்கப்பூர் உணவு அமைப்பிடமிருந்து கூடுதல் உரிமம் கோருவது தொடர்பில் கவலைப்படத் தேவையில்லை.
இத்தகைய நடவடிக்கைகளும் செல்லப்பிராணியின்றி வரும் வாடிக்கையாளர்களுக்கும் வெளிப்புறத்தில் தனியிடம் ஒதுக்கப்பட்டிருக்கும் என்பதும், சுகாதாரம், செல்லப்பிராணியில் ஏற்படும் ஒவ்வாமை குறித்து கவனமாக இருக்கும் வாடிக்கையாளர்கள் கவலையைப் போக்கும் என்றார் அந்தப் பேச்சாளர்.
இம்மாதம் 2ஆம் தேதி சிங்கப்பூர் உணவு அமைப்பு வெளியிட்ட விதித் தளர்வு அறிவிப்பைத் தொடர்ந்து, செல்ல நாய்கள் அமரும் வகையிலான நாற்காலிகளை வாங்கும் முனைப்பில் இறங்கியுள்ளது தெபிங் லேனில் அமைந்துள்ள ‘விஸ்க் அண்ட் பேடல்’ உணவகம்.
இருப்பினும், 2025 ஜனவரி 1 முதல் நடப்பிற்கு வரும் விதிமுறைத் தளர்வு தொடர்பில் கூடுதல் விளக்கம் அளிக்கப்படும் என சில உணவகங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, பறவைகள், பூனை, வெள்ளெலி, முயல் போன்றவற்றையும் செல்லப்பிராணிகளாகக் கருதி அனுமதிக்கலாமா எனத் தெளிவாகத் தெரியவில்லை என்று ‘விஸ்க் அண்ட் பேடல்’ உணவகப் பேச்சாளர் கூறினார்.
செல்லப் பிராணிகளுக்கு மிகவும் உகந்த சிங்கப்பூர் என்ற நிலையை எட்டுவதற்கு இது ஒரு சிறந்த முன்னோக்கிய நடவடிக்கை எனக் குறிப்பிட்டார் செல்லப்பிராணியாக நாய் வளர்க்கும் திருவாட்டி ஷிர்லின் இங், 34.
செல்லப்பிராணி உணவு வழங்கும் உணவகங்கள், செல்லப்பிராணி உணவு விற்காத, அதே நேரத்தில் செல்லப்பிராணியுடன் வருவோருக்கு வெளிப்புறத்தில் உணவருந்த அனுமதிக்கும் உணவகங்கள் இரண்டையும் இப்போதைய விதிமுறைகள் பாகுபடுத்துவதில்லை.
புதிய விதிகளின்கீழ், செல்லப்பிராணிகளுக்கான உணவு விற்க விரும்பும் உணவகங்கள், அதற்கான உரிமத்தைச் சிங்கப்பூர் உணவு அமைப்பிடமிருந்து பெற வேண்டியது கட்டாயம்.