சிங்கப்பூரில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தன

சிங்கப்பூரில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தன

1 mins read
c7948b00-bc45-4890-b69b-2b19bd8795ac
விலைக்குறைப்பை அடுத்து 95-ஆக்டேன் வகை பெட்ரோல் அனைத்து நிலையங்களிலும் லிட்டருக்கு $3.42ஆக உள்ளது. - கோப்புப் படம்: சாவ்பாவ்

உலகெங்கும் கச்சா எண்ணெய்யின் விலை சரிவடைந்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்துள்ளதால் உள்ளூர் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

திங்கட்கிழமை (ஜூன் 22) எஸ்ஸோ நிறுவனம் தனது 95-ஆக்டேன் வகை பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4 காசுகள் குறைத்தது. மூன்று நாள்களுக்கு முன்னர் கால்டெக்ஸ், ஷெல், சினோபெக் ஆகியவையும் தங்களது விலையைக் குறைத்திருந்தன.

இந்த விலைக்குறைப்பைத் தொடர்ந்து கால்டெக்ஸ், ஷெல், சினோபெக், எஸ்ஸோ, எஸ்பிசி ஆகிய நிறுவனங்களின் பெட்ரோல் நிரப்புமிடங்களில் 95-ஆக்டேன் பெட்ரோலின் விலை லிட்டருக்கு $3.42ஆக இருப்பதாகச் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் ‘பிரைஸ் காக்கி’ செயலி செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டது.

மேலும், 92-ஆக்டேன் பெட்ரோல் விலை லிட்டருக்கு $3.39ஆகக் குறைந்துள்ளது. (இருப்பினும் இந்த வகை பெட்ரோலை ஷெல், சினோபெக் நிறுவனங்கள் விற்பனை செய்வதில்லை).

இவ்வேளையில், 98-ஆக்டேன் பெட்ரோல் விலை லிட்டருக்கு $3.93 முதல் $3.94க்கு இடைப்பட்டுள்ளது. பிரீமியம் வகை பெட்ரோல் விலை $4.06 முதல் $4.12 வரையிலும் விற்கப்படுகிறது.

இதற்கிடையே, டீசல் விலையும் இந்த மாதத் தொடக்கத்தில் லிட்டருக்கு 5 முதல் 10 காசு வரை சரிந்தது. தற்போது அது லிட்டருக்கு $4.16 முதல் $4.22 வரை விற்பனையாகிறது.

டீசலை உற்பத்தி செய்வதற்குக் கூடுதல் சுத்திகரிப்பு முறைகள் தேவைப்படுவதாலும், கட்டுமானம், வேளாண்மைத் துறைகளில் டீசலுக்கான பருவகாலத் தேவை அதிகரித்திருப்பதாலும் அதன் விலை இன்னும் சற்று உயர்வாகவே காணப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
பெட்ரோல்டீசல்விலைசரிவுசிங்கப்பூர்