செல்லப்பிராணிகள், இலக்கு, நட்பு: இதுவே இவர்களின் பலம்

செல்லப்பிராணிகள், இலக்கு, நட்பு: இதுவே இவர்களின் பலம்

உடல் தளர்ச்சி என்பது முதுமையின் இயல்பான ஒரு பகுதி என்றே பெரும்பாலான மூத்தோர் கருதுவதாகக் ஆய்வில் தெரியவந்துள்ளது. சுறுசுறுப்பாக இருத்தல், சத்தான உணவு உட்கொள்ளுதல், மற்றும் சமூகத்துடன் நல்ல தொடர்பைப் பேணுதல் ஆகியவை இந்நிலையைத் தள்ளிப்போட உதவும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
படம்: கரோலின் சியா

24 Nov 2026 - 5:30 am

9 mins read

ஒரு கையைச் சுவரில் ஊன்றியபடி, ஜோசப் வோங் தனது நான்கு அறைகள் கொண்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீட்டிற்குள் மெல்ல நடந்து சென்றார்.

ஜூன் 2025ல் இரண்டு வாரங்களுக்கு கடுமையாகச் சுளுக்கிக் கொண்ட கணுக்கால் அவரது அன்றாட நடவடிக்கைகளைப் பெருந்துயராக மாற்றியது.

61 வயதான ஓய்வுபெற்றவரான அவர் தனிமையில் வாழ்கிறார். அவருடன் நான்கு பூனைகள், ஒரு நாய், இரண்டு பறவைகள் வசிக்கின்றன. ஒரு நாளைக்கு இரண்டு முறை வீட்டைத் துப்புரவு செய்வது, செல்லப் பிராணிகளுக்கு உணவளித்து, மீண்டும் அவை இருக்கும் இடத்தை சுத்தம் செய்கிறார்.

வழக்கமாக இந்த வேலைகளுக்கு ஒரு மணி நேரம் பிடிக்கும். ஆனால், கணுக்கால் காயத்தினால் இது இரண்டு மணி நேரம் எடுத்தது. “வேலையை முடித்த கணமே, நான் (மிகுந்த களைப்பில்) படுத்து ஓய்வெடுக்க வேண்டியிருந்தது,” என்று அவர் கூறுகிறார்.

தான் இளமையாக இருந்தபோது, இத்தகைய சுளுக்கு ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு மட்டுமே வலிக்கும் என்று வோங் நினைவுகூர்கிறார். இம்முறை, அது குணமடைய இரண்டு வாரங்களுக்கும் மேலானது.

இவ்வாறு மெதுவான குணமடைதல் வோங்கைக் கலக்கமடையச் செய்தது. அவர் அதை மூப்படைதலின் அடையாளமாகவே கருதினார்.

ஆனால் இதன் பின்னணியில் கூடுதல் காரணங்கள் இருக்கலாம் என்கிறார் டியூக்-என்யூஎஸ் மருத்துவப் பள்ளியில் இதயம் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் சிறப்பு ஆய்வுத் திட்டத்தின் இயக்குநரான பேராசிரியர் வாங் யிபின்.

கீழே விழுதல், காயம் அல்லது நோய்த்தொற்றிலிருந்து மீள்வதற்கு உடல் அதிக நேரம் எடுத்துக்கொண்டால், அது உடல் தளர்ச்சியின் அறிகுறியாக இருக்கலாம் அல்லது “தளர்ச்சிக்கு முந்தைய நிலையாக” இருக்கலாம் என்று வாங் கூறுகிறார்.

நோய், காயம் அல்லது அழுத்தத்தைத் தாங்கி அதிலிருந்து மீளும் ஆற்றல் உடலில் குறைந்து போகும் நிலையே உடல் தளர்ச்சி என்று அவர் விளக்குகிறார்.

பலரைப் போலவே, வோங்கும் இந்த அறிகுறிகளை மூப்படைதலின் தவிர்க்க முடியாத விளைவு என்று தவறாக எண்ணுகிறார்.

சிங்கப்பூரில் 50 வயதுக்கு மேற்பட்டோர், மற்றும் பராமரிப்பாளர்கள் என 800க்கும் அதிகமானவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், உடல் தளர்ச்சி என்பது மூப்படையும்போது இயல்பாகவே வரும் என்றும், அது தவிர்க்க முடியாத ஒன்று எனவும் 73 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.

எஸ்பிஎச் மீடியா, ஒருங்கிணைந்த பராமரிப்புக்கான அமைப்பு ஆகியவை இணைந்து இந்தக் கருத்துக் கணிப்பை முன்னெடுத்தன. கான்டார் நிறுவனத்தின் பங்கேற்பாளர் குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் 2026ம் ஆண்டு ஆகஸ்டு முதல் செப்டம்பர் வரை நேர்காணல்கள் நடத்தப்பட்டன. கான்டார் என்பது தனிப்பட்ட சந்தை ஆய்வு நிறுவனமாகும்.

பெரும்பாலானவர்கள் உடல் தளர்ச்சி ஏறத்தாழ 60 வயதில்தான் தொடங்கும் என்று நினைக்கின்றனர். இதில் பதிலளித்தவர்களில் 72 விழுக்காட்டினர் அந்த வயதையே இதற்குக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளனர்.

“ஆனால் உண்மையில், நமது உடலின் பல செயல்பாடுகள் 30 வயதிலேயே மெல்ல நலிவடையத் தொடங்கிவிடுகின்றன,” என்று வாங் விளக்குகிறார்.

தசையின் முக்கியத்துவம்

பெரும்பாலான மனிதர்கள் உடல் தளர்ச்சியை கால்கள் தள்ளாடுதல் என்றே எண்ணுகின்றனர். ஆனால், அது பல்வேறு வடிவங்களில் வெளிப்படக்கூடும் என்று கூறுகிறார், டியூக்-என்யூஎஸ் மருத்துவப் பள்ளியில் இதயம் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் சிறப்பு ஆய்வுத் திட்டத்தின் இயக்குநரான பேராசிரியர் வாங் யிபின்.

உடல் தளர்ச்சியில் மூன்று முக்கியக் கூறுகள் உண்டு என்கிறார் வாங்:

  1. உடல் சார்ந்தது, தசை அளவும் வலிமையும் குறைந்து, உடலியக்கம் சார்ந்த அசைவுகள் கடினமாவது;
  2. செயல்பாடு சார்ந்தது, அடிக்கடி நோய்வாய்ப்படுவது, குணமடைய அதிக நேரம் எடுத்துக்கொள்வது; மற்றும்
  3. அறிவாற்றம், உளவியல் சார்ந்தது, நினைவாற்றல், சிந்தனை, மனநிலை மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் பாதிக்கப்படுவது.

வயது, நோய் காரணமாக ஏற்படும் தசை இழப்பு, அதாவது தசைச் சிதைவு குறித்து ஆய்வு செய்யும் ‘மேக்னெட்’ (MAGNET) என்ற நாடு தழுவிய ஆய்வுத் திட்டத்திற்கு அவர் தலைமை தாங்குகிறார். இது $10 மில்லியன்  மதிப்பிலான திட்டமாகும்.

2025 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘மேக்னெட்’ திட்டத்திற்கு சிங்கப்பூர் தேசிய ஆய்வு அறநிறுவனம் ஆதரவளிக்கிறது.

அப்படியானால் உடல் தளர்ச்சி சார்ந்த நலிவைத் தடுக்க மக்கள் என்ன செய்யலாம்? முறையான உடற்பயிற்சியின் மூலம் தசை அளவையும் வலிமையையும் அதிகரிப்பது ஒரு வழி.

உடலின் எடையில் உடலின் மிகப் பெரிய உறுப்பாக விளங்கும் தசை, வளர்சிதை மாற்ற நலம் உட்பட பல உறுப்புகளின் இயக்கத்திற்கும் மையமாகத் திகழ்கிறது என்று வாங் விளக்குகிறார்.

தசைகள் ஆற்றலையும், உடலைக் கட்டமைக்கும் அமினோ அமிலங்கள் போன்ற மூலப்பொருட்களையும் சேமித்து வைத்து, தேவைப்படும்போது வெளியிடுகின்றன. மற்ற உறுப்புகளுக்கு சுரப்பிநீர் வழியாகச் சமிக்ஞைகளை அனுப்பி, உடல் முழுவதையும் சீராக இயங்க வைப்பதற்கும் உதவுகின்றன என்கிறார் வாங்.

தசை இழப்பு ஏற்பட்டால், மூத்தோருக்கு உடற்பருமன், நீரிழிவு,  இதய நோய் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அவர்களது நோய் எதிர்ப்பு ஆற்றலும் மூளை நலமும் கூட வேகமாகக் குறையக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.

பயன்நிறைந்த நாட்கள்

சுறுசுறுப்பாக இயங்குவதே உடல் தளர்ச்சிக்கு எதிரான மிகச் சிறந்த தற்காப்புகளில் ஒன்றாகும்;  63 வயதான டிரிண்டி ஹோ அதைத் தனது வார நடைமுறையாகவே மாற்றிக் கொண்டுள்ளார்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 9 மணிக்கு, அவர் தனது வாராந்திர “உடற்பயிற்சி” என்று சொல்லும் நடவடிக்கைக்காக பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையத்திற்குச் செல்கிறார்.

அங்கு, அவர் சக தொண்டூழியர்கள் குழுவுடன் இணைகிறார்.

வழக்கமாக ஒவ்வொரு அமர்விலும் 10 முதல் 15 பேர் பணியில் இருப்பர். சிவப்பு நிற  மேலங்கி அணிந்த அந்தத் தொண்டூழியர்கள், இரண்டு மீட்டர் நீளமுள்ள தள்ளுவண்டிகளுடன், 1,52,488 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட - அதாவது சுமார் 21 கால்பந்து மைதானங்கள் அளவுள்ள - அந்த நிலையத்திற்குள் விறுவிறுப்பாக நடந்து செல்கின்றனர்.

ஹோ 18 கிலோ எடையுள்ள வாழைப்பழப் பெட்டியை எவ்வித சிரமமுமின்றித் தூக்கித் தமது தள்ளுவண்டியில் அடுக்கிறார்.

இவர்கள், விற்கப்படாமல் மீதமாகும் காய்கனிகளை மீட்டு, தேவைப்படுவோருக்கு மறுபகிர்வு செய்யும் இலாப நோக்கற்ற, தொண்டூழியர்களால் நடத்தப்படும் ‘பிரிட்ஜ் ரீஸ்டாக் கம்யூனிட்டி எஸ்.ஜி’ (ஃஎப்ஆர்சி) எனும் அமைப்பின் உணவு மீட்புக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

கடை கடையாகச் சென்று, விற்பனையாளர்கள் தூக்கி எறியவிருக்கும் பழங்கள், காய்கறிகளை இந்தத் தொண்டூழியர்கள் கேட்டு வாங்குகின்றனர்.

ஹோ ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக ‘ஃஎப்ஆர்சி’ அமைப்பில் தொண்டூழியராக உள்ளார்.

எஞ்சிய உணவுகளை மீட்கும் பணிக்கான ஒவ்வொரு அமர்வும் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் வரை நீடிக்கும்; அது முடிவடையும் தருவாயில், “நான் ஏறத்தாழ 8,000  அடிகள் நடந்திருப்பேன்”, என்று ஹோ கூறுகிறார். 30-களில் இருக்கும் இரு பிள்ளைகளைக் கொண்ட ஹோ தனது நேரத்தை அர்ப்பணிக்கும் பல்வேறு நற்பணிகளில்  ‘ஃஎப்ஆர்சி’-யும் ஒன்றாகும. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு,  முதல் குழந்தை பிறந்த பிறகு நிறுவனப் பணியிலிருந்து விலகிய ஹோ, நிலச்சொத்து விற்பனை முகவரானார்.

நீக்குப்போக்கான வேலை நேரம் அவரைத் தொண்டூழியப் பணிகளில் ஈடுபட அனுமதித்தது — இதுவே தாம் “சமுதாயத்திற்குத் திரும்பக் கொடுக்கும்” வழி என்றும், “சுறுசுறுப்பாக இருப்பதற்கான அர்த்தமுள்ள வழியாகவும்” இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

ஏறத்தாழ 15 ஆண்டுகளாக, ஹோ ‘கேர் கம்யூனிட்டி சர்வீசஸ் சொசைட்டி’ அமைப்பிற்காக வாகனத்தை இயக்கி, தேவைப்படும் தருணங்களில் நன்கொடை உண்டியல்களைச் சேகரிக்கும் பணிகளை மேற்கொண்டார். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ‘லயன்ஸ் பிஃப்ரெண்டர்ஸ்’ என்ற சமூகச் சேவை அமைப்பில் தொண்டூழியப் பணியைத் தொடங்கிய அவர், தனியாக வசிக்கும் மூத்தோரின் உடல்நலனையும் நல்வாழ்வையும் அறிந்துகொள்ள அவர்களது வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டு வருகிறார்.

தொண்டூழியப் பணிகளில் ஈடுபடாத நேரங்களில், ஹோ தனது மகள் வீட்டில் ஒன்பது மாதப் பேரக்குழந்தையைப் பார்த்துக்கொள்ள உதவுகிறார்.

அக்குழந்தையுடன் தரையில் உட்கார்ந்து எழுவதும், மேலும் 10 கிலோ எடையுள்ள அவனைத் தூக்கிச் சுமப்பதும், “எனது கைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது,” என்று அவர் கூறுகிறார்.

ஹோவும் அவரது 63 வயதான கணவரும் 19 ஆண்டுகளாக வாரந்தோறும் நடன வகுப்புகளுக்கு ஒன்றாகச் செல்கின்றனர். அவர் தமது வீட்டின் அருகே திறந்தவெளியில் நடைபெறும் வாராந்தர ஸூம்பா நடனப் பயிற்சி அமர்வுகளிலும் கலந்துகொள்கிறார்; அவற்றை சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் ‘ஹெல்தி 365’ எனும் கைபேசிச் செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்கிறார்.

Launched in 2015, Healthy 365 started as a step-tracking app.  2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஹெல்தி 365’, தொடக்கத்தில் நடைகளைக் கண்காணிக்கும் ஒரு செயலியாகவே நிறுவப்பட்டது.

பின்னர் அதன் செயல்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டு, சாப்பிட்ட உணவு சார்ந்த பதிவுகளைக் குறித்து வைப்பது, உடற்தகுதியைக்  கண்காணிப்பது, சமூக அளவிலான இலவச உடற்பயிற்சி வகுப்புகளை முன்பதிவு செய்வது எனப் பல வசதிகளை கொண்டதாக திகழ்கிறது.

“நீங்கள் வெறுமனே அமர்ந்து கொண்டு எதையும் செய்யாமல் இருந்தால், தசைகள் வலுவிழந்து வீணாகிவிடும்,” என்று ஹோ உறுதியாக நம்புகிறார்.

எண்ணிக்கையில் வலிமை

ஹோவின் கருத்து தனிப்பட்ட ஒன்றல்ல. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 55 விழுக்காட்டினர், போதிய உடலுழைப்பு இல்லாததே மூத்தோரின் உடல் தளர்ச்சிக்கு முதன்மைக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Singapore is now a super-aged society ஐக்கிய நாடுகள் அமைப்பின் வரையறையின்படி, சிங்கப்பூர் தற்போது ஆக அதிக மூப்படைந்தோர் வாழும் சமூகமாக மாறியுள்ளது; இங்கு ஐந்து குடிமக்களில் ஒருவருக்கும் அதிகமானோர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஆவர்.

“மூத்தோர் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொண்டு, இயன்றவரை நலமாகவும் சுறுசுறுப்பாகவும் எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் இருக்க உதவுவது மென்மேலும் முக்கியமாகிவிட்டது” என்று கூறுகிறார் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் (ஏஐசி) துடிப்புடன் மூப்படைதல் பிரிவின் தலைவரான சோ சுவீ பிங்.

மேலும் இதிலுள்ள நற்செய்தி என்னவென்றால், உடல் தளர்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றல்ல என்பதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

வழக்கமான உடற்பயிற்சி, சிறந்த ஊட்டச்சத்து, மற்றும் சமூகத் தொடர்புகளைப் பேணுவதன் மூலம் இதனைத் தள்ளிப்போட முடியும் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

ஆனால், சமூகத் தொடர்புகள் குறைவதை உடல் தளர்ச்சியுடன் மிகச் சிலரே தொடர்புபடுத்துகின்றனர். அதே கருத்துக்கணிப்பில், 23 விழுக்காட்டினர் மட்டுமே உடல் தளர்ச்சி சார்ந்த நலிவுறுதலை தனிமை அல்லது சமூகத் தனிமைப்படுத்தலுடன் தொடர்புபடுத்தினர்; தனிமையே காரணம் என்று கருதியோர் வெறும் 11 விழுக்காட்டினர் மட்டுமே.

58 வயதான பாலர் பள்ளி ஆசிரியை பூர்வா பாலைப் பொறுத்தவரை, சுறுசுறுப்பாக இருப்பது என்பது உடற்தகுதியோடு மட்டுமல்லாமல் நட்புடனும் தொடர்புடையது.

வாரத்திற்கு இரண்டு முறை வேலை முடிந்ததும், அவரும் சில நண்பர்களும் ஒன்றாக வெளியே செல்கிறார்கள்.

சில மாலை வேளைகளில், ‘ஹெல்தி 365’ செயலி மூலம் முன்பதிவு செய்து, வணிக வளாகத்தில் நடைபெறும் சமூக நடன நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். மற்ற நாட்களில், பூங்கா இணைப்புப் பாதைகளில் அரட்டையடித்தபடி அவர்கள் உலா வருகிறார்கள்.

“வேலை முடிந்ததும், சில நேரங்களில் நாங்கள் மிகவும் சோர்வாக உணர்வதால் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்வதற்குப் பிடிக்காது; ஆனால் நாங்கள் ஒன்றாகச் செல்லும்போது, ஒருவருக்கொருவர் ஊக்கமளிக்க முடிகிறது,” என்கிறார் பால்.

ஒவ்வொரு இரவும் இரவு உணவிற்குப் பிறகு, அவர் தனது ஷெட்லேண்ட் ஷீப்டாக் ரக நாய்க்குட்டியை 20 முதல் 30 நிமிடங்கள் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார்.

முதுமையை எதிர்கொள்வதற்கான ஒரு முழுமையான அணுகுமுறையின் பகுதியாகவே பால் இதனைக் கருதுகிறார். “இது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, நீங்கள் மகிழ்ச்சியாகவும் ஈடுபாட்டுடனும் இருக்கும்போது, உங்கள் மன அழுத்தம் குறையும்,” என்கிறார் அவர்.

அவர் தனது உணவுமுறையிலும் கவனம் செலுத்துகிறார்; முட்டை, டோஃபு எனப்படும் சோயாபீன்ஸ் கட்டி, பருப்பு வகைகள், இந்திய பாலாடைக்கட்டியான பனீர் ஆகியவற்றின் மூலம் உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைப்பதை உறுதி செய்கிறார்.

அந்த மனப்பாங்கே மாற்றத்தைக் கொண்டுவரும் என்கிறார் ‘ஏஐசி’ அமைப்பின் சோ. “உடல் தளர்ச்சி என்பது தாங்கள் அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ வேண்டிய ஒன்றல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ளும்போது, தங்கள் ஆரோக்கியத்தை முன்கூட்டியே பேணவும், தேவையான உதவிகளை நாடவும் அவர்கள் முனைப்புடன் செயல்படுவார்கள்”

வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை உடற்பயிற்சிக் கூடத்தில் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ளும் வோங்கும் இதனை ஆமோதிக்கிறார்.

அவர் உடல் வலிமையுடன் இருக்க விரும்புவதற்குக் குடும்பமே முக்கிய காரணம். ஒவ்வொரு சனிக்கிழமையும், அவர் காலை-மதிய இணை உணவுக்காகத் தனது சகோதரிகளைச் சந்திக்கிறார். “நான் தொடர்ந்து எனது செல்லப்பிராணிகளைப் பராமரிக்கவும், எனது குடும்பத்துடன் வெளியே செல்லவும் விரும்புகிறேன்.”

வோங் லாப நோக்கற்ற அமைப்பான ‘வீ கேர் கம்யூனிட்டி சர்வீசஸ்’ அமைப்பிலும் வாரந்தோறும் தொண்டூழியராகப் பணியாற்றுகிறார். “இது இன்னும் நான் சமுதாயத்திற்குப் பங்களிக்கிறேன் என்ற உணர்வையும், மேலும் நான் இன்றளவும் பயனுள்ளவனாக இருக்கிறேன் என்ற எண்ணத்தையும் எனக்குத் தருகிறது,” என்று கூறுகிறார் வோங்.

“
“உடல் தளர்ச்சி என்பது தாங்கள் இயல்பாக ஏற்றுக்கொண்டு வாழ வேண்டிய ஒன்றல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ளும்போது, அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை முன்கூட்டியே பேணவும், தேவையான ஆதரவைத் நாடவும் முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.’’
சோ சுவீ பிங், தலைவர், துடிப்புடன் மூப்படைதல் பிரிவு, ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு
‘கண்ணோட்டம்’  என்பது எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் ஆய்வுக் கட்டுரைத் திட்டமாகும். இது சமூகத்தை வடிவமைக்கும் முக்கியப் பிரச்சினைகள் குறித்த நிபுணர்களின் கருத்துகளையும் ஆழமான பார்வைகளையும் வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கிறது.
குறிப்புச் சொற்கள்