சிங்கப்பூரில் 2 மீட்டர் உயரம் கொண்ட வண்டுகளின் நிழற்படங்களைக் கண்டு மகிழ ஒரு வாய்ப்பு.
கலை அறிவியல் அரும்பொருளகத்தில் கண்காட்சி அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 17ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 19ஆம் தேதி வரை இடம்பெறும். மரினா பே சேண்ட்ஸ் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) வெளியிட்ட அறிக்கையில் அதுகுறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. உருவங்கள் பெரிதாக்கப்பட்ட பிரம்மாண்டமான வண்டுகளின் 37 நிழற்படங்கள் அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
பொதுவாக இலைகளின் மேல் அமர்ந்திருக்கும் அல்லது நகரும் வண்டுகளைப் பலர் பார்க்காமல் போவதற்கு வாய்ப்புண்டு. காண்பதற்குக் கறுப்பும் பழுப்பும் கலந்த வண்ணத்தில் அவை சாதாரணமாக இருக்கும். ஆனால் பார்வையாளர்களின் உயரத்தைவிடப் பெரிதாக அவற்றை வைக்கும்போது நிழற்பட வண்டுகள் நிச்சயம் கவனத்தை ஈர்க்கும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.
கண்காட்சியின் தலைப்பு, பூச்சிகள்: பெரிதாக்கப்பட்ட நுண்ணுருவங்கள். வண்டுகளின் வண்ணங்கள், மேற்புற அமைப்பு, உடற்கூறுகள் முதலியவற்றைப் பலர் கூர்ந்து கவனிப்பது வழக்கமன்று. ஆனால் அவற்றைப் பற்றி நேரடியாகப் பார்த்துத் தெரிந்துகொள்ள விரும்புவோருக்குக் கண்காட்சி மிக உதவியாக இருக்கும்.
கண்காட்சி, அமெரிக்க இயற்கை வரலாற்று அரும்பொருளகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம். ஏ*ஸ்டார் அமைப்பு முதலிய உள்ளூர்க் கல்வி நிலையங்களின் அறிவியல் ஆய்வுப் பிரிவுகளும் அதற்கு ஆதரவுக்கரம் நீட்டியிருப்பதாக மரினா பே சேண்ட்ஸ் கூறியுள்ளது.
ஒவ்வொரு நிழற்படமும் 8,000க்கும் மேற்பட்ட படங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகப் புகழ்பெற்ற நிழற்படக் கலைஞர் லெவான் பிஸ் சொன்னார். படங்கள் அனைத்தும் சிங்கப்பூரில் மின்னிலக்க முறையில் அச்சிடப்பட்டன. இரு பரிமாண முறையில் அவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சிக்கான நுழைவுச்சீட்டுகளை இணையத்தில் அல்லது மரினா பே சேண்ட்ஸ் அலுவலகத்தில் வாங்கிக்கொள்ளலாம்.
சிங்கப்பூர்வாசியாக இருக்கும் பெரியவர்களுக்கான நுழைவுச்சீட்டுகளின் கட்டணம் 6 வெள்ளியில் தொடங்குகிறது. சலுகைக் கட்டணம் 4 வெள்ளி. குடும்பங்களுக்கான நுழைவுச்சீட்டுகளையும் தள்ளுபடிக் கட்டணத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

