‘ஸ்டோமா’ நோயாளிகளுக்குப் பெரிதும் உதவும் மருத்துவ அடையாள அட்டை

‘ஸ்டோமா’ நோயாளிகளுக்குப் பெரிதும் உதவும் மருத்துவ அடையாள அட்டை

2 mins read
90366dcc-3bbe-4ea1-93d6-65a2ab91967c
புதிய மருத்துவ அடையாள அட்டையுடன் OAS அமைப்பின் தலைவர் எழில் மதியன் லட்சுமணன் (இடது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் நோய் காரணமாக அடிவயிற்றுப் பகுதியில் செயற்கைத் துவாரம் (stoma) ஏற்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு உதவ புதிய மருத்துவ அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

‘ஆஸ்டோமி அசோசியேஷன் ஆஃப் சிங்கப்பூர்’ (OAS) என்னும் அமைப்பு அக்டோபர் 5ஆம் தேதி ஆஸ்டோமி விழிப்புணர்வு தினத்தில் அதனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளது.

தங்களது நிலைமையை விவேகமான முறையில் தெரிவிக்க அத்தகைய நோயாளிகளுக்கு புதிய மருத்துவ அடையாள அட்டை உதவும்.

கழிவறைகள் அல்லது உடற்குறை உள்ளோருக்கான வசதிகளில் முன்னுரிமை வழங்குமாறு அந்த அட்டை மூலம் அவர்கள் வேண்டுகோளை முன்வைக்கலாம். முன்னுரிமை நாடுவதற்கான காரணங்களை விளக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படாது.

நோய் அல்லது காயம் காரணமாக இயற்கை வழிகளில் மலம், சிறுநீர் கழிக்க இயலாதபோது நோயாளிகளின் அடிவயிற்றில் அறுவை சிகிச்சை மூலம் ஏற்படுத்தப்படும் துவாரம் ஸ்டோமா (stoma) என்று அழைக்கப்படுகிறது.

செரிமானம் அல்லது சிறுநீர் கழிப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டோருக்கும் குடல் அழற்சி நோய் உள்ளோருக்கும் அதுபோன்ற அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

அந்த நோயாளிகள் வெளியேற்றும் உடற்கழிவுகளைப் பெறுவதற்காக அவர்களின் உடலுடன் பொருந்திய பை ஒன்று வெளியே பொருத்தப்படும். அந்தப் பையை அடிக்கடி காலி செய்ய வேண்டும்.

‘ஸ்டோமா’ உள்ளோருக்கு எரிச்சல் அல்லது தொற்றை உருவாக்காமல் தடுக்க, உரியமுறையில் சுத்தம் செய்து பராமரிப்பது அவசியமாகிறது.

அறிமுகம் செய்யப்பட இருக்கும் அட்டை அதுபோன்ற 6,000 நோயாளிகளுக்குப் பலனளிக்கும் என்று OAS அமைப்பின் தலைவரான எழில் மதியன் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்