சிங்கப்பூரர்களையும் வெளிநாட்டவர்களையும் ஒருங்கிணைப்பதற்காக ஒரு பொதுவானத் தளத்தைக் கண்டறிய எடுக்கப்பட்ட முன்னோடி முயற்சி நல்ல பலனளித்துள்ளது. அந்த முன்னோடி முயற்சியில் இருதரப்பினரும் கலந்துகொண்டு பன்முகக் கலாசாரம், வேலை, பொருளியல் உள்ளிட்ட கடினமானத் தலைப்புகளைப் பற்றி விவாதித்தனர். மொத்தம் 24 பேரை குழு உள்ளடக்கியிருந்தது. அவர்களில் 16 பேர் சிங்கப்பூரர்கள். ஐந்து வெளிநாட்டவர்களும் மூன்று நிரந்தரவாசிகளும் குழுவில் இடம்பெற்றிருந்தனர். இரு தரப்பினரையும் பாதிக்கும் பல்வேறு விவகாரங்களை விவாதித்த அவர்கள் 67 அறிக்கைகளை தயாரித்து வெளியிட்டடனர். ஏறக்குறைய 23 விவகாரங்களில் கருத்திணக்கம் ஏற்பட்டது. ஆனால் கருத்திணக்கம் வெவ்வேறு நிலையில் எட்டப்பட்டது. இது, வேறுபாடுகளையும் தாண்டி பொதுவான தளத்தைக் கண்டறிய முடியும் என்பதைக் காட்டியது என்று பொதுக் கொள்கை ஆய்வுக் கழகத்தின் ஆய்வாளர்கள் முன்னோடித் திட்டம் பற்றிய அறிக்கையில் தெரிவித்தனர். சமூக வாழ்க்கை பற்றிய கலந்துரையாடலில் பரஸ்பர மரியாதை உள்ளிட்ட விவகாரங்கள் பேசப்பட்டன. இதில் குழு, 18 அறிக்கைகளில் 14ல் கருத்திணக்கம் கண்டது. கல்வி தொடர்பான 16 அறிக்கைகளில் நான்கில் கருத்திணக்கம் ஏற்பட்டது. வேலை பற்றிய அறிக்கைகளில் 18ல் நான்கில் இணக்கம் காணப்பட்டது. ஆனால் பன்முகக் கலாசாரத்தில் 15ல் ஒரே ஓர் அறிக்கையில் மட்டும் முழு உடன்பாடு காணப்பட்டது. சிங்கப்பூரின் வெளிப்படைத்தன்மை, பன்முகக் கலாசாரத்திற்கு ஆதரவு, நம்மை இழந்துவிடாமல் பல நாடுகளைச் சேர்ந்த பலதரப்பு மக்களை வரவேற்பது என்பது அறிக்கைகளில் ஒன்றாகும். பல்கலைக்கழகங்கள் உட்பட உள்ளூர் கல்வி நிறுவனங்களில் சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை வழங்குவது மற்றோர் அறிக்கையாகும். புதிய ஒருங்கிணைப்பு முயற்சிக்கான கலந்துரையாடல், டென்மார்க்கில் பயன்படுத்தப்பட்ட திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. பொதுக் கொள்கை ஆய்வுக் கழகமும் ‘ரீச்’ அரசாங்கக் கருத்தறியும் பிரிவும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் நவம்பரில் இதனை நடத்தின. இதன் முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) வெளியிடப்பட்டன.
இந்த முடிவுகள் ஊக்கமளிப்பதாக ஜனவரி 20ஆம் தேதி குழுவில் ‘ரீச்’ அரசாங்கக் கருத்தறியும் குழுவின் தலைவர் டான் கியட் ஹாவ் கூறினார்.
சுகாதாரம் மற்றும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சருமான திரு டான், ரீச் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியின் ஒரு பகுதியாக அதன் சோதனை அணுகுமுறைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தும் என்றார்.
“அரசாங்கக் கருத்தறியும் பிரிவு சிங்கப்பூர் மக்கள் தங்களுக்கு மிகவும் முக்கியமானவற்றைப் பாதுகாப்பாக விவாதிக்கக்கூடிய அதிக இடங்களை உருவாக்குவதற்கு உறுதிபூண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
“உண்மை இதுதான் - நாம் வேறுபாடுகளைப் பற்றிப் பேசவில்லை என்றால், சலசலப்பு அதிகரிக்கும்,” என்றும் திரு டான் கூறினார்.

