நிகழ்நேரத் தகவல் வழங்கும் உடலில் அணியக்கூடிய சாதனங்களையும் இதர தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தும் இரண்டு முன்னோடித் திட்டங்கள் சிங்கப்பூரில் விரைவில் தொடங்கவிருக்கின்றன.
பயனாளர்கள் தங்கள் உடல்நலத்தை மேம்படுத்த உதவும் வகையில் அவற்றால் நிகழ்நேரத் தகவல்களைத் தரமுடியுமா எனச் சோதிப்பது நோக்கம்.
இதன் தொடர்பில், தொழில்நுட்ப நிறுவனங்கள், சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதாகச் சுகாதார மேம்பாட்டு வாரியம் கூறியது.
உடல்நலப் பிரச்சினைகளை எதிர்நோக்குவோரும் நாட்பட்ட உடல்நலச் சிக்கல் உடையோரும் நோய்வாய்ப்படுவதைத் தள்ளிப்போடவும் தங்கள் உடல்நலனை மேம்பட்ட முறையில் பேணவும் இந்தத் தகவல்கள் உதவும் என்று வாரியம் சொன்னது.
முன்னோடித் திட்டங்களில் முதலாவது, 2,500 பேர் பங்கேற்கும் ‘டிஜிகோச்’ திட்டம். இதன்கீழ், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைத் தொடர்ந்து கண்காணிக்க உதவும் கருவியை அவர்கள் அணிந்திருப்பர்.
நாள் முழுவதும் உணவு, உடலியக்க நடவடிக்கைகள் போன்றவற்றால் ஏற்படும் மாற்றங்கள் குறித்த நிகழ்நேரத் தகவல்களை அக்கருவிகள் வழங்கும்.
குளுக்கோஸ் அளவைத் தொடர்ந்து கண்காணிக்கும் கருவிகளைத் தயாரிக்கும் அமெரிக்காவின் அபட் நிறுவனம், சுகாதாரப் பராமரிப்புத் தீர்வுகளை வழங்கும் ‘ஹெல்த்2சிங்க்’ (Health2Sync) நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ‘டிஜிகோச்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இரண்டாவது முன்னோடித் திட்டம் ‘ஹெல்த்டிராக் எஸ்ஜி’ என்பதாகும். இதன்கீழ், கூகல் நிறுவனம், சிங்கப்பூரைச் சேர்ந்த சுகாதாரத் தொழில்நுட்ப நிறுவனமான ‘கனெக்டட்லைஃப்’, ‘ஃபுல்லர்ட்டன் ஹெல்த்’ ஆகியவற்றுடன் இணைந்து உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ரத்தத்தில் அதிகக் கொழுப்பு ஆகியவற்றைக் கையாளும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இதில் 3,500 பேர் பங்கேற்பர். பல்வேறு கண்காணிப்புச் செயலிகளிலிருந்து இவர்களின் தகவல்கள் ஒரே தளத்தில் சேகரிக்கப்படும். ஃபுல்லர்டன் ஹெல்த் பயிற்றுவிப்பாளர்கள் அத்தகவல்களின் அடிப்படையில் உடல்நல ஆலோசனைகளை வழங்குவர்.
உணவும் உடலியக்க நடவடிக்கைகளும் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்த நிகழ்நேரத் தகவல்கள் கிடைத்தால், மக்கள் தங்கள் வாழ்க்கைமுறைத் தெரிவுகளைச் சரிப்படுத்திக்கொள்வதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
சிங்கப்பூரர்கள் தங்கள் உடல்நலத்தை மேம்பட்ட முறையில் பேண உதவும் புத்தாக்க நடவடிக்கைகளை வாரியம் தொடர்ந்து முயல்வதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி டே சூன் ஹொங் கூறினார்.
அண்மைய கூட்டுமுயற்சிகள், சிங்கப்பூரர்கள் நாட்பட்ட உடல்நலச் சிக்கல்களை மேம்பட்ட முறையில் கையாள உதவும் பரிந்துரைகளைச் சோதிக்க உதவும் என்றார் அவர்.
இரு முன்னோடித் திட்டங்களிலும் சிங்கப்பூரர்கள் 6,000 பேர் வரை பங்கேற்பர். ‘டிஜிகோச்’ திட்டம் இவ்வாண்டு ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை 10 மாதங்களுக்கு இடம்பெறும்.
‘ஹெல்த்டிராக் எஸ்ஜி’ திட்டம் அடுத்த ஆண்டின் முற்பாதியில் தொடங்கி ஓராண்டுக்கு இடம்பெறும்.