ஆரோக்கிய உணவுப் பழக்கங்களை 500 முதியோருக்குக் கற்பிக்கும் முன்னோட்டத் திட்டம்

ஆரோக்கிய உணவுப் பழக்கங்களை 500 முதியோருக்குக் கற்பிக்கும் முன்னோட்டத் திட்டம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

28 Sep 2026 - 4:16 pm

2 mins read

உணவில் புரதத்தையும் சுண்ணாம்புச் சத்தையும் அதிகளவில் சேர்த்துக் கொள்ளுதல், முழுதானிய மாவுச்சத்து உணவுகளுக்கு மாறுவது அத்துடன் சோடியம், சீனி, நிறைவுற்ற கொழுப்பு ஆகியவை நிறைந்த உணவுகளைக் குறைத்துக் கொள்ளுதல் போன்றவற்றை முதியோருக்குக் கற்பிக்கும் முன்னோட்டத் திட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிடோக் நார்த் வட்டாரத்தில் அமைந்துள்ள என்டியுசி ஹெல்த் அமைப்பின் துடிப்புமிக்க மூப்படைதல் நிலையங்களில், திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 28) புதிய ஊட்டச்சத்து திட்டம் தொடங்கியது.

என்டியுசி ஹெல்த் அமைப்பின் 27 துடிப்புடன் மூப்படைதல் நிலையங்களைச் சேர்ந்த 500 மூத்தோர் இதில் கலந்துகொண்டனர்.

விளையாட்டுகள் மற்றும் ஆக்கபூர்வமான கதைகூறல் வாயிலாக ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை அன்றாட வாழ்க்கைக்கு ஏற்றவாறு எளிதாகப் புரியவைக்கும் ‘ஸ்டே ஸ்ட்ரோங்’ எனும் முன்னோட்டத் திட்டத்தில் இவர்கள் பங்கேற்கின்றனர்.

வரும் நவம்பர் மாதம் இதன் முதற்கட்டப் பயிற்சி நிறைவடைந்ததும், 2027ஆம் ஆண்டில் தீவுமுழுவதும் உள்ள பிற துடிப்புமிக்க மூப்படைதல் மையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இதன்மூலம் 2030ஆம் ஆண்டிற்குள் 10,000 முதியோரைச் சென்றடைவது இலக்காகும்.

டான் டோக் செங் மருத்துவமனை, என்டியுசி ஹெல்த் ஆகியவற்றுடன் இணைந்து ‘ஃபேர்பிரைஸ் அறக்கட்டளை’ இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இரு அமர்வுகளாக நடைபெறும் இந்தப் பயிற்சியில், புரதம் மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்வது உட்பட முக்கிய ஊட்டச்சத்து முன்னுரிமைகள் குறித்து முதியோருக்குக் கற்பிக்கப்படும்.

மேலும், தசை இழப்பு, எலும்புத் தேய்மானம், கீழே விழுவது போன்ற முதுமை தொடர்பான பொதுவான பாதிப்புகளைத் தடுக்கும் முறைகளையும் அவர்கள் அறிந்துகொள்வர்.

500க்கும் மேற்பட்ட முதியோர்களிடமும் அவர்களது பராமரிப்பாளர்களிடமும் நடத்தப்பட்ட ஆய்வில், 86 விழுக்காடு முதியோர் வயது முதிரும்போது சத்தான உணவைச் சாப்பிட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருந்தாலும், அவர்களில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோரால் ஓர் ஆரோக்கியமான உணவுத் தட்டில் என்னென்ன இருக்க வேண்டும் என்பதை சரியாக அடையாளம் காண முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது

குறிப்புச் சொற்கள்
முதியோர்புரதம்ஆரோக்கியம்