முன்னோடித் தலைமுறையினர் 300,000 பேருக்கு ஜூலையில் $1,100 வரையிலான மெடிசேவ் நிரப்புதொகை: நிதியமைச்சு

முன்னோடித் தலைமுறையினர் 300,000 பேருக்கு ஜூலையில் $1,100 வரையிலான மெடிசேவ் நிரப்புதொகை: நிதியமைச்சு

2 mins read
மொத்தம் $150மி. நிரப்பப்படும்
ed7b88d3-672f-4ac9-9064-6832406169cb
சிங்பாஸ் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ள,  தகுதிபெற்ற முதியோர் ஜூன் 11ஆம் தேதிக்குள் இதுகுறித்த தகவலைப் பெறுவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300,000 சிங்கப்பூரர்கள் ஜூலை மாதத்தில் மெடிசேவ் நிரப்புதொகையாக 1,100 வெள்ளி வரை பெறுவர் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

1949ஆம் ஆண்டு அல்லது அதற்குமுன் பிறந்த சிங்கப்பூரர்கள் முன்னோடித் தலைமுறையினர் என்று அழைக்கப்படுகின்றனர்.

அவர்களின் மெடிசேவ் கணக்கில் இவ்வாறு தொகை நிரப்புவதற்கு மொத்தம் 150 மில்லியன் வெள்ளிக்குமேல் ஆகும் என்று ஜூன் 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அமைச்சு கூறியது.

மெடிஷீல்டு லைஃப், கேர்ஷீல்டு லைஃப், எல்டர்ஷீல்டு, மெடிசேவால் அங்கீகரிக்கப்பட்ட இதர காப்பீட்டுத் திட்டங்கள் ஆகியவற்றின் சந்தாத் தொகையைக் கட்ட மெடிசேவ் தொகையைப் பயன்படுத்தலாம்.

மருத்துவமனைச் சேர்க்கை, ‘டே சர்ஜரி’ எனப்படும் பகல்நேர அறுவை சிகிச்சை, தேர்ந்தெடுக்கப்பட்ட வெளி நோயாளி சிகிச்சைகள் போன்றவற்றுக்கான கட்டணத்திற்கும் மெடிசேவ் தொகையைப் பயன்படுத்த இயலும்.

பொருள் சேவை வரி பற்றுச்சீட்டுத் திட்டத்தின்கீழ் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும் வருடாந்தர நிரப்பு தொகைக்குமேல் இந்த மெடிசேவ் நிரப்பு தொகை வழங்கப்படுகிறது.

வரைபடம்:
வரைபடம்: - நிதியமைச்சு

சிங்பாஸ் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ள, தகுதிபெற்ற முதியோர் ஜூன் 11ஆம் தேதிக்குள் இதுகுறித்த தகவலைப் பெறுவர்.

செயலியைப் பதிவிறக்கம் செய்யாத, ஆனால் ஜூன் 9ஆம் தேதிக்குமுன் சிங்பாசில் தங்கள் கைப்பேசியைப் பதிவுசெய்யும் முதியோர் ஜூன் 11ஆம் தேதிக்குள் குறுஞ்செய்தியைப் பெறுவர். அவர்களுக்கு வழங்கப்படும் தொகை அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

எஞ்சிய முதியோர் ஜூன் மாத இறுதிக்குள் கடிதங்களைப் பெறுவர்.

மோசடிகளைத் தவிர்க்கும் நோக்கில், அந்தக் குறுஞ்செய்தியில் முதியோர் பெறவிருக்கும் பலன்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்கள் பதிலளிக்கவோ வேறு தகவல்களைத் தரவோ தேவையில்லை.

முன்னோடித் தலைமுறையினர், மெர்டேக்கா தலைமுறையினருக்கான திட்டங்கள் குறித்து வாட்ஸ்அப் அல்லது அதுபோன்ற தகவல் அனுப்பும் தளங்கள் வாயிலாக எந்தச் செய்தியும் அனுப்பப்படமாட்டாது என்று நிதியமைச்சு கூறியது.

வரைபடம்:
வரைபடம்: - நிதியமைச்சு

நான்கறை வீட்டில் தன் மகளோடு வசித்துவரும் திருவாட்டி அ.சாரதா, 85, மெடிசேவ் நிரப்புதொகையை வரவேற்றார்.

“மருத்துவச் செலவுகளைப் பொறுத்தவரை​ சிறு துளியும் பெறு வெள்ளம்.

“மத்திய சேம நிதி பெரிதும் உதவுகிறது. ஆனால் அதற்கும் வரம்பு உள்ளது. மருத்துவச் செலவுகள் தொடர்ந்து அதிகரிப்பதால் எதிர்காலம் பற்றி நான் கவலைப்படுகிறேன். இந்த நிரப்புதொகை உதவியாக இருக்கும் எனக் கருதுகிறேன்,” என்றார் அவர்.

தன் ஓய்வுக்கால சேமிப்பு மீதுள்ள பாரமும் இதனால் குறையும் என்றும் கூறிய அவர், “வயதாகும்போது ஏற்படும் சவால்களை அரசாங்கம் புரிந்துகொள்வதைக் கண்டு நிம்மதி அடைகிறேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்