முன்னாள் ‌பள்ளி வளாகத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளைக் கட்ட திட்டம்

முன்னாள் ‌பள்ளி வளாகத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளைக் கட்ட திட்டம்

2 mins read
fbbdb5f4-0f71-4530-8166-6d7d2d6f0f23
ஜுரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 21ல் முன்பு ‌ஷுச்சுன் உயர்நிலைப் பள்ளி இருந்த பகுதி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்பு ‌ஷுச்சுன் உயர்நிலைப் பள்ளி இருந்த பகுதியில் புதிய வீடுகளைக் கட்டத் திட்டமிடப்படுகிறது.

இந்த வீடுகள், தற்போது கட்டப்பட்டுவரும் தோ குவான் எம்ஆர்டி நிலையத்துக்கு சுமார் 400 மீட்டர் தொலைவுக்குள் அமைந்திருக்கும்.

நகர மறுசீரமைப்பு ஆணையம், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) 2025 பெருந்திட்டத்துக்கு மாற்றங்களைப் பரிந்துரைத்தது. அவற்றின்கீழ், வீடுகளைக் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இப்பகுதியின் பரப்பளவில் மாற்றங்களைச் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2025 பெருந்திட்டத்தின்படி, முன்பு ‌ஷுச்சுன் உயர்நிலைப் பள்ளி இருந்த பகுதி, வீடமைப்புத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இப்பகுதியின் நிலப் பரப்பளவு விகிதம் (plot ratio) 3.5ஆக உள்ளது. அதை 5.0ஆக உயர்த்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் இப்பகுதியில் வசிக்கவுள்ள குடியிருப்பாளர்கள், தங்கள் வீடுகள் தோ குவான் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் அமையவிருப்பதால் பலனடைவர் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் பரிந்துரையுடன் சமர்ப்பித்த குறிப்பில் சுட்டியது. தோ குவான் நிலையம், ஜூரோங் வட்டார ரயில் பாதையின் இரண்டாம் கட்டத்தில் இடம்பெறும் நிலையங்களில் ஒன்றாகும்.

ஜூரோங் வட்டார ரயில் பாதையின் இரண்டாம் கட்டத்தை 2028ஆம் ஆண்டு திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்பு ‌ஷுச்சுன் உயர்நிலைப் பள்ளி இருந்த பகுதியின் பரப்பளவு கிட்டத்தட்ட மூன்று ஹெக்டராகும். அது, நான்கு காற்பந்துத் திடல்களின் பரப்பளவுக்குச் சமமாகும்.

இப்பகுதி, யூஹுவா தொடக்கப் பள்ளி, கிரெஸ்ட் உயர்நிலைப் பள்ளி, யூஹுவா வில்லேஜ் ஈரச்சந்தை மற்றும் உணவங்காடி ஆகியவற்றுக்கு அருகே அமைந்துள்ளது.

இவ்வட்டாரத்தில் தற்போதுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில் பெரும்பாலானவை 1980களில் கட்டப்பட்டவை. அதனால் புதிதாகக் கட்டப்படும் வீடுகள் வட்டார அளவில் புத்துயிர் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‌ஷுச்சுன் உயர்நிலைப் பள்ளி, முதன்முதலில் துவான் செங் அரசாங்கப் பள்ளி எனும் பெயரில் 1925ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பிறகு 1985லிருந்து 2019ஆம் ஆண்டு வரை, தற்போது வீடமைப்புத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் செயல்பட்டு வந்தது.

2019ல் ‌ஷுச்சுன், யூஹுவா உயர்நிலைப் பள்ளியுடன் இணைக்கப்பட்டது. யூஹுவா உயர்நிலைப் பள்ளி, ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 14ல் அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்