ஹைட்ரஜனுக்கு உகந்த கூடுதல் மின்சார உற்பத்தி ஆலைகளை அமைக்க திட்டம்

ஹைட்ரஜனுக்கு உகந்த கூடுதல் மின்சார உற்பத்தி ஆலைகளை அமைக்க திட்டம்

2 mins read
0c23466c-a501-4abb-98e5-69c1cdb8f24b
மின்சாரத்துக்கான தேவையைப் பூர்த்திசெய்ய மேலும் மூன்று ஆலைகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹைட்ரஜன் வாயுவைக் கையாளக்கூடிய கூடுதலான இயற்கை எரிவாயு மின்சார உற்பத்தி ஆலைகளைக் கட்டுமாறு எரிசக்திச் சந்தை ஆணையம், எரிசக்தி நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

வருங்காலத்தில் சிங்கப்பூரின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நோக்கில் 2031, 2032ஆம் ஆண்டுகளில் அவற்றைக் கட்டுமாறு ஆணையம் கோருகிறது.

அந்த வகையில், 2032ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் ஹைட்ரஜனுக்கு உகந்த இயற்கை எரிவாயு மின்சார உற்பத்தி ஆலைகள் குறைந்தது 11 ஆலைகளாவது இருக்கும். 2025ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட அத்தகைய நான்கு ஆலைகளும் அவற்றில் அடங்கும்.

அத்தகைய ஆலை ஒன்றை 2031ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்குத் தயாராய் இருக்கும் வகையில் கட்டி முடிக்குமாறும் மேலும் இரண்டை 2032க்குள் தயார்நிலையில் இருக்கும் வகையில் கட்டி முடிக்குமாறும் ஆணையம், தனியார் துறைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அந்த ஆலைகள் ஒவ்வொன்றின் கொள்ளளவும் குறைந்தது 600 மெகாவாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஓர் ஆலையால் ஆண்டுதோறும் சுமார் 864,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) நான்கறை வீடுகளுக்கு மின்சாரம் விநியோகிக்க முடியும்.

கடந்த 2024ஆம் ஆண்டிலிருந்து எல்லா புதிய, மாற்றியமைக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஆலைகளும் மேலும் 10 விழுக்காட்டு அளவு ஆக்ககரமாகச் செயல்படவேண்டும். அதோடு, ஹைட்ரஜன் வருங்காலத்தில் எளிதில் பயன்படுத்தக்கூடிய நிலை வரும்போது ஆலைகள் கையாளும் இயற்கை எரிவாயுவில் குறைந்தது 30 விழுக்காட்டு அளவு ஹைட்ரஜனாக இருக்கவேண்டும்.

எரிக்கப்படும்போது ஹைட்ரஜன், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் கரியமில வாயுவை வெளியேற்றாது. அதனால் ஹைட்ரஜன், பசுமை எரிசக்தியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, இயற்கை எரிவாயு புதைபடிம எரிபொருளாகும்.

சிங்கப்பூரில் மின்சாரத்துக்கான தேவை கடந்த ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தொழில்துறை, மின்னிலக்கத் துறை ஆகியவற்றில் மின்சாரத்துக்கான தேவை அதிகம் இருப்பது அதற்கு முக்கியக் காரணம் என்று எரிசக்திச் சந்தை ஆணையம் அறிக்கை மூலம் தெரிவித்தது. எடுத்துக்காட்டாக, பகுதி மின்கடத்தி, தரவு நிலையங்கள் போன்றவற்றில் மின்சாரத்துக்கான தேவை அதிகம் இருக்கிறது.

இத்துறைகள், இனிவரும் பற்பல ஆண்டுகளில் தொடர்ந்து வளர்ச்சிகாணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்