தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக ஊடகச் சேவைகளை அணுகுவதற்கான வயது வரம்பை நீட்டிக்க தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (மார்ச் 2) நடைபெற்ற தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது தகவல், மின்னிலக்க மேம்பாட்டு; சுகாதாரத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் இதனைத் தெரிவித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக ஊடகச் சேவைகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூடுதல் விவரங்கள் இவ்வாண்டின் பிற்பகுதியில் அறிவிக்கப்படும் என்றும்அவர் சொன்னார்.
மேலும், சமூக ஊடகங்களுடன் இணைக்கப்பட்ட ‘சாட்பாட்’ சேவைகள் தனித்துவமான ஆபத்துகளை முன்வைக்கின்றன என்றும் அவர் சுட்டினார்.
செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு குறித்து பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹீ டிங் ரு கூறிய கருத்துக்கு பதிலளித்த திருவாட்டி ரஹாயு, “குழந்தைகள் உள்ளிட்ட பயனர்கள் அவற்றை மிக எளிதாக அணுக முடியும்,” என்று அதன் ஆபத்தையும் சுட்டினார்.
எனவே, செயற்கை நுண்ணறிவு ‘சாட்பாட்’களைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகளிலிருந்து பயனர்களைத் திறம்பட பாதுகாக்க, அவற்றுக்கான பாதுகாப்புகள் தேவையா என்பதை அமைச்சு ஆய்வு செய்துவருவதாகக் கூறினார்.
புதிய இணையப் பாதுகாப்பு ஆணையம்
இணையப் பாதுகாப்பு (உதவி, பொறுப்பு) மசோதாவின்கீழ் இவ்வாண்டின் முற்பாதியில் ஒரு புதிய இணையப் பாதுகாப்பு ஆணையம் நிறுவப்படும்.
இணையவழித் துன்புறுத்தல், ஒருவருடன் நெருக்கமாக இருக்கும்போது அனுமதியின்றி படமெடுத்து இணையத்தில் வெளியிடுவது, பாலியல் சார்ந்த படங்களை வைத்து குழந்தை துன்புறுத்தல், ஒருவரை அல்லது ஒரு நிறுவனத்தை அடையாளம் காணும் அளவுக்குத் தகவல்களை வெளியிடுதல், இணையம்வழி ஒருவரைப் பின்தொடர்தல் போன்ற ஐந்து கடுமையான இணையப் பாதிப்புகளைத் திருவாட்டி ரஹாயு பட்டியலிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை ஆணையம் மதிப்பிடும். பின்னர் தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கத்தை அணுகுவதை முடக்கவும் குற்றவாளிகளின் இணையக் கணக்கைக் கட்டுப்படுத்தவும் ஆணையம் வழிமுறைகளை வழங்க முடியும்,” என்றார்.
கடந்த ஆண்டு தகவல், மின்னிலக்க, மேம்பாட்டு அமைச்சு பெற்றோரிடம் நடத்திய இணையவழி ஆய்வில் பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், தங்கள் குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை நிர்வகிக்க உதவும் வலுவான சட்டம் போன்ற வழிகளில் கூடுதல் அரசாங்க ஆதரவை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தனர்.
“பெற்றோர் மற்றும் சமூகத்தின் கவலைகளைப் போக்க நாங்கள் முற்போக்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்,” என்று உறுதியளித்தார் திருவாட்டி ரஹாயு.

