பாண்டான் கார்டன்ஸ் பகுதியில் ஒலிம்பிக் விளையாட்டுகள் தரநிலைக்கேற்றப் பரப்பளவில் புதிய பனிச்சறுக்குக் கூடத்தை அமைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
புதிய பனிச்சறுக்குக் கூடத்தை அமைக்க எண் 200 பாண்டான் கார்டன்ஸ் பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. 1978ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திறக்கப்பட்ட அப்பகுதியில் முன்பு பாண்டான் கார்டன்ஸ் நீச்சல் நிலையம் அமைந்திருந்தது.
பாண்டான் கார்டன்ஸ் பகுதியில் புதிய பனிச்சறுக்குக் கூடம் அமைக்கப்படும் என்று சிங்கப்பூர் ஐஸ் ஹாக்கி சங்கம், சிங்கப்பூர் ஐஸ் சறுக்குச் சங்கம் இரண்டும் அண்மையில் வெளியிட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பனிச்சறுக்குக் கூடம் எங்கே கட்டப்படும் என்பதன் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஆண்டுதோறும் நடைபெறும் சிங்கப்பூர் ஐஸ் ஹாக்கி சங்கத்தின் நிர்வாகக் குழுச் சந்திப்பு சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியன்று நடந்தது. பாண்டான் கார்டன்சில் பனிச்சறுக்குக் கூடம் அமைக்கப்படும் என்று அந்தச் சந்திப்பில் பேசப்பட்ட தகவல்களைக் கொண்ட குறிப்பு ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டது. 10 + 10 ஆண்டுகால வாடகைக்கு பனிச்சறுக்குக் கூடம் செயல்படும் என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டது.
அதன்கீழ், 10 ஆண்டுகாலத்துக்கான வாடகை ஒப்பந்தம் நிறைவடைந்த பிறகு அதை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.
ஒலிம்பிக் தரநிலைக்கேற்ற பரப்பளவில் ஒரு பனிச்சறுக்குக் கூடமும் அதில் மூன்றில் ஒரு பங்கு பரப்பளவைக் கொண்ட சிறிய பனிச்சறுக்குக் கூடமும் பாண்டான் கார்டன்சில் அமைக்கப்படவுள்ளதாக சந்திப்பின் குறிப்பு ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளை வரும் மார்ச் மாதம் தொடங்கி 2026ஆம் ஆண்டிறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், பாண்டான் கார்டன்சில் பனிச்சறுக்குக் கூடத்தை அமைக்க 10 ஆண்டுகளுக்கும் மேல் நீடிக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டுவிட்டதாக சிங்கப்பூர் பனிச்சறுக்குச் சங்கம் சென்ற ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதியன்று அதன் உறுப்பினர்களுக்கு எழுத்து வடிவில் தெரியப்படுத்தியது.
சிங்கப்பூரில் ஒலிம்பிக் தரநிலைக்கேற்ற பரப்பளவில் ஒரு பனிச்சறுக்குக் கூடம் மட்டுமே இருந்தது. ஜூரோங் ஈஸ்ட் ஜேகியூப் மால் கடைத்தொகுதியில் இருந்த அது 2023 ஆகஸ்ட் மாதம் மூடப்பட்ட பிறகு சிங்கப்பூர் ஐஸ் ஹாக்கி சங்கம், சிங்கப்பூர் பனிச்சறுக்குச் சங்கம் ஆகிய இரண்டையும் சேர்ந்த விளையாட்டாளர்கள் பயிற்சி மேற்கொள்ள சரியான வசதி இல்லாமல் இருந்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
புதுப்பிப்புப் பணிகளுக்காக ஜேகியூப் மால் கடைத்தொகுதி மூடப்பட்டது.
பாண்டான் கார்டன்சில் புதிய பனிச்சறுக்குக் கூடம் அமைக்கப்பட்டால் அது, குளிர்கால விளையாட்டுகளில் ஈடுபடுவோரும் அதில் ஆர்வம் உள்ளவர்களும் பயிற்சிகள் மேற்கொள்ள கூடுதல் வசதியாக அமையும்.

