இணையவழி இணைப்புத்தள ஊழியர்கள் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாகத் தாங்கள் சம்பாதிப்பதைக் காட்டிலும் அதிகம் செலவிடுவதாக டிபிஎஸ் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க தாங்கள் முயன்றுவரும் வேளையில், தங்களின் செலவுகளுக்கான தேவையை ஈடுசெய்ய அவர்கள் தங்களின் சேமிப்புகளைப் பயன்படுத்த வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்களின் சேமிப்புகள் மேலும் குறைந்துள்ளதாகவும் அவை ‘ஆரோக்கியமற்ற’ நிலையில் இருப்பதாகவும் டிபிஎஸ் கூறியது.
மே மாதம் நடத்தப்பட்ட அந்த வருடாந்திர ஆய்வில், டிபிஎஸ் கணக்குகளில் சம்பளம் போடப்படும் 1.2 மில்லியன் சில்லறை வாடிக்கையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
விநியோக ஊழியர்கள், தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோர் இணையவழி இணைப்புத்தள ஊழியர்களில் அடங்குவர்.
அத்தகைய ஊழியர்களின் வருமானத்தைக் காட்டிலும் செலவு விகிதம் இவ்வாண்டு மே மாதம் 112 விழுக்காட்டுக்கு உயர்ந்தது. ஓராண்டுக்கு முன்னருடன் ஒப்பிடுகையில், அது 107 விழுக்காடாக இருந்தது என ஆய்வில் தெரியவந்தது.
2022ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் 88, 400 இணைப்புத்தள ஊழியர்கள் இருந்தனர். இங்குள்ள தொழிலாளர் ஊழியரணியில் ஏறக்குறைய 3.6 விழுக்காட்டினர் அந்த வகை ஊழியர்கள்.
2021ஆம் ஆண்டைக் காட்டிலும் அது 21 விழுக்காடு அதிகம். அப்போது 73,200 இணைப்புத்தள ஊழியர்கள் இருந்ததாக மனிதவள அமைச்சின் வருடாந்திர விரிவான தொழிலாளர் ஊழியரணி கருத்தாய்வில் தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
இணைப்புத்தள ஊழியர்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட மாதாந்திரச் சம்பளத்தைப் பெறுவதில்லை என்று ஜிஎக்ஸ்எஸ் வங்கி மின்னிலக்கப் பிரிவு ஒன்றின் தலைவர் ஜேன் ஒங் கூறினார்.
இத்தகைய ஊழியர்களுக்குப் பணப்புழக்கம் அக்கறைக்குரியதாக உள்ளது. அதனால் அவர்கள் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினங்களின் தாக்கத்தை அதிகம் உணரக்கூடும் என்றார் அவர்.
2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியிலிருந்து 30 வயதுக்குக் கீழ் உள்ள இணைப்புத்தள ஊழியர்கள் தங்கள் மத்திய சேமநிதிக் கணக்குகளில் பணம் போடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.