இணையவழி ஊழியர்களுக்கான மத்திய சேம நிதி சீரமைவு ஆதரவுத் திட்டத்தின்கீழ் (பிசிடிஎஸ்), ஆகஸ்ட் 22ஆம் தேதி மேம்பட்ட ஆதரவுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சம்பளத்தில் பிடித்தம் போக கையிலிருக்கும் தொகை குறித்த ஊழியர்களின் கவலையைக் குறைப்பது நோக்கம்.
மேம்பட்ட ஆதரவுத் திட்டங்களின் ஓர் அங்கமாக, கூடுதல் மத்திய சேம நிதி (மசேநி) செலுத்தவேண்டிய இளம் இணையவழி ஊழியர்கள், அவ்வாறு செலுத்தத் தாங்களாகவே முன்வந்தோர் ஆகியோரின் மசே நிதிக் கணக்குகளில், அதற்கான முதலாமாண்டில் அவர்கள் செலுத்தவேண்டிய முழுத் தொகையையும் அரசாங்கம் நிரப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1995ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகு பிறந்த இணையவழி ஊழியர்களுக்கும் அவர்களைவிட வயதான, ஆனால் தாங்களாகவே முன்வந்து கூடுதல் தொகையை மசே நிதிக் கணக்கில் நிரப்ப ஒப்புக்கொண்டோருக்கும் இது பொருந்தும்.
முன்னர், முதலாமாண்டில் 75 விழுக்காட்டுத் தொகையை அரசாங்கம் நிரப்பும் என்று கூறப்பட்டது.
2026ஆம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 50 விழுக்காட்டு ஆதரவு 75 விழுக்காட்டுக்கு உயர்த்தப்படும்.
2027ல் 50 விழுக்காட்டு ஆதரவும், இறுதியாக 2028ல் 25 விழுக்காட்டு ஆதரவும் வழங்கப்படும்.
அத்துடன், இணையவழி ஊழியர்களுக்கான வலுவான பாதுகாப்புத் திட்டங்களும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நடப்புக்கு வரும்.
தொடர்புடைய செய்திகள்
அவற்றில் சில திட்டங்கள், இந்த ஆண்டுப் பிற்பாதியில் தொடங்கும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அனைத்துத் திட்டங்களுக்கும் ஒரே தொடக்கத் தேதி என்பது இணையவழி ஊழியர்களுக்கும் அவர்களின் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் நிறுவனங்களுக்கும் மேலும் வசதியாக இருக்கும் என்று மனிதவள அமைச்சு கூறியது.
பிசிடிஎஸ் திட்டத்துக்குத் தகுதிபெறுவதற்கான மாதச் சம்பள வரம்பு 2,500 வெள்ளியிலிருந்து 3,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.
2025 ஜனவரி 1ஆம் தேதி நடப்புக்கு வரும் மற்ற முக்கிய மாற்றங்களில், இணையவழி ஊழியர்களின் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் நிறுவனங்கள், மற்ற முதலாளிகளுக்கு ஈடாக மசே நிதிப் பங்களிப்பையும் வேலைநேரத்தில் ஏற்படும் காயங்களுக்கான இழப்பீட்டையும் செலுத்த வேண்டும் என்பதும் அடங்கும்.
இணையவழி ஊழியர்களுக்கான பிரதிநிதித்துவ அமைப்புகளை உருவாக்குவதற்கான அனுமதியும் அதே தேதியில் நடப்புக்கு வரும்.
இந்த மேம்பட்ட ஆதரவுத் திட்டங்கள், இணையவழி ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் போக கையிலிருக்கும் தொகை மீதான தாக்கத்தை மட்டுப்படுத்த உதவும் என்று மனிதவள மூத்த துணையமைச்சர் கோ போ கூன் ஆகஸ்ட் 22ஆம் தேதி கூறினார்.
ராபின்சன் ரோட்டில் உள்ள ‘ஃபுட்பாண்டா’ தலைமையகத்துக்கு வருகையளித்தபோது டாக்டர் கோ புதிய மாற்றங்கள் குறித்து அறிவித்தார்.