இணையவழி ஊழியர்களுக்குப் பலன்களை அள்ளித்தரும் மசோதா நிறைவேறியது

இணையவழி ஊழியர்களுக்குப் பலன்களை அள்ளித்தரும் மசோதா நிறைவேறியது

2 mins read
ef7ebc72-f054-45c3-81d1-ff10b01b2697
உத்தேசச் சட்டத்தின்படி, இதர ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற மத்திய சேம நிதி பங்களிப்புகளை இணையவழி ஊழியர்களும் பெறுவர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இணையவழி ஊழியர்களை தனித்துவமான ஊழியர் வர்க்கம் என வகைப்படுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதா சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

அதனால், இணையம் சார்ந்த பணிகளில் ஈடுபடும் டாக்சி ஓட்டுநர்கள், தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள், தன்விருப்ப விநியோக ஊழியர்கள் ஆகியோருக்கு 2025 ஜனவரி 1 முதல் மேம்பட்ட வேலைப் பாதுகாப்புகள் கிடைக்கும்.

ஊழியர், சுயதொழில் புரிவோர் என்னும் இரு அம்சங்களுக்கு இடையிலான தனித்துவ ஊழியர்களாக இணையவழி ஊழியர்கள் கருதப்படுவர்.

சிங்கப்பூரில் ஏறத்தாழ 70,500 இணையவழி ஊழியர்கள் உள்ளனர்.

அந்த வலுவான ஊழியர் குழு, புதிய சட்டத்தின்கீழ் அதிகமான மத்திய சேம நிதி பங்களிப்புகளைப் பெறும். இதர எல்லா ஊழியர்களுக்கும் அவர்களின் முதலாளிகள் வழங்கும் அதே விகிதத்தில் அவர்களுக்கும் மசே நிதி பங்களிப்புகள் கிடைக்கும்.

இணையவழி நிறுவனங்கள் பணியின்போது காயமடையும் தங்களது ஊழியர்களுக்கு வழங்கும் இழப்பீடுகளை முறைப்படுத்த வேண்டிய அவசியம் இனி ஏற்படும்.

சாதாரணமாக ஓர் ஊழியருக்கு அளிக்கப்படுவதைப் போன்ற இழப்பீட்டு காப்புறுதித் திட்டங்களை இணையவழி ஊழியர்களும் பெறும் வகையில் அவற்றை அந்த நிறுவனங்கள் முறைப்படுத்த வேண்டும்.

நடப்பில் உள்ள சட்டங்களின்கீழ், இணையவழி ஊழியர்கள் தொழிற்சங்கத்தில் இணைய இயலாது என்பதால் அவர்களைப் பிரதிநிதிக்கும் அமைப்புகள் இணையவழி வேலைச் சங்கங்கள் என்றழைக்கப்படும் தொழிற்சங்கங்களை நிறுவிக்கொள்ளலாம்.

தொழிற்சங்கங்கள் பெற்றிருக்கும் அதே அதிகாரங்கள் அவற்றுக்கும் கிடைக்கும்.

ஊழியர் நலனுக்கான பேச்சுவார்த்தையில் அவர்கள் ஈடுபடலாம்; இணையவழி நிறுவனங்களுடன் சட்டப்படியான ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம்.

ஊழியர் பிரச்சினையில் நிறுவனங்களின் முடிவு நியாயமற்றது எனக் கருதினால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் உரிமையும் அவர்களுக்குக் கிடைக்கும்.

இணையவழி ஊழியர் நலனில் அக்கறை செலுத்தும் மசோதாவை அறிமுகம் செய்வதற்கான பணிகள் 2021 முதல் மூன்றாண்டுகளாக நீடித்தன.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இருதரப்பினரின் ஆதரவையும் அந்த மசோதா பெற்றது.

அந்த உத்தேசச் சட்டத்தை ஆதரித்து, கடந்த இரு நாள்களாக 26 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசினர். அத்துடன் அது தொடர்பான பல கேள்விகளையும் எழுப்பினர்.

புதிய சட்டத்தின் அமலாக்க விவரங்கள், இணையவழி ஊழியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பாதுகாப்புகளுக்கு ஆகும் செலவுகள் போன்றவை அவர்கள் எழுப்பிய அக்கறைக்குரிய அம்சங்களில் சில.

இணையழி ஊழியர்களை தனித்துவமான ஊழியர்களாக வகைப்படுத்தி, அவர்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு அளிக்கும் முதல் நாடு சிங்கப்பூர் என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்