இணையவழி ஊழியர்களுக்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்

2 mins read
7778f55a-b002-41a7-bff6-3babad06c4ab
2023ஆம் ஆண்டிற்கான மனிதவள அமைச்சின் தரவுகளின்படி, சிங்கப்பூரில் 70,500 இணையவழி ஊழியர்கள் இருந்தனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாடகை கார் ஓட்டுநர்களையும் தன்விருப்ப விநியோக ஊழியர்களையும் தனித்துவமான சட்டப் பிரிவிற்குள் கொண்டு வரவும் ஊழியர் பாதுகாப்புகளை அவர்களுக்கு அளிக்கவும் கூடிய மசோதா ஒன்று நாடாளுமன்ற விவாதத்திற்காக திங்கட்கிழமை (செப்டம்பர் 9) தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மசோதா நிறைவேறினால், 2025 ஜனவரி 1 முதல் அது சட்டவடிவம் பெறும்.

1995 ஜனவரி 1க்குப் பிறகு பிறந்த இணையவழி ஊழியர்கள் மற்றும் மூத்த ஊழியர்களின் மத்திய சேம நிதிக் கணக்குகளில் போடப்படும் தொகையின் அளவை அதிகரிக்க அந்த மசோதா உத்தேசிக்கிறது.

மேலும், அத்தகைய ஊழியர்கள் பணியின்போது காயமடையும்போது அதற்கு வழங்கப்படும் இழப்பீடுகளை இதர ஊழியர்களுக்கு வழங்கப்படுவதற்கு ஏற்ற வகையில் முறைப்படுத்தவும் மசோதா எண்ணுகிறது.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளைப் போன்ற அமைப்புகள் வாயிலாக இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க அந்த ஊழியர்களால் பேரம் பேசமுடியும்.

இணையம் மூலம் இயங்கும் தனியார் வாடகை கார் மற்றும் டாக்சி ஓட்டுநர், தன்விருப்ப விநியோக ஊழியர் போன்ற வேலைகளைச் செய்வோர் இணையவழி ஊழியர்கள் என்னும் வரையறைக்குள் வருகிறார்கள்.

2023ஆம் ஆண்டிற்கான மனிதவள அமைச்சின் தரவுகளின்படி, சிங்கப்பூரில் 70,500 இணையவழி ஊழியர்கள் இருந்தனர். மொத்த ஊழியரணியில் அவர்களின் விகிதம் 3 விழுக்காடு.

அவர்களில் 22,200 பேர் டாக்சி ஓட்டுநர்கள்; 33,600 பேர் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள்; 14,700 பேர் விநியோக ஊழியர்கள்.

புதிய மசோதா அவர்களின் நலன் மீது கவனம் செலுத்தும்.

2023ஆம் ஆண்டு இணையவழி ஊழியர்களுக்கான இழப்பீட்டுக் கொள்கையை வகுக்க, முத்தரப்புக் கட்டமைப்பை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டபோது 13 இணையவழி நிறுவனங்களை மனிதவள அமைச்சு பட்டியலிட்டது.

கிராப், கோஜெக், டடா, ரைட் ஆகிய தனியார் வாடகை கார் நிறுவனங்கள், ஸிக் இணையத்தளத்தை நடத்தும் கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி நிறுவனம், டெலிவரூ, ஃபுட்பாண்டா போன்ற உணவு விநியோக நிறுவனங்கள், அமேசான் இணைய வர்த்தக நிறுவனம், கோகோஎக்ஸ், லாலாமூவ், பிக்அப், யுபார்சல், டெலிபோர்ட் போன்ற பொட்டல விநியோக நிறுவனங்களும் அந்தப் பட்டியலில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்