‘பிளே இட் ஃபார்வர்ட் விழா 2026’ எனும் திட்டத்தை கிட்ஸ்டார்ட் சிங்கப்பூரும் எஸ்பி குழுமமும் இணைந்து தொடங்கியுள்ளன. விளையாட்டுகளுக்கான அனைத்துலகத் தினத்தை முன்னிட்டு இத்திட்டம் சனிக்கிழமையன்று (ஜூன் 13) அறிமுகப்படுத்தப்பட்டது.
வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த, குறைவான வளங்களைக் கொண்ட சிறுவர்களின் மேம்பாட்டுக்கு ஆதரவு வழங்க நீடித்த நிலைத்தன்மை, அர்த்தமுள்ள விளையாட்டு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதுவே கிட்ஸ்டார்ட் சிங்கப்பூரின் முதல் விளையாட்டுப் பொருள் பரிமாற்றத் திட்டம்.
இத்திட்டத்தில் பங்கெடுக்கும் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் $1.1 மில்லியன் நன்கொடை வழங்குவதாக எஸ்பி குழுமம் உறுதி செய்துள்ளது. சமூக உண்டியல் மூலம் இந்த நன்கொடை வழங்கப்படும்.
இந்த நிதி மூலம் 2,700 குடும்பங்களுக்குக் கற்றல் வளங்கள், 150 குடும்பங்களுக்கு விளையாட்டுப் பயிலரங்குகள், பாலர் கல்வியறிவுக்கு ஆதரவு வழங்க புத்தகப் பேழைகள் மற்றும் நூல்கள், சிறாரின் மேம்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ற இலக்கு நோக்கிய உதவி ஆகியவை கிடைக்கும்.
2021ஆம் ஆண்டு முதல் இதுவரை கிட்ஸ்டார்ட்டிற்கு எஸ்பி குழுமத்தின் மொத்த பங்களிப்பு $5.4 மில்லியனாகும்.
திட்ட நடவடிக்கைகள், பெற்றோருக்கான நடைமுறைக்கு ஏற்ற வளங்கள் ஆகியவை மூலம் கற்றலலை வடிவமைக்கும், தன்னம்பிக்கையை மேம்படுத்தும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேலோங்கச் செய்யும் எளிய, புத்தாக்கமிக்க, நீடித்த நிலைத்தன்மைமிக்க வழிவகைகளைக் குடும்பங்கள் ஆராய்ந்தனர்.
‘பிளே இட் ஃபார்வர்ட் விழா 2026’ அறிமுக நிகழ்வில் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் ஸுல்கர்னாயின் அப்துல் ரஹீம் கலந்துகொண்டார். இந்நிகழ்வு சீனக் கலாசார மையத்தில் நடைபெற்றது. இதில் 200க்கும் அதிகமான கிட்ஸ்டார்ட் குடும்பங்கள் பங்கெடுத்தன.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, பிள்ளைகள் பயன்படுத்திய பழைய விளையாட்டுப் பொருள்களை கிட்ஸ்டார்ட் குடும்பங்கள் கொண்டு வந்தன. இந்த விளையாட்டுப் பொருள்களை எஸ்பி ஹாட் பணியாளர்கள் என்று அழைக்கப்படும் எஸ்பி குழும ஊழியர்களைக் கொண்ட தொண்டூழியர்க் குழு சரிபார்த்துச் சுத்தம் செய்தது.
விளையாட்டுப் பொருள் பரிமாற்றத்தில் ஏறத்தாழ 500 சிறுவர்கள் பங்கெடுத்தனர்.

