வாழ்நாள் முழுவதும் தமிழைச் செழிப்புறச் செய்ய உறுதி

வாழ்நாள் முழுவதும் தமிழைச் செழிப்புறச் செய்ய உறுதி

3 mins read
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் உன்னத விருது 2026
d98b8da1-47bc-43c4-a444-3be88ba07426
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் மிக உயரிய விருதான உன்னத விருதை 17 வயது மாணவி முருகானந்தம் புகழினி இவ்வாண்டு வென்றார். - படம்: யோகிதா அன்புச்செழியன்

தமது சொந்த ஆசிரியர்கள் அளித்த வாய்ப்புகளால் ஈர்க்கப்பட்டு, வருங்காலத்தில் சிறந்த தமிழாசிரியராக வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகிறார் 17 வயது முருகானந்தம் புகழினி.

தமிழ் இலக்கியம் பயின்றபோது சக மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க தமது ஆசிரியர்கள் அளித்த ஊக்குவிப்பு, கற்பிக்கும் கலையின்மீது இவருக்கு ஆர்வத்தைத் தூண்டியது. மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதையும், குறிப்பாக இலக்கியத்தைக் கற்பிப்பதையும் தாம் மிகவும் விரும்புவதை அந்த அனுபவங்களின்மூலமே உணர்ந்ததாக இவர் கூறினார்.

தமிழ்மொழி மீதான இந்த ஆழமான ஈடுபாடே, 2026ஆம் ஆண்டுக்கான உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் உயரிய ‘உன்னத விருதை’ இவர் வெல்லக் காரணமாக அமைந்தது.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் மிக உயரிய விருதான உன்னத விருதை 17 வயது மாணவி முருகானந்தம் புகழினி இவ்வாண்டு வென்றார்.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் மிக உயரிய விருதான உன்னத விருதை 17 வயது மாணவி முருகானந்தம் புகழினி இவ்வாண்டு வென்றார். - படம்: யோகிதா அன்புச்செழியன்

“என் ஆசிரியர்கள் எனக்குப் பல்வேறு வாய்ப்புகளை வழங்கினர். அந்த வாய்ப்புகள் மூலமாகவே, மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதும், குறிப்பாக இலக்கியத்தைக் கற்பிப்பதும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதை உணர்ந்தேன்,” என்று புகழினி கூறினார்.

தாம் கற்றுக்கொடுப்பதை சக மாணவர்கள் புரிந்துகொண்டு, தமிழ்மீது ஆர்வம் கொள்வது தமக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் பயிலும் புகழினியின் குடும்பத்திலும் தமிழ் செழித்து வளர்கிறது. பெற்றோர் நாளும் தமிழிலேயே உரையாடுவது தமக்கு கூடுதல் பலமாக இருப்பதாக இவர் கூறினார்.

ஆங்கிலம் அதிகம் பேசும் தமது 12 வயது தம்பிக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தபோது, தாய்மொழி மீதான ஆர்வம் மேலும் அதிகரித்ததாகப் புகழினி சொன்னார்.

“என் தம்பியும் என்னை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு, இப்போது உயர்தமிழ் எடுத்துப் படிக்கிறான்,” என்று பெருமையுடன் இவர் கூறினார்.

இலக்கியம் கற்பதன்மூலம் தம்மைப் பற்றியும் புதிதாக நிறைய தெரிந்துகொள்வதாக இவர் நம்புகிறார்.

கல்வியில் சிறந்து விளங்குவதோடு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் இவர் தடம் பதித்துள்ளார். 2024ஆம் ஆண்டு உயர்நிலை 1ல் பயிலும் மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பொங்கல் விழாவின்போது மேடையேறி ஒயிலாட்டம் ஆடியதுடன், மேடை நாடகங்களிலும் தமது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தேசிய அளவிலான ‘நற்றமிழ் உரைக்களம்’ போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் வென்றது தமக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்ததாகவும் புகழினி சொன்னார்.

பல்வேறு தலைமைத்துவப் பதவிகளில் பணியாற்றியுள்ள புகழினி, ஒரு நல்ல தலைவர் மற்றவர்கள் சொல்வதைச் செவிமடுக்க வேண்டும் என்று நம்புகிறார். அதேவேளையில், தவறுகளை ஏற்றுக்கொண்டு அவற்றைத் திருத்திக்கொள்ளும் பொறுப்புணர்ச்சியும் அவசியம் என்று இவர் வலியுறுத்துகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்உமறுப்புலவர் அரங்கில் மூத்த மாணவி ஒருவர் விருது பெற்றதைப் பார்த்த தருணமே, தாமும் இந்த விருதை வெல்ல வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியதாக இவர் கூறினார்.

“நாலாண்டு உழைப்பிற்கு ஓர் அங்கீகாரம் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் இவர்.

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் மிக உயரிய விருதான உன்னத விருதை 17 வயது மாணவி முருகானந்தம் புகழினி இவ்வாண்டு வென்றார்.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் மிக உயரிய விருதான உன்னத விருதை 17 வயது மாணவி முருகானந்தம் புகழினி இவ்வாண்டு வென்றார். - படம்: யோகிதா அன்புச்செழியன்

எதிர்காலத்தில் சமூகத்துக்கு உதவ வேண்டும் என விரும்பும் புகழினி, போர் நடைபெறும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவுவதோடு, உலகெங்கும் தேவையுள்ளவர்களின் குரலாகவும் ஒலிக்க விரும்புகிறார். உமறுப்புலவர் நிலையத்தின் புதிய வளாகத்துக்குச் சென்று தன்னார்வலராகப் பணியாற்றுவதுடன், இளைய மாணவர்களுக்கு வழிகாட்டவும் இவர் திட்டமிட்டுள்ளார்.

உடை உடுத்துவதில் தொடங்கி உணவு, உரையாடல் என அனைத்திலும் தமிழை இணைத்து, தமது வாழ்நாள் முழுவதும் தாய்மொழியை வாழவைக்க இவர் உறுதிகொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்