தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிளவுபட்ட உலகில் சிங்கப்பூரின் ஒற்றுமை விலைமதிப்பற்ற சொத்து: பிரதமர் வோங்

3 mins read
b164b5f6-7e43-4192-b873-3f1268088531
சீனப் புத்தாண்டுச் செய்தியை வெளியிட்ட பிரதமர் வோங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

பிளவுபட்ட உலகில் சிங்கப்பூர் ஒரே குடும்பமாக ஒற்றுமையுடன் திகழ்வது விலைமதிப்பற்ற சொத்து என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தமது சீனப் புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்து உள்ளார்.

சிங்கப்பூரில் பன்முகத்தன்மையைக் கொண்டாடவும் சிங்கப்பூரர்களிடையே ஒற்றுமையைப் பேணவும் விழாக்காலம் ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் அவர் அந்தச் செய்தியில் குறிப்பிட்டு உள்ளார்.

பிரதமராக அவர் விடுத்திருக்கும் முதல் சீனப் புத்தாண்டுச் செய்தி இது.

வெவ்வேறு இனம், சமயத்தைச் சேர்ந்த சிங்கப்பூரர்களுடன் ஈடுபாடு கொள்ள கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு திரு வோங் வலியுறுத்தி உள்ளார்

அத்துடன், இருதரப்புப் புரிதலை ஆழப்படுத்த முயலுமாறும் சிங்கப்பூர் குடும்பத்திற்கான பொது வெளியை விரிவுபடுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

“பல நற்செய்திகளுடன் கடல்நாக ஆண்டுக்கு சிங்கப்பூர் விடைகொடுக்கிறது. பொருளியல் வலுவாக உள்ளது, பணவீக்கம் தணிந்துள்ளது, வேலையின்மை தொடர்ந்து குறைவாக உள்ளது, ஏராளமான சிங்கப்பூரர்கள் அதிக சம்பள உயர்வை பெறுகிறார்கள்,” என்றார் நிதி அமைச்சருமான திரு வோங்.

குடும்பங்களே சமூகத்தின் அடித்தளம் என்பதால், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் குடும்பங்களுக்கான ஆதரவை அரசாங்கம் வழங்கும் என்றார் அவர்.

சிங்கப்பூர் என்னும் பெரிய குடும்பம் பற்றி குறிப்பிடுகையில், சமூகத்தின் பன்முகத்தன்மையே நமது பலத்தின் ஆதாரம் என்றார் அவர்.

“பிளவுகள் அதிகரித்து வரும் உலகில், நமது ஒற்றுமையே விலைமதிப்பற்ற சொத்து. அதனைப் பேணி, பாதுகாப்பதை நாம் தொடர வேண்டும்,” என்று திரு வோங் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதக் குழுக்கள் தங்களது செயலை விரிவுபடுத்த மத்திய கிழக்கு பூசலைப் பயன்படுத்திக்கொள்ளும் அதே சமயம் பல்வேறு நாடுகளில் பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழ்வதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் வோங், உலகம் ஆபத்து மிகுந்ததாக மாறி வருகிறது என்றார்.

இம்மாதத் தொடக்கத்தில் சுய தீவிரவாதச் சித்தாந்தத்துக்கு ஆளான மூன்று சிங்கப்பூரர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அவர் நினைவூட்டினார்.

இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட மத்திய கிழக்கிற்குப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த அந்த மூவரும் இஸ்ரேல்-ஹமாஸ் பூசலால் உந்தப்பட்டவர்கள் என்றார் அவர்.

நிறுவன இயக்குநர், பாதுகாவலர், மெக்கானிக் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்ட மூவர்.

எந்த ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கும் எதிராக அரசாங்கம் தொடர்ந்து விழிப்புடன் இருக்கும் என்று குறிப்பிட்ட திரு வோங், இங்கும் தாக்குதல் நடைபெறக்கூடும் என்பதற்கான சாத்தியத்திற்கு சிங்கப்பூரர்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

“அவ்வாறு நிகழ்ந்தால் நாம் அனைவரும் ஒரே மக்களாக உறுதியுடன் ஒன்றிணைந்து நிற்கவேண்டும்.

“அதுபோன்ற சவால்கள் நமது சமூகத்தின் கட்டமைப்பைப் பலவீனப்படுத்திவிடக் கூடாது. மாறாக, நமது நல்லிணக்கத்தையும் வாழ்க்கைமுறையையும் பாதுகாக்க நமது மனஉறுதியை அவை வலுப்படுத்த வேண்டும்,” என்று பிரதமர் வோங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரர்கள் அவசியமாகக் கருதும் அம்சங்களின் மையமாக குடும்பங்கள் தொடர்ந்து இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், திருமணம் புரிவது, குழந்தை பெறுவது, குடும்பத்தை உருவாக்குவது போன்றவற்றுக்கு முன்னுரிமை தருவதைத் தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

இன்றைய வேகமான, போட்டி மிகுந்த உலகில் வேலை, வாழ்க்கை சமநிலை என்பது கடினமான ஒன்றாகிவிட்டது என்றார் அவர்.

வருங்காலத்துக்கான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளுடன் பாம்பு ஆண்டை சிங்கப்பூர் தொடங்குவதாக திரு வோங் குறிப்பிட்டார்.

சீனர்களின் நாட்காட்டியில், பாம்பு என்பது அறிவாற்றலையும் தாங்கும் சக்தியையும் குறிப்பதாகத் தெரிவித்த அவர், நிச்சயமற்ற போக்குகளையும் சவால்களையும் சமாளிக்க அத்தகைய குணங்கள் குடியரசுக்குத் தேவை என்றார்.

குறிப்புச் சொற்கள்