இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இந்தியப் பிரதமர் நநேரந்திர மோடிக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அது குறித்த தகவல்களை வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கும் திரு மோடிக்கும் சிங்கப்பூர் சார்பாகத் தமது இரங்கலை பிரதமர் லீ தெரிவித்தார்.
மும்பையில் இருக்கும் சிங்கப்பூர்த் தூதரகம் உள்ளூர் அதிகாரிகளோடு தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சு கூறியது.
இதுவரை சிங்கப்பூரர்கள் யாரும் அந்த விபத்தில் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் ஏதும் இல்லை.
ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ( ஜுன் 2) இரவு இரண்டு பயணிகள் ரயில்கள் பெரும் விபத்தில் சிக்கிக்கொண்டன. அதில் 288 பேர் மாண்டனர், கிட்டத்தட்ட 700 பயணிகள் காயமடைந்தனர். 56 பேருக்கு கடுமையாக காயங்கள் ஏற்பட்டுள்ளன.
ஒடிசா ரயில் விபத்து குறித்து பிரெஞ்சு அதிபர் மக்ரோன், கனடியப் பிரதமர் ஜஸ்டின் டூருடோ, அமெரிக்க அதிபர் பைடன் உட்பட பல உலகத் தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.


