தாய்லாந்து புதிய பிரதமருக்கு சிங்கப்பூர் பிரதமர் வாழ்த்து

1 mins read
9daf5997-5f80-441d-887e-4b372067cc32
திருவாட்டி பேடோங்டார்ன் ஷினவாத் ஆகஸ்ட் 16ஆம் தேதி தாய்லாந்தின் பிரதமராக நியமிக்கப்பட்டார். - படம்: இபிஏ

பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத்தின் தலைமைத்துவத்தின்கீழ் தாய்லாந்து தொடர்ந்து முன்னேறும், செழிப்புறும் என்பதைத் தாம் உறுதியாக நம்புவதாக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.

திரு வோங், ஆகஸ்ட் 20ஆம் தேதி எழுதிய கடிதத்தில் தாய்லாந்தின் பிரதமராகப் பதவியேற்றதற்கு திருவாட்டி ஷினவாத்துக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்.

இருநாடுகளும் வலுவான உறவைப் பகிர்ந்துகொள்வதாகவும் திரு வோங் கூறினார்.

“சிங்கப்பூரும் தாய்லாந்தும் திடமான பொருளியல் உறவு, வலுவான தற்காப்பு ஒத்துழைப்பு, வழக்கமான அரசியல், மக்கள் தொடர்பு ஆகியவற்றோடு நீண்டகால, பன்முக உறவுகளைப் பகிர்ந்துகொள்கின்றன,” என்றார் அவர்.

“இந்த வலுவான பங்காளித்துவம் பல தலைமுறைத் தலைவர்களால் உருவானது. பல்லாண்டுகளில் அது வளர்ச்சியடைந்துள்ளது,” என்றும் திரு வோங் கூறினார்.

திருவாட்டி ஷினவாத், 37, ஆகஸ்ட் 16ஆம் தேதி தாய்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் அந்நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் தாய்லாந்தின் ஆக இளையப் பிரதமராகத் திகழ்கிறார்.

இரண்டு நாடுகளும் தூய்மையான எரிசக்தி, நீடித்த நிலைத்தன்மை, மின்னிலக்கப் பொருளியல் உள்ளிட்ட கூட்டு முயற்சிகளுக்கான புதிய அம்சங்களைத் தொடர்ந்து ஆராய்வதாகத் திரு வோங் கூறினார்.

“சிங்கப்பூருக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான நட்புறவு, வரும் ஆண்டுகளில் தொடர்ந்து வலுப்பெற்று செழிப்புறும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்