பிரதமர் லாரன்ஸ் வோங் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் ‘சிங்கப்பூரர்கள் அனைவருக்குமானது’ என்று கூறியுள்ளார்.
வரவுசெலவுத் திட்ட ம் 2025ஐச் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அவர் உரையாற்றுவார்.
‘மேம்பட்ட எதிர்காலத்திற்கு ஒன்றிணைந்து முன்னேறுவோம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள கோப்பு ஒன்றைக் கையில் வைத்திருப்பது போன்ற படத்தைத் திங்கட்கிழமை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
“உங்கள் அனைவரையும் உள்ளடக்கிய வரவுசெலவுத் திட்டமாக இது இருக்கும். மேலும் வலுவான, மேலும் ஒன்றுபட்ட சமூகத்திற்கான நமது #முன்னேறும் சிங்கப்பூர்த் திட்ட முயற்சியை மேம்படுத்தவும் இது உதவும்,” என்று திரு வோங் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“மேம்பட்ட எதிர்காலத்துக்கு நாம் அனைவரும் இணைந்து முன்னேறுவோம்!” என்று பிரதமர் அதில் கூறியுள்ளார்.
பிரதமரின் வரவுசெலவுத் திட்ட உரை இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று நிதியமைச்சு பிப்ரவரி 3ஆம் தேதி தெரிவித்தது.
https://www.mof.gov.sg/singaporebudget என்ற இணையப் பக்கத்தில் நேரலைக்கான இணைய முகவரியைப் பெறலாம்.
பிரதமரின் உரையை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இணையப் பக்கத்திலும் நேரலையில் காணமுடியும்.
தொடர்புடைய செய்திகள்
திரு லாரன்ஸ் வோங் பிரதமராகப் பதவியேற்ற பிறகு வெளியிடும் முதல் வரவுசெலவுத் திட்டம் இது.
வாழ்க்கைச் செலவினம், வேலைப் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் அவரது உரையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற ஆண்டு (2024) நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, மக்கள் தங்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் மேம்பட்ட வருவாய் பெறுவதை உறுதிசெய்துகொள்ளவும் உதவும் வகையில் 2025ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் அமையும் என்று பிரதமர் கூறினார்.
மேலும், வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களிலும் சிங்கப்பூரர்களுக்கு ஆதரவு வழங்குவது குறித்து இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் ஆராயும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.