சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கு ஆதரவாகவும் உள்ளூர் ஊழியர்களுக்குத் துணையாகவும் வெளிநாட்டு ஊழியர்கள் வரவேற்கப்பட்டாலும், அவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் கவனமாகவும் கட்டுப்பாட்டுடனும் நிர்வகிக்கப்படும் என பிரதமர் லாரன்ஸ் வோங் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாடு அதன் 61வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) தேசிய தினப் பேரணி உரையில் சிங்கப்பூரின் எதிர்காலத்தை கட்டமைக்கும் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசினார் திரு வோங்.
அதில் வெளிநாட்டு ஊழியர்கள் சார்ந்த கொள்கைகள் குறித்து விவரித்தார் அவர்.
‘‘வரவிருக்கும் ஆண்டுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையும் ஊழியரணியின் எண்ணிக்கையும் முந்தைய ஆண்டுகளை விட மெதுவான வேகத்திலேயே வளர்ச்சி அடையும்,’’ என்று குறிப்பிட்ட பிரதமர், ‘‘எந்தச் சூழ்நிலையிலும் சிங்கப்பூரர்களே நாட்டின் பெரும்பான்மை மக்களாக இருப்பதை அரசு உறுதி செய்யும்,’’ என்றார்.
வேலை அனுமதி அட்டை கொள்கையில் தளர்வு இல்லை
சேவைத் துறையில் உள்ளூர்வாசிகள் செய்ய விரும்பாத பணிகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கான கொள்கைகளைத் தளர்த்த வேண்டும் என்று தொழில்துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதையும் உரையின்போது சுட்டிக்காட்டினார் திரு வோங்.
‘‘இருப்பினும், சிங்கப்பூரில் ஏற்கெனவே வேலை அனுமதி அட்டை வைத்துள்ள வெளிநாட்டு ஊழியர்களே அதிக எண்ணிக்கையிலான பிரிவினராக உள்ளனர். இதனால் தற்போதைய கொள்கைகளில் மிகச் சிறிய தளர்வை ஏற்படுத்தினாலும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துவிடும் என்பதால், அத்தகைய முடிவை அரசு எடுக்காது,’’ என்று தெரிவித்தார்.
தொழில்நுட்பம் உற்பத்தித்திறன் வழி வளர்ச்சி
வெளிநாட்டு ஊழியர் கொள்கைகளில் அரசு கொண்டிருக்கும் நிலையை விளக்கிய அவர், மாறிவரும் இந்த யதார்த்த சூழலுக்கு ஏற்ப தொழில்துறையினரும் மக்களும் தங்களை மாற்றிக்கொள்வது அவசியமாகிறது என்றார்.
இனிவரும் காலங்களில் நாட்டின் பொருளியல் வளர்ச்சி என்பது வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்தாமல், தொழில்நுட்ப மேம்பாடு, உற்பத்தித்திறன் உயர்வின் மூலமே வர வேண்டும், என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, ஒவ்வொரு சிங்கப்பூரரும் தங்கள் முழுத் திறனையும் உணர்ந்து செயல்படப் போதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று திட்டவட்டமாக சொன்ன பிரதமர், உலகளாவிய வர்த்தகத்திற்குச் சிங்கப்பூர் எப்போதும் திறந்தே இருக்கும் என்றாலும், சிங்கப்பூரர்கள் நேசிக்கும் நாட்டின் தனித்துவமும் அடையாளமும் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.


