தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரச்சினைகளுக்குப் பொறுப்பேற்குமாறு மசெக எம்.பி.க்களிடம் பிரதமர் வோங் வேண்டுகோள்

2 mins read
932075c9-a609-434c-834b-1e438ee739df
பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: சாவ் பாவ்

தாங்கள் முக்கியமானவையாகக் கருதும் நோக்கங்களுக்காகவும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கும் மக்கள் செயல் கட்சி (மசெக) நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்கவேண்டும் என்றும் அவற்றின் தொடர்பான நடவடிக்கைகளை முன்னின்று வழிநடத்தவேண்டும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் வியாழக்கிழமை (மே 29) கூறினார்.

பொதுவாக ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பிறகும் மசெக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ‘கவனமாக நடந்துகொள்வதற்கான விதிமுறைகள்’ (rules of prudence) கடிதம் வெளியிடப்பட்டது. அந்த ஆவணம் எட்டு பக்கங்களைக் கொண்டுள்ளது.

நோக்கங்களை எடுத்துரைத்தல் என்பது அவற்றுக்காகக் குரல் கொடுப்பதையும் தாண்டியது என்றார் திரு வோங். குடியிருப்பாளர்களின் கனவுகள், தேசிய அளவிலான அக்கறைகள் ஆகிய இரு அம்சங்கள் தொடர்பிலான நோக்கங்களுக்கும் இது பொருந்தும் என்று திரு வோங் குறிப்பிட்டார்.

“கொள்கைகளை மேம்படுத்துவதற்கு நீங்கள் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயவேண்டும், சம்பந்தப்பட்ட பல தரப்பினரைத் தொடர்புகொள்ளவேண்டும், விட்டுக்கொடுக்கப்படும் அம்சங்களைப் புரிந்துகொள்ளவேண்டும், சரியான விளக்கங்களை முன்வைக்கவேண்டும்,” என்றும் ஆளும் மசெகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் பிரதமர் வோங் கடிதத்தில் விவரித்துள்ளார்.

இதுவே பிரதமர் வோங் வெளியிட்டுள்ள முதல் ‘கவனமாக நடந்துகொள்வதற்கான விதிமுறைகள்’ கடிதமாகும். அண்மையில் நடந்த தேர்தல் அவர் பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு நடந்த முதல் பொதுத் தேர்தல். அதில் 97 இடங்களில் 87ல் மசெக வெற்றிபெற்றது.

திரு வோங் வெளியிட்டுள்ள கடிதமும் முந்தைய பிரதமர் லீ சியன் லூங் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு வெளியிட்ட கடிதமும் அதிகம் மாறுபடவில்லை. நேர்மை, ஊழலுக்கு இரையாகாமல் இருப்பது போன்றவையே மசெகவின் அடித்தளம் என்று இருவரின் கடிதங்களும் வலியுறுத்துகின்றன.

நாடாளுமன்றம் தொடங்கும் நிகழ்வில் அதிபர் உரை குறித்த விவாதம் நடைபெறும். அதில் நாடாளுமன்றத்தில் முதன்முறையாகப் பேசும் வாய்ப்பு மசெக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் என்றார் பிரதமர் வோங்.

நாடாளுமன்றம் எப்போது தொடங்கும் என்பது குறித்த விவரத்தை அவர் வெளியிடவில்லை.

வரவு செலவுத் திட்டம் குறித்த விவாதம், அந்தந்த அமைச்சுகளுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான விவாதங்கள் ஆகியவற்றிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பேச வாய்ப்பு கிடைக்கும்.

குறிப்புச் சொற்கள்