காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் வோங் சமோவா பயணம்

3 mins read
104ee54f-f52c-4ebc-972a-5047d186d4c1
காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு (CHOGM) முன்னதாக சமோவாவின் தலைநகரான அபியாவில் ஒரு பயணக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த சிறிய பசிபிக் தீவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் தங்குவதற்காக இக்கப்பலும் பயன்படுத்தப்படும். - படம்: ஏஎஃப்பி

பிரதமர் லாரன்ஸ் வோங் காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள, அக்டோபர் 23 முதல் அக்டோபர் 26 வரை சமோவா, அபியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமராகப் பதவியேற்ற பின்னர் திரு வோங் பங்கேற்கும் முதல் காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டம் இது.

நிதி அமைச்சருமான பிரதமர் வோங், மற்ற தலைவர்களுடன் பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பசிபிக் வட்டாரத்தின் ஒரு தீவு இந்தக் கூட்டத்தை நடத்துவது இதுவே முதல்முறையாகும். மீள்திறன் கொண்ட பொதுவான எதிர்காலம் என்ற கருப்பொருளில் இந்த ஆண்டின் மாநாடு நடக்கிறது.

காமன்வெல்த் நாடுகளின் முன்னேற்றங்களை மறுஆய்வு செய்வதுடன் பருவநிலை மீள்திறன் கொண்ட பொருளியல்களை உருவாக்குதல் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் விவாதிப்பார்கள் என்று பிரதமர் அலுவலகம் புதன்கிழமை (அக்டோபர் 23) வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

பிரதமர் வோங், மற்ற தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார்.

காமன்வெல்த் 56 உறுப்பு நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பாகும். அவற்றில் 33 சிறிய நாடுகள். Chogm என்பது உறுப்பு நாடுகளின் “அரசாங்கத் தலைவர்கள் அல்லது அரசுத் தலைவர்கள்” கலந்துகொள்ளும் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உச்சநிலைக் கூட்டமாகும். இந்த ஆண்டுக் கூட்டத்தில் மன்னர் சார்லஸ் பங்கேற்கிறார்.

பிரதமர் வோங்குடன் அவரது மனைவியும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் செல்வார்கள்.

சிறிய நாடுகளுக்கான காமன்வெல்த் அமைச்சர்நிலைக் கூட்டம், காமன்வெல்த் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டங்களில் பங்கேற்ற டாக்டர் பாலகிருஷ்ணன் அக்டோபர் 23, 24 தேதிகளில் அபியாவில் இருப்பார் என்று வெளியுறவு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

மற்ற வெளியுறவு அமைச்சர்களுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்துவார்.

காமன்வெல்த் அமைச்சர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சர்கள் சிறிய நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள், மீள்திறனை உருவாக்குவதற்கான உறுதியான வழிகள், பருவநிலை மாற்றம் போன்ற பாதிப்புகளைக் கையாள்வது குறித்து விவாதித்தனர்.

பசுமைத் திட்டங்களுக்கு மாறிவரும் வளர்ந்து வரும் அனைத்து சிறிய தீவுகளுடனும் மாநிலங்களுடனும் ஒரு பொது இலக்கை உருவாக்க சிங்கப்பூர் விரும்புவதாக டாக்டர் பாலகிருஷ்ணன் அக்கூட்டத்தில் கூறினார். சிங்கப்பூர் பங்காளியாகச் செயல்படக்கூடிய மூன்று வழிகளை அவர் பட்டியலிட்டார்.

முதலில், விரிவான, தரவுகளைக் கொண்ட பருவநிலை கணிப்புகளையும், அத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதற்கான முறைகளையும் அடிப்படை தொழில்நுட்பத்தையும் பகிர்ந்து கொள்வது.

இரண்டாவதாக, பசுமை எரிசக்தி உள்கட்டமைப்புபோன்ற மூலதனம் அதிகம் தேவைப்படும் திட்டங்களுக்கு தேவையான தொகையைத் திரட்டுவதற்காக, மேம்பாட்டையும் கொடைகளையும் தனியார் மூலதனத்துடன் இணைக்கும் கலப்பு நிதித் தளத்தை உருவாக்குவது. மறுபயனீட்டு எரிசக்தி, கரிம வெளியீட்டைக் குறைக்கும் திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஆசியாவின் மாற்றத்துக்கான பங்காளித்துவத்துக்கு நிதியளிப்பது (Financing Asia’s Transition Partnership) என்ற நிதித் தளத்தை சிங்கப்பூர் தொடங்கியது என்று அவர் கூறினார்.

மூன்றாவதாக, சிங்கப்பூர் ஒத்துழைப்புத் திட்டம் போன்ற தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் பருவநிலை மாற்றம் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மற்ற நாடுகள் தங்கள் நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்ள உதவுவதில் சிங்கப்பூர் மகிழ்ச்சியடைகிறது என்று டாக்டர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

காமன்வெல்த் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர்கள் காமன்வெல்த் நாடுகளின் மேம்பாடுகளை ஆய்வு செய்வதுடன், நீடித்த நிலைத்தன்மையான வளர்ச்சி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உறுப்பு நாடுகளுக்கு பொதுவான நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்கள் என்றும் வெளியுறவு அமைச்சு கூறியது.

பிரதமர் வோங் வெளிநாடு சென்றிருக்கும் காலத்தில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியாட் தற்காலிகப் பிரதமராகப் பணியாற்றுவார்.

குறிப்புச் சொற்கள்