தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய சேவை நாட்டின் பாதுகாப்புக்கான முதுகெலும்பு: பிரதமர் வோங்

2 mins read
f999e764-b687-4b4e-983d-ec824e0b7eb1
பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூர் ஆயுதப்படையின் போர்க்காலப் படைவீரர்களுடன் இணைந்து அடிப்படை ராணுவப் பயிற்சி நிலையத்தில் 1.8 கி.மீ. ஓட்டத்தில் பங்கேற்றார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

ஆபத்தும் பிரச்சினைகளும் பெருகிவரும் உலகில் வலுவான, ஆற்றல்மிக்க சிங்கப்பூர் ஆயுதப்படை, நாட்டின் ஆக முக்கியமான காப்புறுதியாக விளங்குகிறது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) தெக்­கோங் தீவில் உள்ள சிங்கப்பூர் ஆயுதப்படையின் அடிப்படை ராணுவப் பயிற்சி நிலையத்திற்கு (பிஎம்டிசி) வருகை புரிந்த அவர், தேசிய சேவையின் ‌முக்கியத்துவம் குறித்து ஏறக்குறைய 420 தேசிய சேவையாளர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகளிடம் பேசினார்.

பிரதமர் வோங் 2011ல் தற்காப்பு, கல்வி துணை அமைச்சராக இருந்தபோது பிஎம்டிசிக்‌கு வருகை அளித்திருந்தார். அவர் பிரதமர் பொறுப்பேற்ற பிறகு, பிஎம்டிசிக்கு வருகை தருவது இதுவே முதன்முறை.

அவருடன் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, ராணுவத் தலைவர் மேஜர்-ஜெனரல் டேவிட் நியோ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

24 வீரர்களைக்‌ கொண்ட மரியாதை காவல் அணியின் சடங்குபூர்வ அணிவகுப்பைப் பார்வையிட்ட பிரதமர் வோங், தேசிய சேவையாளர்களுடன் இணைந்து பிஎம்டிசியில் 1.8 கி.மீ. ஓட்டத்தில் பங்கேற்றார்.

அதுமட்டுமல்லாமல், உடலை வலிமைப்படுத்தும் பயிற்சியிலும் எஸ்ஏஆர் 21 வகை துப்பாக்கியைக்‌ கையாளும் பயிற்சியிலும் அவர் பங்கேற்றார்.

“சிங்கப்பூரின் ஒவ்வொரு தலைமுறையினரும் தேசிய சேவை ஆற்றியுள்ளனர். இப்போது இது உங்கள் முறை,” என்று தேசிய சேவையாளர்களிடம் பிரதமர் வோங் சொன்னார்.

நாட்டிற்கு சேவையாற்ற முன்வந்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் வோங், உடல்நலம் அடிப்படையில் மட்டுமல்லாமல் ஒழுக்கம், மீள்திறன், எதிர்காலச் சவால்களை எதிர்கொள்வதற்கான மனஉறுதியையும் வளர்க்க அவர்கள் மேற்கொண்டுவரும் பயிற்சி வழிவகுக்கும் என்றார்.

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு 1991ல் பிஎம்டிசியில் தாமும் தேசிய சேவை ஆற்றியதை நினைவுகூர்ந்த அவர், அக்காலத்துடன் ஒப்பிடுகையில் இக்காலத்தின் தேசிய சேவையில் மாற்றங்கள் இருந்தாலும் போர்க்காலப் படைவீரர்களின் பயிற்சித் தரத்தில் எந்த மாற்றமுமில்லை எனக் கூறினார்.

அவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளின் ஆக்ககரமான தாக்கம், அவர்கள் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று பிரதமர் வோங் சொன்னார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலத்திற்கேற்ப மாறிவரும் ராணுவப் பயிற்சியின் தன்மையை எடுத்துரைத்து, புதிய வழிமுறைகள், தொழில்நுட்பங்கள், தீர்வுகள் ஆகியவையும் சிறந்த விளைவுகளுக்குத் துணைபுரிவதாகக் கூறினார்.

உலகெங்கும் பல இடங்களில் எதிர்பாராமல் திடீரென்று ஆயுத மோதல்கள் ஏற்படுவதைச் சுட்டிய பிரதமர் வோங், “பிரச்சினைக்குரிய இடங்களில் சிங்கப்பூர் அமைந்திருக்கவில்லை என்றாலும், மனத்தளவில் நாம் எப்போதும் எதற்கும் தயார்நிலையில் இருக்க வேண்டும்,” என்றார்.

“தேசிய சேவை நமது நாட்டின் பாதுகாப்புக்கான முதுகெலும்பு. அதற்கான வலுவான ஆதரவைத் தக்கவைத்துக்கொள்வது முக்கியம். ஏனென்றால், தேசிய சேவை என்பது நமது இல்லங்கள், அன்புக்குரியவர்கள், சொந்த வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்குரியது,” என்றார் பிரதமர் வோங்.

அரசாங்கம் ஆயுதப்படையிலும் உள்துறைக் குழுவிலும் தொடர்ந்து அதிக முதலீடு செய்யும் என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்