சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் தொடர்ச்சியாகக் குறைந்து வரும் சூழலில், நாட்டின் வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு, பொருளியல் நிலைத்தன்மையை உறுதி செய்ய புதிய குடியேறிகளின் பங்களிப்பு இன்றியமையாதது என்று கூறியுள்ளார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
பிரதமராக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) மூன்றாவது முறையாக தேசிய தினப் பேரணி உரையாற்றிய திரு வோங், ‘‘மாற்றங்கள் நிறைந்த உலகம்; மேலும் வலிமையான சிங்கப்பூர்’ எனும் கருப்பொருளில் சிங்கப்பூருக்கான எதிர்கால இலக்குகளைப் பகிர்ந்தார்.
அவ்வகையில், துரிதமாக மாறிவரும் உலகில் சிங்கப்பூரும் அதனுடன் சேர்ந்து மாறவேண்டும் என்றும் அடுத்ததாக, சிங்கப்பூர் ஒருங்கிணைப்பைப் பேணிக்காக்கும் அதேவேளை, திறந்த மனப்பான்மையுடனும் தொடர்பில் உள்ள நிலையிலும் இருக்க வேண்டும் என்று கூறினார்.
குறிப்பாக, வெறும் குழந்தைப் பிறப்புகளை மட்டுமே நம்பியிருந்தால் சிங்கப்பூரின் குடிமக்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, மூத்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாகச் சுட்டிய பிரதமர், புதிய குடியேறிகளை வரவேற்பதே இதற்கான சிறந்த தீர்வாக அமைவதாகவும் சொன்னார்.
குடியேறிகளால் உருவான நாடு சிங்கப்பூர்
சிங்கப்பூர் என்பது எப்போதுமே குடியேறிகளால் செதுக்கப்பட்ட ஒரு நாடாகும் என்று குறிப்பிட்ட பிரதமர். வரலாற்று ரீதியாக இந்தியா, மலாய், சீனா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த மக்கள் நாட்டின் வளர்ச்சிக்குக் அடித்தளமிட்டதை உரையின்போது நினைவுகூர்ந்தார்.
அவ்வாறு வந்த பிற நாட்டு மக்கள் தங்களின் மொழி, பண்பாடுத் திறன்களுடன் சிங்கப்பூருக்கு வந்து பிழைப்பைத் தேடி, இறுதியில் சிங்கப்பூரையே தங்களின் சொந்த இல்லமாக மாற்றி அமைத்ததையும் விவரித்தார் திரு வோங்.
புதிய தலைமுறையின் அர்ப்பணிப்பு
இன்றைய சூழலிலும் புதிய குடியேறிகள் சிங்கப்பூரின் வளர்ச்சியில் முக்கிய அங்கம் வகிப்பதாக கூறிய திரு வோங், ‘‘மூன்று திருமணங்களில் ஒன்று, சிங்கப்பூர் குடிமகனுக்கும் வெளிநாட்டவருக்கும் இடையே நடைபெறுகிறது’’, என்றார்.
‘‘அவ்வகையில் இது புதிய பண்பாட்டுப் பரிமாணங்களைத் தருகிறது. அதேபோல், சிங்கப்பூர் நாடும் திறன்களை நல்கும் இவர்கள், தொழில்துறையை வளர்ப்பதுடன், அவர்களின் அடுத்த தலைமுறையினர் உள்ளூர் பள்ளிகளில் பயின்று தேசிய சேவையிலும் பங்கேற்கின்றனர்,’’ என்ற வோங்கின் உரையில் புதிய குடிமக்கள் குறித்த உதாரணங்களும் இடம்பிடித்தன.
‘‘நமது இளையர்கள் ஒன்றாகத் தேசிய சேவையாற்றி வருகிறார்கள். அவ்வகையில் தேசிய சேவைக்கு சேர்க்கப்படும் ஒவ்வொரு பிரிவிலும், பல நிரந்தரவாசிகளையும் குடியுரிமை பெற்ற குடிமக்களையும் நாம் காண்கிறோம். அவர்கள் பல்வேறு பின்புலங்களில் இருந்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் அந்த சீருடையை அணிந்தவுடன், அந்த வேறுபாடுகள் பெரிய விஷயமே இல்லை,’’ என்றார் பிரதமர்.
தொடர்ந்து பேசிய திரு வோங், அண்மையில் குடியுரிமை பெற்று, சமூகச் சேவைகளிலும் சிங்கப்பூர் ஆயுதப்படையின் தொண்டூழியப் படைகளிலும் தங்களை இணைத்துக் கொண்ட ஜார்ஜ்-சிகா தம்பதியினர் இதற்குச் சிறந்த உதாரணமாகக் குறிப்பிட்டார். மேலும், சிறந்த தேசிய சேவை வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யஷ்வந்த் நாக சாய் போன்ற இளையர்கள், எல்லைகளைக் கடந்து நாட்டின் பாதுகாப்பிற்குத் தோள்கொடுக்கின்றனர்,’’ என்றார்.
அர்ப்பணிப்பே முகவரி
சிங்கப்பூரர் என்ற அடையாளம் ஒருவர் எந்த நாட்டில் பிறந்தார் என்பதிலோ அல்லது அவரின் பூர்வீகத்திலோ இல்லை. அது இந்த தேசத்திற்கு வழங்கும் அர்ப்பணிப்பிலும், சிங்கப்பூரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு முதலிடம் தருவதிலும் தான் அடங்கியுள்ளது என்பதை மக்களுக்கு கூறிக்கொண்ட திரு வோங், திறந்த மனப்பான்மையுடன் புதியவர்களை இணைத்துக் கொண்டு பயணிப்பதே சிங்கப்பூரின் எதிர்காலப் பலமாகத் திகழும் என்றார்.


