தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சிங்கப்பூருக்கான தொலைநோக்குத் திட்டங்களைக் கண்முன்வைத்த தேசிய தினப் பேரணி உரை

நம்பிக்கையோடு வழிநடத்துவோம்: பிரதமர் வோங்

4 mins read
fbaa2bf5-d8b6-425c-9877-ad748fa1fb27
அமைதியாகவும் உறுதியாகவும் தமது முதலாவது தேசிய தினப் பேரணி உரையை ஆற்றிய பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் தற்போதைய முக்கிய கவலைகளுக்குத் தீர்வையும் எதிர்காலத்துக்கான திட்டங்களையும் தமது தேசிய தினப் பேரணி உரையின்போது பிரதமர் லாரன்ஸ் வோங் முன்வைத்துள்ளார்.

கூடுதலான மானியங்களையும் சலுகைகளையும் அறிவித்து, நான்காம் தலைமுறைத் தலைமைத்துவமும் முன்னைய தலைமுறைகளைப்போலவே சிங்கப்பூரை நம்பிக்கையோடு வழிநடத்தும் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

“அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைக்கான காரணங்கள் சிக்கலானவை. விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள், உலகெங்கிலும் ஏற்பட்டுள்ள வட்டார மோதல்கள் போன்ற வெளிப்புற காரணிகளைச் சிங்கப்பூரால் கட்டுப்படுத்த முடியாது,” என்ற பிரதமர், அரசாங்கம் தொடர்ந்து மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் என்பதை மீண்டும் மறுவுறுதிப்படுத்தியுள்ளார்.

அங் மோ கியோ தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 18) தமது முதல் தேசிய தினப் பேரணி உரையை ஆற்றியபோது திரு வோங் இதனைத் தெரிவித்தார்.

சிவப்புச் சட்டையணிந்து புன்னகையுடன் தமது உரையை உறுதியாகவும் ஆணித்தரமாகவும் அவர் நிகழ்த்தினார்.

முதன்முதலாக தமிழிலும் சில வார்த்தைகள் பேசி, சிங்கப்பூரின் பல இன, மொழி, பண்பாடு தொடர்ந்து கட்டிக்காக்கப்படும் என்று அவர் உறுதி கூறினார்.

நான்காம் தலைமுறைத் தலைமைத்துவம் சிங்கப்பூரின் நீண்டகாலக் கருத்தியலையும் சிறப்புகளையும் கட்டிக்காக்கும். இருமொழிக் கொள்கை, தகுதிக்கும் திறனுக்கும் முக்கியத்துவம் உள்ளிட்ட அடிப்படைக் கொள்கைகளில் உறுதியாக நிற்கும். அதேநேரத்தில், தேவைப்படும் இடங்களில் நெகிழ்த்திக்கொள்ளும் என்பதைப் பிரதமர் தமது அறிவிப்புகளின் வழியாக உணர்த்தியுள்ளார்.

வேலை, படிப்பு, பிறப்பு விகிதம் போன்றவற்றைச் சமாளிக்க பல திட்டங்களை அவர் முன்வைத்துள்ளார்.

விரைந்து மாறிவரும் தொழில்நுட்ப உலகில், புதிய வேலைகளைத் தேடவும், திறன்களை மேம்படுத்தவும் தொடர்ந்து படிக்கவும் ஏதுவாக ஆதரவு, மானியம், சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

ஏற்கெனவே நடப்பிலுள்ள உதவித் திட்டங்களுடன், வேலை இழக்கும் ஊழியர்கள் புதிய வேலையைத் தேடும் காலத்தில் வாழ்க்கையைச் சமாளிக்க புதிதாக $6,000 வரை நிதியுதவியும் 40 வயதுக்கு மேற்பட்டோர் படிக்க மாதந்தோறும் $3,000 மானியமும் வழங்கப்பட உள்ளன.

திரு வோங்கின் முதலாவது தேசிய தினப் பேரணி உரை, பல வேளைகளிலும் பார்வையாளர்களின் கைதட்டல்களாலும் ஆரவாரத்தாலும் அரங்கத்தை அலங்கரித்தது. அதில், முதன்மையாக அமைந்தது குழந்தைப் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கான பிரதமரின் அறிவிப்பு.

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேலைக்குச் செல்லும் தம்பதியருக்குக் கூடுதலாக 10 வாரங்களுக்கு ஊதியத்துடன் கூடிய பகிர்வு விடுப்பு கிடைக்கும்.

ஏற்கெனவே 20 வாரங்களாக உள்ள ஊதியத்துடன் கூடிய விடுப்பு 30 வாரங்களாக மேம்படுத்தப்படுகிறது. இது 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆறு வார பகிரப்பட்ட விடுப்பில் தொடங்கி, பின்னர் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 10 வாரங்கள் வரை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்.

2024ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நிறுவனத்தின் விருப்ப அடிப்படையிலான கூடுதல் இரண்டு வார தந்தையர் விடுப்பு ஏப்ரல் 2025ஆம் தேதி முதல் கட்டாயமாகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு 1.19 குழந்தையாக இருந்த சிங்கப்பூரின் குழந்தைப் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவாக 2023ஆம் ஆண்டில் 0.97ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஒற்றையரும் தங்கள் பெற்றோரின் வசிப்பிடத்திற்கு அருகே வீடு வாங்குவதற்கான சலுகையையும் வீடுகளை விரைவாகக் கட்டுவதற்கான திட்டங்களையும் திரு வோங் அறிவித்தார்.

மூத்த குடிமக்களின் தேவைகளை அரசாங்கம் தொடர்ந்து கவனித்துக்கொள்ளும் என்ற அவர், முதியோருக்கான வீடமைப்புத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் சொன்னார்.

சிங்கப்பூர் நம்பிக்கையான தலைமைத்துவத்திடம் உள்ளது என்பதை உள்ளூர் மக்களுக்கும் வெளிநாட்டினருக்கும் பிரதமரின் உரை உணர்த்தியது.

கூடுதலாக உரையின் தொடக்கத்தில் ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங்குடன் பணியாற்றியதில் தொடங்கி, மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கின் முதன்மைத் தனிச் செயலாளராக இருந்தது, அவரது வரவுசெலவுத் திட்டங்களில் உதவியதிலிருந்து துணைப் பிரதமராக ஆற்றிய பணிகள் போன்றவை குறித்து நினைவுகூர்ந்த திரு வோங், திட்டமிடுதலில் தமது அனுபவத்தையும் முன்னைய தலைமுறைகளிடமிருந்து பெற்ற பயிற்சியையும் குறிப்பிட்டுப் பேசினார்.

விளையாட்டு, கலைகள் என எந்தத் துறையில் ஆர்வமிருந்தாலும் சிங்கப்பூர் அதற்கான வாய்ப்பை அளிக்கும் என்ற நம்பிக்கையைப் பிரதமர் அளித்தார்.

கல்விக்கான கட்டமைப்புகளை மேம்படுத்துவது, புதிய பல்கலைக்கழக வளாகம், கல்வி கற்க வளாகங்கள் என அவரது உரையில் பல அறிவிப்புகள் இடம்பெற்றன.

கொவிட்-19 பரவல் காலத்தில். சிங்கப்பூரர்கள் ஒருவர்மேல் ஒருவர் அக்கறைகொண்டு, ஒருவருக்கொருவர் உதவி, ஒற்றுமையுடன் ஒரே மக்களாக அதிலிருந்து மீண்டு, முன்னோக்கிச் சென்றதை கண்கலங்கியபடியே அவர் நினைவுகூர்ந்தார்.

ஒவ்வொருவரும் அவரவர்க்கு ஏற்ற, அவரவர் விரும்பிய வழிகளில் சிறந்து விளங்கக்கூடிய தேசமாக சிங்கப்பூரை உருவாக்குவதே இலக்கு என்றார் பிரதமர்.

குறிப்புச் சொற்கள்