பிரதமர் லாரன்ஸ் வோங் தமது முதலாவது தேசிய தினப் பேரணி உரையை ஆகஸ்ட் 18ஆம் தேதி ஆற்றவிருக்கிறார்.
அங் மோ கியோவில் உள்ள ‘ஐடிஇ சென்ட்ரல்’ எனப்படும் தொழில்நுட்பக் கல்விக் கழக மத்திய கல்லூரியில் அவர் உரையாற்றுவார்.
மாலை 6.45 மணிக்குத் தமது உரையைத் தொடங்கும் பிரதமர் வோங், முதலில் மலாய் மொழியில் பேசுவார். பின்னர் மாண்டரின் மொழியிலும் ஆங்கிலத்திலும் அவர் உரை நிகழ்த்துவார் என்று பிரதமர் அலுவலகம் ஆகஸ்ட் 12ஆம் தேதி தெரிவித்தது.
வழக்கமாக தேசிய தினப் பேரணி உரையில், கொள்கை மாற்றங்கள் குறித்துப் பிரதமரின் அறிவிப்புகள் வெளியாகும் என்பதால் இது முக்கிய நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.
பிரதமர் வோங் தமது உரையில் சமூகப் பாதுகாப்பு முறையையை மேம்படுத்துவது பற்றிப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பங்களுக்கான ஆதரவை அதிகரிப்பதும் வேலைவாய்ப்புப் பிரச்சினைகளை எதிர்கொள்வோருக்கு உதவுவதும் அதில் அடங்கும்.
ஆகஸ்ட் 8ஆம் தேதி தமது தேசிய தினச் செய்தியில் பிரதமர் இந்த விவகாரங்கள் பற்றிக் குறிப்பிட்டார். தேசிய தினப் பேரணி உரையில் அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து விரிவாகப் பகிர்ந்துகொள்ளவிருப்பதாகவும் அவர் கூறினார்.
பணவீக்கம் சிங்கப்பூரர்களின் முக்கியக் கவலை என்று தமது உரையில் கூறிய பிரதமர், குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து உதவும் என்றார்.
பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை உள்ளூர் தொலைக்காட்சி ஒளிவழிகளிலும் வானொலி ஒலிவழிகளிலும் நேரடியாக ஒளி, ஒலிபரப்பப்படும்.
தொடர்புடைய செய்திகள்
பிரதமர் வோங்கின் உரை யூடியூப் ஒளிவழியிலும் (https://www.youtube.com/@lawrence_wong) நேரலையாக இடம்பெறும்.
மேலும், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் இணையத் தளம், யூடியூப் தளம் ஆகியவற்றிலும் பேரணி உரையின் நேரலை இடம்பெறும்.
பிரதமரின் தேசிய தினப் பேரணி உரையின் ஒளிப்பதிவை, பிரதமர் அலுவலக யூடியூப் (www.youtube.com/pmosingapore) தளத்திலும் அதன் இணையத் தளத்திலும் (https://www.pmo.gov.sg) ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் காணலாம்.